Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 25 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 25

சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். ஜுக்கே யூ-வின் உடல் நச்சுக்கு அடிக்கடி சிகிச்சை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.

யான் சூன் – யான் தேசத்தின் தலைவன். சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்த போது ஜுக்கே யூ-வின் நண்பன். பின்னர் எதிரி.

மிங் லூ – யோங் தேசத்தின் காவல் தலைவனின் மகள். பல வருடங்களுக்கு முன் சிங் மற்றும் யான் சூன் கிளர்ச்சி செய்து தப்பித்ததால் குற்றம் சாட்டப்பட்டு குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டு, இவள் மட்டுமே எஞ்சி இருக்கிறாள். இப்போது சிங்-ன் துணை தலைவி.

யுவே ஷியி – ஜுக்கே யூ -வின் துணை வீரன். யோங் தேசத்தில் உள்ள ஜுக்கே குலத்தின் சிறந்த ஒற்றர் படை வீரர்களில் ஒருவன்.

மெங் என் – சிமெங் தேசத்தின் ஜெனரல். ஒரு முறை லிங் யூ ராணியால் காப்பாற்றப்பட்டவன். அதனால் மனதிற்குள் அவளிடம் அனுதாபம் உள்ளவன்.

சூ குலின் – கருப்பு தங்க சுரங்கம் இருக்கும் மலைகள் சூழ்ந்த சிமெங் பிரதேசத்தின் தலைவன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவன் ஒரு தோல்வியுற்ற கிளர்ச்சியை வழிநடத்திய ஒரு அடிமை.

.

Rebirth அத்தியாயம் 25 – சுருக்கம்

சியாவோ ரான் என்ற மருத்துவன் ஜுக்கே யூ-க்கு சிகிச்சை செய்து, தற்காலிகமாக அவனைக் காப்பாற்றுகிறான். எனினும் அவன் சிங்-யிடம் இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்று எச்சரித்து, நஞ்சு ஜுக்கே-வின் உடலில் மிக நீண்ட காலமாக ஊறியிருப்பதால், அவன் உயிர் வாழ்வதற்கு அதிகபட்சமாகப் பத்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரையிலான கால அவகாசமே உள்ளது என்றும், உண்மையான நஞ்சு முறிவு மருந்து ஏதுமின்றி, எத்துணைத் திறமைவாய்ந்த மருத்துவராக இருந்தாலும் அவனைக் காப்பாற்ற இயலாது என்றும் கூறுகிறான்.

ஜுக்கே யூ அங்கே உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், யான் தேசம் பெரும் வறட்சியால் வாடுகிறது. பேரிடர் நிவாரணம் குறித்து விவாதிக்க யான் சூன் அவன் தேசத்தின் பழங்குடி இனத் தலைவர்களை அழைக்கிறான், ஆனால் அவர்களில் முக்கியமான இரு தலைவர்கள் மட்டும் வரவில்லை என்று அவன் அறிகிறான். கூட்டத்திற்கு வராததற்கு அபத்தமான காரணங்களைத் தகவல்களாகக் கூறினாலும், தன் கூட்டத்துக்கான உபரி தானியத்தைப் பாதுகாப்பதற்காகச் சொல்லப்படும் அப்பட்டமான பொய்கள் என்று அனைவருமே அறிந்திருக்கின்றனர். பியாண்டாங் தேசத்தின் மீதான சில ஆண்டுகாலப் போர் தங்கள் வளங்களை முழுவதுமாகத் தீர்த்து விட்டது என்றும், பட்டினியால் வாடும் நிலத்தைப் பராமரிக்க முதியவர்களும் பலவீனர்களும் மட்டுமே எஞ்சி இருக்கிறார்கள் என்றும், மற்ற பழங்குடித் தலைவர்கள் யான் சூன்-க்கு நினைவூட்டுகிறார்கள். 

