.
Dramas > Korean Dramas > Secret Garden > episode – 4
இம் ஜாங்-சூ – சண்டைப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளன். கில் ரா-இம் க்கு சீனியர். அவளை ஒரு தலையாகக் காதலிப்பவன்
ஹான் டே-சீயோன் – ஓஸ்கா தனது இசை ஆல்பத்திற்காக தேடும் ஒரு இசை கலைஞன். ஒரு இரவு விடுதியில் அவன் பாடி இசைப்பதை ஓஸ்கா பார்த்திருக்கிறான்.
ஆ-யங் – ரா இம்-ன் நெருங்கிய தோழி. ஆவலுடன் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கியிருக்கிறாள்.
கிம் – ஜோவனின் செயலாளர். ரா இம்-ன் தோழியை ஒரு தலையாக விரும்புகிறான்.
.
சீக்ரெட் கார்டன் எபிசோட் 4 விளக்கம்
.
இங்கு இந்த நாடகத்தின் விளக்கத்தை தமிழில் படித்துவிட்டு netflix ல் இந்த நாடகத்தைப் பார்த்தால் எளிதில் புரியும்.
ஜோவன் தன் மாலில் ரா இம்-ஐக் கண்டு, அவள் வந்த காரணத்தை அறிந்து கொள்கிறான். அவள் இங்கு எந்த பொருளையும் விலை கொடுத்து வாங்க வரவில்லை, குலுக்களிலும் அவள் பெயர் இடம் பெறவில்லை என்பதை தெரிந்து கொண்ட ஜோவன் பரிசு பொருள் என்று ஒரு போன் கால் வந்ததற்காக மட்டும் அவள் இவ்வளவு தூரம் ஒரு அற்பமான பரிசுப் பொருளை இலவசமாக வாங்க வந்திருப்பதை அதனால் நம்பவே முடியவில்லை. [ அவனுக்கு அது அற்பம் தான் என்று ஒரு எண்ணம் ] ஒரு இலவச பொருளை வாங்க வந்த அவளது ஆசை தனக்கு அவமானம் என்பது போலவே அவனுக்கு கேள்வி அவளை நோக்கி இருந்தது. அவளை கோபத்துடனும், அருவறுப்புடனும் நோக்கிய ஜோவன் ஒரு சிறிய பரிச பொருளான வாக்குவம் கிளீனர் [ அவனைப் பொறுத்தவரை ஒரு சின்ன பொருள் ] அவளை இலவசமாக வாங்க செய்வதற்காக முயற்சிகள் செய்யும் ஆள் தான் கிடையாது என்றும், பிளாஸ்டிக் பையை விட மோசமான ஒரு பையை தூக்கி வருவது போதாதென்று இலவசத்திற்காக இவ்வளவு தூரம் வரும் அவளை நேசிக்கும் தான் உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரனாக தான் இருக்க வேண்டும் என்றும் அவளை நோக்கி ஏளனத்துடன் கூறுகிறான்.
கண்களில் கண்ணீர் தழும்ப ரா இம் அவன் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் இருப்பதை உணராமல், ஜோவன் மீண்டும் தான் பேசியதை அழுத்தம் திருத்தமாக மறுபடியும் உரைக்கிறான். குடும்ப பின்னணியும், கல்வியும், எல்லாவற்றிற்கும் மேலாக தன்மானமும் இல்லாத ஒரு பெண்ணைக் காதலித்த அவன் ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறி அவளை கடுமையாக அவமானப்படுத்தி இழிவு படுத்துகிறான். மேலும் அவள் திரைப்படத்தை இங்கே படமாக்க அவன் அனுமதி அளித்ததாகவும், அதனால் எல்லோருடைய கண்களும் தன் மீது இருப்பதாகவும் கூறி தன் வாழ்க்கையிலேயே முதல்முறையாக அவளுக்காக ஒரு விருந்தையும் ஏற்பாடு செய்து அவளுக்கு மரியாதை செய்ததாக கூறுகிறான். ஆனால் தன் மாலில் இலவசமாக கொடுக்கப்படும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அவள் தன் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை தன் ஊழியர்கள் பார்த்தால் தன்னைப் பற்றி என்ன எண்ணுவார்கள் என்றும் அவளிடம் வெறுப்பை கொட்டி கேள்விகள் கேட்கிறான். ரா இம் ஏதோ ஒரு உண்மையை சொல்ல முயற்சிப்பது போல ‘நான்…’ என்று தொடங்கி அவள் உதடுகளை அசைக்கிறாள். ஆனால் பிறகு அந்த வார்த்தைகளை வழங்கி விடுகிறாள். [ இந்த இடத்தில் கிளாரா லேசாக தான் இங்கு வந்த காரணத்தை ‘அது தான் அவள் உண்மையில் ஜோவனை பார்க்கத்தான் வந்தாள்’ என்பதை வெளியிடுகிறாள் என்று நினைக்கிறேன். ஆனால் ஜோவன் முட்டாள் அவனுக்கு இருக்கும் ஆத்திரத்தில் அதை கவனத்தில் கொள்ளவில்லை போல.] அவளிடம் இருந்து ஒரு பெரும் மூச்சு வெளிப் படுகிறது. அதன் பின்னர் ஒரு இயலாமை புன்னகையாக தோன்றுகிறது. அவளின் சிரிப்பை பார்த்து அவன் கோபம் கொண்ட போது, அவனிடம் தன் கண்களில் வெறுமையுடனும் குரலில் உணர்ச்சியும் இன்றி, அவன் சொல்லுவது உண்மைதான் என்றும், தான் இங்கே வந்திருக்கக் கூடாது மன்னித்து விடுங்கள் என்றும் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு, அவன் தன்னைப் பற்றி யோசிக்கும்படி தான் நடந்து கொள்ள தனக்கு அவசியமில்லை என்றும், அதனால் தனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை ஆகையால் தன் பரிசையாவது எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்றும் கூறிவிட்டு, தன் பரிசான அந்த இலவச வாக்குவம் க்ளீனரைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்கிறாள்.
மேலும் தொடர்ந்து அவள் அவனை காயப்படுத்தி விடும் நோக்கத்துடன், தரமற்ற குடும்பத்தைச் சேர்ந்த கல்வியறிவு இல்லாத ஒரு பெண் அதை பயன்படுத்தினால் எதுவும் குறைந்து விடப் போவதில்லை என்று கூறி, அவனுக்கு அவ்வளவு அவமானமாக இருந்தால் அவள் வெறும் விளையாடி விட்டு தூக்கி எறிந்த ஒருத்தி தான் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்ளலாம் என்றும் அவனைப் பார்த்து கோபமாகவும், இயலாமையுடனும் அழுத்தமாக கூறுகிறாள். அவள் கடைசியாக கூறப்போவதை உணர்ந்து போதும் போதும் என்று அவளை தடுக்க தடுக்க வலியுடன் அந்த வார்த்தைகளை கூறி முடிக்கிறாள் ரா இம். அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு தன்னால் அப்படி செய்ய முடியாது என்று என்று கோபத்தில் அவளிடம் வெடித்து, அதற்கான காரணத்தை சொல்வதாக கூறி அவளை அந்த பல்பொருள் அங்காடிக்குள் இருக்கும் ஒரு கடைக்குள் பலவந்தமாக இழுத்துச் செல்கிறான். பிறகு அவள் அப்பொழுது கூறியதற்கு பதிலாக அவள் தன்னுடன் விளையாடும் தகுதி கூட இல்லாத பெண் என்று கோபமாக கத்திக்கொண்டே ஆகிருக்கும் காலணிகளையும் துணிகளையும் தூக்கி அவளின் காலடியில் வீசுகிறான்.
ரா இம் அப்போது கூறிய விளையாடும் பொருள் அந்த வார்த்தை அவனுள் கடும் கோபத்தை கிளப்பி விட, நெருப்பு போன்ற வார்த்தைகளை அள்ளிக்கொட்டி அவளிடம் வெறுப்பை கக்குகிறான் ஜோவன். அவள் அவனிடமிருந்து விடுபட்டு செல்ல முயற்சிக்க, அவள் போவதைக் கையைப் பிடித்து தடுத்துக் கொண்டே கீழே தூக்கி போட்ட துணிகளில் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்து அணியச் சொல்லி கத்துகிறான் அவளை தரதரவென்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு உடைமாற்றும் மறைத்து தள்ளி தானும் நுழைகிறான். பின் அவள் தன்னை விளையாடும் பொருள் என்று சொன்னதால் அவளைப் பிடித்து சுவற்றில் தள்ளி தான் வைத்திருந்த உடையை அவளிடம் நீட்டி அணிந்துகொள்ளக் சொல்கிறான். ரா இம் சுவரில் சாய்ந்தபடி அவனை வெற்றுப் பார்வை பார்த்தவள் அந்த உடையை அணிந்தாலும் அவளைப் போல தகுதியற்ற ஒரு பெண்ணை வைத்து செய்யப்போவது என்ன என்பது போல கேட்கிறாள்.
அவளின் கேள்வியால் வருத்தம் கொண்ட ஜோவன் தான் யார் என்றும், தான் செய்யும் வேலை தன் உயரம் என்ன என்றும் அவள் சிறிது கூட யோசிக்காமல் செயல்படுவது தான் தன்னை மிக அதிகமாக வருத்தப்படுத்துகிறது என்று கசப்புடன் கூறியவன், அங்கே நிற்க முடியாமல் அவளிடமிருந்து விலகிச் சென்றுவிடுகிறான். ஜோவனின் செயல்கள் அவர்களது சமூக அந்தஸ்துகள் எவ்வளவு வேறுபட்டவை என்பதைக் காட்ட, ஆதாரங்களை ரா இம்-ன் காலடியில் வீசியதும், அவளை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஆழமாகப் புண்படுத்தும் விதத்தில் அவளிடம் பேசியதும் அவளைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்துகின்றன. உணர்ச்சியற்ற, உயிரற்ற உருவம் போல அவள் அங்கிருந்து நடக்கத் தொடங்கியபோது, தான் செய்ததை தாங்கிக்கொள்ள முடியாத ஜோவன், தன் மார்பைப் பிடித்துக்கொண்டு வேறொரு இடத்திற்கு ஓடுகிறான்.
[ இந்த நான்காவது அத்தியாயத்தின் முதல் 8 நிமிடங்கள் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளால் நிரம்பியுள்ளன. ‘இது எப்படி நடந்தது?’ என்ற ஆச்சரியம், ‘ஐயோ கடவுளே!’ என்ற அதிர்ச்சி, இறுதியாக, அவன் ஓடிப்போன விதத்தைப் பார்த்து, ‘அவளிடம் எப்படி அவனால் அப்படிப் பேச முடிந்தது?’ என்ற திகைப்பு, அவனது பெருமை மற்றும் சூழ்நிலையைப் பற்றிய புரிதல், ஆனால் அதே சமயம் ‘இலவசமாக ஒரு பொருளை வாங்க வருவது குற்றமா?’ என்ற கோபம் என, இந்த எண்ணங்கள் அனைத்தும் இந்த நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளர்களை முதல் 10 நிமிடங்களுக்கு கட்டிவைத்து விடுகின்றன. ]
ரா இம் ஒருவித மயக்க நிலையில் அங்கிருந்து வெளியேறி, தனது நடிப்புப் பள்ளிக்குச் செல்கிறாள். அவள் மிகவும் வெளிறிப் போயிருந்ததைக் கவனித்த சீனியர் ஜாங் சூ விசாரித்தபோது, அவள் சமீபகாலமாக நிறைய பொய் சொல்வதாகவும், அதனால் அவளது நடிப்புத் திறமை மேம்பட்டிருப்பதாகவும் ஒருவித சோகத்துடன் கேலியாகக் குறிப்பிடுகிறான். ரா இம் அதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறாள். அவளது அடுத்த செயல், ‘தனது விரக்தியைப் போக்க தீவிரமான உடல் பயிற்சிதான் ஒரே வழி’ என்று அவள் முடிவு செய்திருப்பதை உணர்த்தியது. உண்மையில், கார் சாகசப் பயிற்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது தன்னை மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டு, தனது மன வலியைத் தணித்துக்கொள்ள அவள் முயற்சிக்கிறாள்.
ரா இம் அந்த நிலையில் இருந்தபோது, ஜோவன் தனது காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். வழக்கம் போல், அவன் நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதையில் நுழைந்தபோது, ஏற்கெனவே மன உளைச்சலில் இருந்ததால், அந்த குறுகிய பாதை அவனுக்கு எளிதில் மூச்சுத்திணறலையும் மங்கலான பார்வையையும் ஏற்படுத்தி, சில நிமிடங்களுக்கு அவனைத் திக்குமுக்காடச் செய்கிறது. தன்னைச் சுதாரித்துக்கொண்ட அவன், சுரங்கப்பாதையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தான், தனது காரை ஓரமாக நிறுத்தி, நடுங்கிய கைகளுடன் தனது தொலைபேசியின் ஸ்பீட் டயலில் உள்ள எண் 1-ஐ அழுத்துகிறான். அந்த எண் ஜோவனுக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவரின் தொலைபேசி எண். அதை அவன் அவசர எண்ணாக வைத்திருப்பதைப் பார்த்தால் அவனுக்கு உடல் மற்றும் மனப்பிரச்சனை இருப்பதும் அதனாலேயே ரா இம்-மிடம் அவ்வாறு பேசி, அந்தச் சிறிய உடை மாற்றும் அறையில் வியர்த்து, மூச்சுத்திணறலுடன் அவன் இருந்ததற்கு காரணம் போல தோன்றுகிறது. ஜோவனின் வீட்டில், அவனது தோழி அவனைப் பரிசோதித்து, முன்பை விட இப்போது மன அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக அவனிடம் கூறிவிட்டு அதற்கு காரணம் கேட்கிறாள். அதை பற்றி ஏதும் கூறாமல் அதற்கு பதிலாக காதல் நோயிக்கான அறிகுறிகள் பற்றி பதில் கேள்வி கேட்கிறான்.
ஜோவன் கையில் ஒரு பூவோடு தன் தோட்டத்தில் அமர்ந்திருக்கிறான். அதில் உள்ள ஒவ்வொரு இதழாக பறித்துத் தரையில் போடுகிறான். ஒவ்வொரு இதழை பறித்து போடும் போதும், அவன் உதடுகள் ‘அவள் என்னை திட்டுகிறாள்’ ‘அவள் என்னை திட்டவில்லை’ ‘அவளை நீ திட்டுகிறாள்’ ‘அவளை என்னை திட்டவில்லை’ என்று சொல்லிக் கொண்டே பறித்து போடுகிறான். கடைசி இதழைப் பறித்து போடும்போது அது ‘அவள் என்னை திட்டுகிறாள்’ என்பதில் முடிகிறது. இது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அவள் எப்படி அவனைத் திட்டலாம்? ‘தவறு செய்தது அவள்தான்’ என்று நினைத்து, தன்னைத் திட்டியதற்காக அவள் மீது கோபப்படுகிறான். அவன் கோபமாக எழுந்து அங்கிருந்து நடந்து செல்கிறான். அவள் மீது ஏற்கனவே இருக்கும் கோபத்துடன், ‘இந்த பூவின் கோபமும் அவளால்’ என்று ஆகி விட்டது போல….
[ நாடகத்தைப் பார்க்கும் நமக்கு இது வெகு ரசனையான ஒரு சீன். உண்மையில் அவன் ‘அவள் என்னை திட்டுகிறாள், திட்டவில்லை….. திட்டுகிறாள், திட்டவில்லை…’ என்று ஒவ்வொரு இதழாக பறித்துப் போடும் பொழுதும், அவனது அடி மனது ஆசை ‘அவள் என்னை நேசிக்கிறாள், இல்லை நேசிக்கவில்லை….. அவள் என்னை நேசிக்கிறாள், இல்லை நேசிக்கவில்லை….’ என்று அவன் கூறி ஒவ்வொரு இதழாக பறித்துப் போடுவது போலத் தான் எனக்குத் தோன்றுகிறது. ஹாஹாஹா….இவ்வாறு சொல்லி ஒரு ஆண் செய்வது ‘எவ்வளவு ரசிக்கத்தக்க செயலாக இருக்கிறது. ‘நம்மையும் அறியாமல் நம் முகத்தில் புன்னகை பூக்க செய்கிறது’ இந்த மிக அழகான காட்சி ]
ஆனால் அந்த காட்சி அத்துடன் முடிந்துவிடவில்லை; அவன் சென்ற பிறகும் அது தொடர்கிறது. அவன் அங்கே ஒரு பெரிய பூ இதழ்களின் குவியலை விட்டுச் சென்றிருக்கிறான். அங்கே, சிறிய மின்மினிப் பூச்சிகள் அந்தப் பூக்களைச் சுற்றிப் பறந்து, தங்கள் மாயாஜாலத்தைக் காட்டுகின்றன. அந்தப் பூக்களின் இதழ்களை எல்லாம் இழந்த மொட்டு பகுதியில் இருந்து, ஒருவித ஒளியுடன் கூடிய பிரகாசத்துடன் ஒரு கடைசி இதழ் மட்டும் மாயாஜாலமாக மீண்டும் வளர்கிறது.
ஒருபுறம், ஓஸ்காவும் அவனது மேலாளரும் காணாமல் போன கிளப் பாடகன் ஹான் டே-சீயோன்-ஐத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், பல்பொருள் அங்காடியில் ஜோவனின் தனிப்பட்ட உதவியாளருக்கும் ரா இம்-ன் தோழிக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு நிகழ்கிறது. அவர்கள் ஜோவன் மற்றும் ரா இம்-ன் உறவைப் பற்றியும், மாலில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும்போதே, தங்களின் தனிப்பட்ட எண்ணங்களையும் கூச்சத்துடன் பரிமாறிக்கொள்கிறார்கள்.
இங்கு ஜோவன் மறுநாள் காலையில் கண்விழித்த போது சியோல் பக்கம் இருந்து அவர்கள் குடும்பத்தினரால் ஜோவனுக்கு ஒரு பரிசு அனுப்பப்படுகிறது. அவன் வெளியே சென்று பார்த்தபோது, அங்கு ஒரு மான்களின் கூட்டம் இருப்பதைப் பார்க்கிறான். அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட ஜோவன் இவையெல்லாம் தான் சாப்பிடுவதற்காக அனுப்பப்பட்டு இருக்கிறதா என்று கேட்டு அவனது உதவியாளர் மட்டுமல்ல அருகில் இருந்து அந்த பரிசை கொண்டு வந்து சேர்த்த உதவியாளனுக்கும் அதிர்ச்சி அளிக்கிறான். ஆனால் அது பற்றி எல்லாம் ஜோவன் யோசிக்காமல் அந்த மான் கூட்டத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி சென்று விடுகிறான்.
ஜோவனின் குடும்பத்தினர் எல்லோரும் மாதத்திற்கு ஒருமுறை கட்டாயமாக ஒரு இரவு விருந்தில் கலந்து கொள்வார்கள். இந்த முறை, அந்த மாதாந்திர குடும்ப விருந்திற்கு அவனுக்கும் அழைப்பு வருகிறது. அதற்காக அவன் தன் தாத்தாவின் மாளிகைக்குச் செல்கிறான். அவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மறைமுகமான பேச்சுகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறார்கள். தாத்தாவின் இரண்டாவது திருமணத்தால் அவர்களுக்குள் ஒரு சிக்கலான உறவு இருப்பது போல் தெரிகிறது. இது ஜோவனுக்கும் அவனது தாய்க்கும் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. டிபார்ட்மெண்ட் மால்-ஐப் பற்றி பேச்சு எழுதுகிறது. ‘ஜோவனின் உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாக மால் சரியாக நிர்வகிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டு, திரு. பார்க் என்பவருடன் சேர்ந்து அதை மேற்பார்வையிடுமாறு ஜோவனுக்கு அறிவுறுத்துகிறார்கள். சிக்கல் என்னவென்றால், இந்த திரு. பார்க் தாத்தாவின் இரண்டாவது மனைவியின் உறவினர். திரு. பார்க் ஜோவனைத் தனியாகச் சந்திக்கும்போது தன் சகோதரியை வெறுக்காதே என்றும், அவனின் ‘சண்டைப் பெண்’ ரா இம்-ஐ விட சிறந்தவள் என்றும் கூறி, ஜோவனின் கோவத்தைத் தூண்டிவிடுகிறான்.
ஹான் டே-சீயோன் என்ற கிளப் மேடைப் பாடகனைக் கண்டுபிடிப்பதற்காக ஓஸ்கா ஜேஜூ தீவுக்குப் பயணிக்கிறான். அங்கு அவனைச் சந்திக்கும்போது, அவன் தனக்கு இப்போது ஓஸ்கா-வைத் தெரியும் என்று ஒப்புக்கொள்கிறான். அவன் ஓஸ்கா-விடம் அவனின் இசை மற்றும் சில இரகசிய நிகழ்வுகளைப் பற்றியம் கூற, ஓஸ்கா வியக்கிறான். அவனைச் சம்மதிக்க வைக்க ஓஸ்கா எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும், சீயோன் அவனுடன் இணைந்து பணியாற்ற மறுத்துவிடுகிறான். தனது புகழுக்கு மத்தியிலும் தன்னை இவ்வளவு அலட்சியமாக நடத்திய ஒருவரை இதற்கு முன் சந்தித்தே இராத ஓஸ்கா, செய்வதறியாது திகைத்து அங்கேயே நின்றுவிடுகிறான்.
ஓஸ்கா தாய்லாந்தில் நடக்கவிருந்த தனது மியூசிக் வீடியோ படப்பிடிப்பிலிருந்து திடீரென்று விலகி ஜேஜூ தீவுக்கு சென்று விடுகிறான். இது அந்த மியூசிக் வீடியோவின் இயக்குனருக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஏற்கனவே அவர் சியோல் கொடுத்த பெரும் பணத்திற்காக, தான் அந்த இசை ஆல்பத்தை இயக்குவதில் இருந்து விலகிக் கொண்டு, அதனை ஓஸ்கா-வின் மேனேஜருக்கும் தெரியப்படுத்தி விடுகிறான். இது அந்த மேனேஜருக்கு சிக்கலை ஏற்படுத்த, வேறு வழியின்றி சியோல்-ஐ மியூசிக் வீடியோ இயக்குமாறு அழைக்கிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஓஸ்கா ஜேஜூ தீவுக்குச் சென்றிருப்பது தெரியவருகிறது. ஏனென்று அவள் கேட்க, அதற்கு மேனேஜர் ‘அவன் புதிய திறமையாளனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள எண்ணுகிறான். ஆனால் அந்த கிளப் ஆடவன் மறுத்துவிட்டதால் அவனைத் தேடி அங்கு சென்று இருப்பதாக’ கூறுகிறான். ‘தன்னால் அவர்களை இணைத்து இந்த மியூசிக் ஆல்பத்தை இயக்க முடியும்’ என்று கூறி அந்த வாய்ப்பை தான் எடுத்துக் கொள்கிறாள் சியோல். அதன் பின்னர் நேரே ஜாங் சூ-ன் ஆக்சன் பள்ளிக்குச் சென்று ரா இம்-ன் சீனியரிடம் அந்த ஆல்பத்திற்கு பணிபுரிய ஒப்பந்தம் செய்து கொள்கிறாள்.
ஜோவனுடன் தனக்கு நடந்த நிகழ்வைப் பற்றி ரா இம் மனக்குழப்பத்துடனும், வருத்தத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவளுடைய தோழி ரா இம் அங்கு விட்டு விட்டு வந்த வாக்குவம் கிளீனருடன் வந்து, ரா இம் அதை அங்கே விட்டுச் சென்றதாகவும், அதை எடுத்து அவளிடம் திருப்பிக் கொடுக்குமாறு முதலாளி தன்னிடம் கூறியதாகவும் அவள் விளக்கம் சொல்ல, கோபம் கொண்ட ரா இம் தொலைபேசியில் ஜோவனுக்கு அழைத்து அது பற்றிக் கூறி அவனையே வந்து எடுத்துப்போகச் சொல்கிறாள். அங்கு கலைப் பொருட்களை வாங்கும் வேலையை செய்து கொண்டு, சோகமாக இருந்த ஜோவன் முகம் தொலைபேசியில் அவள் பெயர் கண்டு சட்டென்று மகிழ்ச்சியாக மாறுகிறது. ஆனாலும் அந்த மகிழ்ச்சியை அவளுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டு தன்னை வரச்சொல்ல அவள் யாரென்று கேட்டுவிட்டு, அதை திருப்பி அனுப்பவோ அல்லது தூக்கி எறியவோ செய்யச் சொல்லிவிடுகிறான்.
ரா இம்-ஐ அலட்சியம் செய்தாலும், இப்போது தெளிவாக ஆர்வத்துடன் கலைப் பொருட்களை வாங்கும் வேலையை தொடர்கிறான். அந்த கலைப் பொருட்களான ஓவியங்களை பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது, அவற்றில் ஒன்றில் வரையப்பட்டு இருந்த வீட்டில் சிறிது நேரத்திற்கு முன்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததாக அவன் கூறியதை கேட்டு எல்லோரும் அவனை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ‘இருண்ட வீடாக வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து விலக்குகள் எப்படி எரியும்?’ என்று அவர்கள் அவனை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சென்ற பின்பு அந்த குறிப்பிட்ட இருண்ட வீடு கொண்ட ஓவியத்தில் உள்ள வீடு விளக்குகளால் வெளிச்சமாகிறது.
[ முன்பு ஒரு மாயாஜால காட்சி மலர் இதலினால் உண்டானது போல, இப்பொழுது இந்த இருண்ட வீட்டினால் அதே மாயாஜால காட்சி காட்டப்படுகிறது.]
இங்கு ரா இம்ம் தன் வீட்டில் அந்த வாக்குவம் கிளீனரை ஜோவனிடம் திரும்ப அளித்து விடும் உறுதியுடன் புறப்பட்டு கொண்டிருக்கிறாள். அதைக் கண்ட அவளின் தோழி ஜோவன் டிபார்ட்மெண்ட் மாலில் இல்லை என்று கூற, அதற்கு அவள் உடனே தனது ஆக்சன் பள்ளிக்கு அழைத்து தனது தோழனிடம் ஜோவன் அங்கு வந்தபோது அளித்திருந்த வீட்டின் முகவரியை அனுப்புமாறு கேட்கிறாள். அந்தப் பள்ளியில் அந்த தோழன் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சீனியர் ஜாங் சூ-க்கு இது வருத்தம் கொடுக்கிறது.
ஜோவனின் கண்ணாடி மாளிகையில் ஜோவன் மட்டும் தனியாக அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘உலக மக்களில் பாதி பேர் ஏன் பசியால் வாடுகிறார்கள்?’. [ ஒருவேளை இது ரா இம்-ஐப் பற்றி புரிந்து கொள்வதற்கோ????] இங்கு ரா இம் அவனைச் சந்திப்பதற்கு தன் மோட்டார் சைக்கிளில் வருகிறாள். அங்கு மிகப் பெரிய பரந்த இடம் தென்படுகிறது. அங்கு ஆங்காங்கே பல பெரிய பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன. அங்கு வந்து கொண்டிருந்த பணிப்பெண்களை நிறுத்தி இங்கு ஜோவனின் வீடு பற்றிக் கேட்க, இவை அனைத்தும் அவருடையது என்ற பதில் கிடைக்கிறது. இது அவளுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஜோவன் வசிக்கும் கண்ணாடி மாளிகையைத் தேடி ரா இம் வந்து, அங்கு வெளியே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஜோவனின் காலடியில் அந்த பொருளை வைத்துவிட்டு, கோபமாக அதன் அர்த்தம் பற்றி கேட்க, தன்னுள் எழும் எண்ணங்களையும், குழப்பத்தையும் மறைத்துக் கொண்டு மீண்டும் அதே அலட்சியத்துடன் ஜோவனின் பதில் வருகிறது. தான் முதல் முதலில் அவளை மருத்துவமனையில் சேர்த்த போது அங்கேயே தனது செயலை தொடராமல் தன் நிறுத்தி இருக்க வேண்டும் என்றும், தன்னைப் பொருத்தவரை அவள் ஒரு ஏழை பக்கத்து வீட்டுக்காரி மட்டும்தான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்றும் கூறி, அதை எடுத்து போய் பயன்படுத்தலாம் என்றும் அலட்சியப்படுத்துகிறான். கோவம் கொண்ட அவள் தான் ஏழை தான் என்றும், ஆனால் அவனைப் போல பக்கத்து வீட்டுக்காரன் தனக்கு தேவை இல்லை என்றும், அதனால் இந்த பொருளை அவனே வைத்துக்கொள்ள சொல்லி காலால் அந்த பொருளை ஒரு ஏத்து ஏத்தி விட்டு செல்கிறாள்.
அப்படி செல்லும் போது, பின்னால் ஒரு சத்தம் கேட்கிறது. அதனால் ரா இம் என்ன என்று திரும்பி பார்க்கும் பொழுது, அந்த பொருளை அவன் பக்கத்தில் இருந்த ஏரி தண்ணீரில் வீசி விட்டு, ‘தனக்கு அது தேவையில்லை’ என்றும் ‘அவளுக்கு அது வேண்டுமென்றால், அவளே அதை சென்று எடுத்துக் கொள்ளலாம்,’ என்றும் அவன் கூறுகிறான். அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துவிட்டு, நேராக அந்த ஏரிக்குள் இறங்கி, அந்தப் பெட்டியை வெளியே எடுத்து வருகிறாள். ஜோவனுக்கு அவளின் இந்த செயல் தாங்கவே முடியவில்லை. அவளைத் தடுக்க தடுக்க அவள் பெட்டியுடன் தன் பைக்கை நோக்கி சென்று கொண்டே இருக்கவும், அவளின் பைக்கின் சாவியை எடுத்து தண்ணீரில் வீசி எரிந்து விட்டு அவளைப் பார்த்து கோபத்துடன் அவள் என்ன மாதிரியான பெண் என்று வெறுப்புடன் கூறி, தான் அதைத் தூக்கி எறிந்தால், அவள் தன்னிடம் மன்னிபோ அல்லது அதனை தன்னை எடுத்துத் தரச் சொல்லியோ கேட்டிருக்க வேண்டுமென்று கத்துகிறான்.
தனது மோட்டார் சைக்கிளின் சாவியை அவன் எரிந்து விட்டதால் அளவுக்கு அதிகமான கோபத்துடன் இந்த முறை ரா இம் கத்த தொடங்க, அவள் அமைதி இழந்து கோபமாக கத்துவதைப் பார்த்து இப்பொழுது அவன் அதே கோபத்துடன் தான் மன்னிப்பு என்பதாகவும் கூறுகிறான். [ மன்னிப்பு கேட்கப் போவதை யாராவது இவ்வளவு கோவமான கேட்பார்களா??? அவளின் கோபம் அவனை பாதிக்கிறது போல..] இதைக் கேட்டதும் ரா இம் கோபம் அதிகமாகி தானே சென்று அந்த சாவியை எடுக்க முயற்சிக்கிறாள். அப்படி செல்லும் அவளைக் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வருகிறான் ஜோகன். தன்னால் அதைப்போல 100 பைக் வாங்க இயலும் என்றும் அவளை முதலில் தூய்மைப்படுத்திக் கொள்ள சொல்லியும் அவள் மறுக்க மறுக்க தன் வீட்டை நோக்கி இழுத்து வர அங்கே ஜோவனின் தாய் நின்று கொண்டிருக்கிறாள்.
[ ஜோவனே பணக்கார திமிரில் இருக்கும் போது, அவனது தாய் எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்பது அடுத்து வந்த வார்த்தைகளில் தெரிந்தது ] தாய் அங்கு நிற்பதைக் கண்ட ஜோவன் அவர் வந்த காரணத்தைக் கேட்க, அவரோ அவனுக்கு வந்து பரிசைக் [மான் கூட்டம்…!!! ] காண வந்ததாக கூறுகிறார். பின் அவர் ரா இம்-ஐ வெறுப்பாக பார்ப்பதையும், மட்டமாக பேசுவதையும் பார்த்த ஜோவன் அதனை ஆட்சிபிக்கிறான். ஒரு பணக்காரனை வலையில் சிக்க வைக்க முயற்சிக்கும் பெண்ணாக ரா இம்-ஐ சித்தரித்து பேசியதால் கோபம் அடைந்த ரா இம் அமைதியாகவும், உறுதியாகவும் தன் மறுப்பை தெரிவித்து விட்டு, ஜோவன் முன்பு தன்னிடம் சொன்னதை, ஜோவனின் தாயிடம் இப்பொழுது அவள் கூறுகிறாள். அதாவது ஜோவனைப் போன்ற மிகப் பெரிய பணக்காரனுடன் விளையாட தான் இங்கு வரவில்லை என்றும், தான் ஒரு ஏழை என்றாலும் கூட ஜோவனின் அந்த விளையாட்டுக்காக தன்னை தான் தாழ்த்திக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டு, போவதற்காக திரும்பி பின் பைக் இல்லாததால் நடந்தே செல்கிறாள். இது அவனின் தாய்க்கு மரியாதை அற்ற செயலாக தெரிந்ததால், அவர் கோபம் கொள்கிறார்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஜோவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசியவன், தாயிடம் பிறகு பேசலாமென்று கூறிவிட்டு, அவனது பிஏவுடன் ஓஸ்கா-வின் மேனேஜரைப் பார்க்க செல்கிறான். ‘எப்படியும் ஓஸ்கா ஜேஜூ தீவில் இருப்பதால் தனது டிபார்ட்மெண்ட் மாலின் போட்டி நிகழ்ச்சியுடன் சேர்த்து இசை வீடியோவையும் அங்கேயே படமாக்க வேண்டி இருக்கும்’ என்று எண்ணி அங்கு பேசிவிட்டு வீட்டிற்கு வரும் போது, தான் ரா இம்-ன் பைக் இன்னும் அங்கேயே இருப்பது கண்டு அவளுடைய சாவியை எடுப்பதற்காக தானே ஏரிக்குள் இறங்குகிறான்.
ரா இம் தனது சண்டைப் பயிற்சிப் பள்ளிக்குத் திரும்பும்போது, ஓஸ்கா-ன் இசை வீடியோ படப்பிடிப்பிற்காக ஜேஜூ தீவில் ஒரு காட்சிக்கான கார் சாகசத்தைப் பற்றி தனது சண்டைப் பயிற்சி குழுவினர் விவாதித்துத் திட்டமிடுவதைக் காண்கிறாள். இதைப் பார்த்ததும், தனக்கு என்ன கதாபாத்திரம் கிடைக்கும் என்று அவள் உற்சாகமாகக் கேட்கிறாள். ஆனால், அந்தக் குழுவின் சீனியர் ஜாங் சூ அவளுக்கு கார் சாகசங்களில் போதிய அனுபவம் இல்லை என்றும், அது ஆபத்தானது என்றும், அவள் தற்போது செய்யும் சண்டைக் காட்சிகளைத் தான் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அவள் விரும்பிச் செய்வதால் மட்டுமே அதற்கு அனுமதிப்பதாகவும் கூறி, அவளுக்கு அந்த வாய்ப்பை தர மறுத்துவிடுகிறான். இதைக் கேட்ட ரா இம் ஏமாற்றத்துடன் அங்கிருந்து செல்கிறாள்.
சிறிது நேரம் கழித்து எதோ யோசித்த ஜாங் சூ ரா இம்-ன் தோழிக்கு அழைத்து தனக்கு உதவக் கேட்கிறான். அதாவது அவன் வாங்கி அளிக்கும் ஒரு அழகான ஹேண்ட் பேக்கை ரா இம்-ன் தோழி அவள் வேலை செய்யும் இடத்தில் இருந்து வாங்கியது போல பொய் கூறி ரா இம்-மிடம் கொடுக்கும்படி சொல்கிறான். [ இதை அவனே நேரடியாக கிளாராவிடம் கொடுத்து தன் மனதில் உள்ளதை கூறியிருந்தால், கிளாராவின் வாழ்க்கை மாறி இருக்குமோ?…. ‘கிளாரா ஜோவனுக்குத் தான்’ என்று இருக்கும் பொழுது இவனின் விதி இப்படித் தானே யோசிக்கும்.]
ரா இம்-ம் அவளுடைய தோழியும் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, தோழி ரா இம்-மிடம் ஒரு கைப்பையைக் கொடுத்து, அதைத் தான் தனது வேலை செய்யும் இடத்தில் அவளுக்காக வாங்கியதாக கூறுகிறாள். அந்தக் அழகான கைப்பையைப் பார்த்ததும் அவள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். பிறகு, அன்று ஒரு கார் துரத்தல் காட்சியில் நடிக்கும் வாய்ப்பைத் தான் தவறவிட்டுவிட்டதாக அவள் வருத்தத்துடன் கூறுகிறாள். அது ஓஸ்காவின் இசை வீடியோவில் கிடைத்த ஒரு வாய்ப்பு என்றும், ஆனால் அவளுடைய மேலதிகாரி அவளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னிடம் பணம் இருந்திருந்தால் விமான டிக்கெட் வாங்கி அங்கு சென்றிருப்பேன் என்றும் அவள் வருத்தத்துடன் சொல்கிறாள். அப்போது, தோழிக்கு அவளுடைய வேலை செய்யும் இடத்திலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஜோவனின் தனிப்பட்ட உதவியாளன் கிம் தோழியிடம் ஏதோ ஒன்றைச் சொல்வதற்காக அழைக்கிறான், அங்கு கூறிய செய்தி தோழிக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.
அப்போது ஜோவன் தன் உதவியாளனிடம் மாலில் நடத்தும் போட்டிக்கான பரிசை வென்று போட்டியாளரின் சந்திப்பை பற்றி கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. அழைப்பு ஜேஜூ தீவிலிருக்கும் ஓஸ்கா-விடமிருந்து. தான் வேலை விஷயமாக ஒருவனை சந்திக்க தீவுக்கு வந்த போது, சில ரவுடிகளுடன் ஏற்பட்ட சண்டையில் சிக்கி, தான் காவல் நிலையத்தில் இருப்பதாகவும், தன்னை ஒரு பெண்ணை துன்புறுத்தியதாகக் கூறி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் ஜோவனிடம் ஓஸ்கா கூறுகிறான்.
ஓஸ்கா-வைக் காவல் நிலையத்தில் இருந்து எடுக்க அவனிடம் பேரம் பேசுகிறான். அதைக் கேட்டு ஓஸ்கா மிகுந்த கோபத்துடன் முதலில் தன்னை வெளியே எடுக்கும் வேலையை பார்க்கச் சொல்லி கத்துகிறான். ஜோவன் தொலைபேசியை அணைத்துவிட்டு ஓஸ்கா மீண்டும் தன்னிடம் மாட்டிக் கொண்டதை நினைத்து சிரித்தபடியே, தன் உதவியாளனிடம் காவல் நிலையத்தில் இருந்து அவனை வெளியே எடுக்கும் வேலையை செய்யச் சொல்கிறான். சொல்லிவிட்டு ஜேஜூ பயணத்தின் வெற்றியாளரை பற்றி ஜோவன் தன் பிஏவிடம் கேட்க, அவன் ‘முதல் பரிசு ஒரு கர்ப்பிணி பெண், இரண்டாம் பரிசு ஒரு வயதானவர் இருவருமே ஓஸ்கா-உடனான தங்கள் பரிசை விட்டுக் கொடுக்க வேண்டி இருந்ததால் மூன்றாம் இடத்திற்கு உரியவர் வெற்றி பெற்றவர் ஆகிறார்’ என்பதை தெரிவிக்கிறான். வெற்றிப் பரிசாக மூன்றாம் பரிசைப் பெறவிருந்த நபர் ரா இம். ஏற்கனவே குலுக்கல் போட்டியில் ஒரு வாக்குவம் க்ளீனரை வென்றிருந்த ரா இம்-க்கு இப்போது தனது விருப்பமான பாப் பாடகருடன் விடுமுறைக் கொண்டாட்டத்துக்கு ஜேஜூ தீவுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதைக் கேட்ட ஜோவன் உடனடியாக வேண்டாம் என்று மறுத்து நான்காம் இடம் பிடித்தவருக்கு அந்த வாய்ப்பை வழங்க சொல்லி கத்துகிறான். ஆனால் அவள் ஏற்கனவே அந்த பயணத்தை ஒப்புக்கொண்டு ஜேஜூ தீவுக்கு கிளம்பி சென்று விட்டதாக கூறுகிறான். அதனை கேட்ட ஜோவன் தன் பணத்தில் ஓஸ்கா-வும் ரா இம்-ம் விடுமுறை கொண்டாட்டத்தில் இருப்பதாக எண்ணி பொறாமை கொள்கிறான். அதுவும் அவளுடைய ஸ்டாண்ட் குழுவினரும் அதே மியூசிக் வீடியோ படப்பிடிப்பிற்காக அங்கே தான் இருக்கிறார்கள்.
மியூசிக் வீடியோவை இயக்கும் சியோல் குழுவினரும், அந்த வீடியோவிற்கான சண்டைக் காட்சிகளில் பணியாற்றும் சீனியர் குழுவினரும் அந்த தீவுக்கு வந்து சேர்கிறார்கள். அவர்கள் தாங்கள் தங்கும் அறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு சென்ற பின்னர், அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்றிருந்த ரா இம்-ஐ ஓஸ்கா கண்டுவிட்டு, ‘அவள் தான் அந்தப் போட்டியின் வெற்றியாளர்’ என்பதை அறிந்து அவன் ஆச்சரியப்படுகிறான். பின்னர், அவன் விதியை நம்புவதாகக் கூறி, அவளை மதிய உணவிற்கு அழைக்கிறான். இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே உணவருந்தும் பகுதியை நோக்கிச் செல்லும்போது, ஜோவன் ஏற்கனவே அங்கு அமர்ந்து, அவர்கள் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் குறை கூறுவதைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
Tags,
korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 4 explain in tamil, Secret Garden korean drama tamil dubbed,
secret garden korean drama episodes explained in tamil, dramalookup,
.