மிகுந்த மனக் வருத்தத்துடன், தலைநகரத்தை தெருக்களில் பயணிக்கும் யான் சூன், அங்கு பஞ்சத்தின் தீவிரத்தைக் காண்கிறான். ஓர் இரவில் தன் தளபதி செங்-வுடன் மிகுந்த வருத்தத்துடன் தன் தேசம் குறித்து உரையாடும் போது செங் அவனுக்கு ஆறுதல் கூறி, என்றும் பிரியாமல் தோளோடு தோள் நிற்பதாக கூறி ரத்தத்தில் உறுதி செய்கிறான். 

இங்கே ஜுக்கே யூ-வின் உடல் நலம் சீரடைய மாற்று மருந்தை விரைவாக பெறுவதற்காக வேண்டி சிங் மற்றும் மிங் லூ இருவரும் சிமெங் தேச நகரத்தை ஆராய்ந்தபடியே சுற்றி வரும் பொழுது, ஒரு இடத்தில் அடிமைகள் தொங்கவிடப்பட்டு சாகடிக்கப்பட்டிருப்பதை காண்கிறாள். அங்கு நடைபெறும் அன்றாட நடைமுறைகளைக் கூர்ந்து கவனித்த போது தினமும் பெண் அடிமைகள் நிறைந்த ஒரு தேர் சிமெங் மன்னனிடம் கொண்டு செல்லப்படுவதை அவள் கவனிக்கிறாள். அப்போது அங்கு வந்த ஜுக்கே வின் துணைவீரன் யுவே ஷியி அது பற்றிய விவரங்களை விளக்கமாக கூறுகிறான். 

அரண்மனை பெண் அடிமைகள் பற்றி அறிந்த சிங், தான் அரண்மனைக்குள் நுழைவதற்காக திட்டமிட்டு, ஒரு அடிமையாக அரண்மனைக்குள் வேடமிட்டு செல்ல முடிவு செய்கிறாள். அரண்மனையின் அந்த மலைக்கோட்டையின் வரைபடத்தையும் நன்கு பார்த்து வைத்துக் கொள்கிறாள். அதன்படி அடிமைகளில் ஒருத்தியாக வேடமிட்டு முகமூடி மன்னனின் அந்தப்புரத்திற்குள்ளும் நுழைகிறாள். உள்ளே அவர்களை மேற்பார்வை பார்க்கும் பெண் அந்த அடிமைகளின் பார்வையை நச்சுப் புகையை கொண்டு பறித்துவிட்டு, மன்னனுடன் ஆடம்பரமான வாழ்க்கை வாழப் போவதால் அவர்களுக்கு இனி கண்கள் தேவைப்படாது, என்று கூறுகிறாள். இந்த சோதனையில் சிங் மட்டும் தப்பிக்க, அவளை மன்னனிடம் அழைத்துச் செல்கின்றனர். அவள் பார்வையற்றவளாக நடித்தாலும் கூட அரசன் அவளை குழப்புவதற்காக தன்னை போல் ஒரு முகம் மூடியை அங்கு நிறுத்துகிறான். இந்த பரிசோதனையில் சிங் பிடிப்படுகிறாள், என்றாலும் கூட முகமூடி மன்னன், சிங்-யிடம் தான் அவளை ஏற்கனவே அறிந்திருப்பதாக கூறியவளை கேலி செய்கிறான்.

இந்த நிகழ்வின்போது மன்னனின் விசுவாசமான தளபதி, மாளிகையின் வெளிப்புறத்தில் இருக்கும் சிங்-ன் ஆதரவாளர்களைச் சுற்றி வளைத்து பிடிக்கிறான். இங்கு மன்னனுக்கும் சிங்-ம் இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் அவள் மன்னனை கொல்ல முற்பட, அந்த நேரத்தில் லிங் யூ ராணி சிங்-கை தடுத்து மன்னனிடம் நல்ல பெயர் எடுக்கிறாள். இதற்காக முகமூடி மன்னன் ராணிக்கு அவள் தலைவனின் விஷமுறிவிற்கான மருந்தை அளிக்கிறான். எனினும் ராணியின் தலைவனுக்குப் பதிலாக ராணியின் பாதுகாவலனை மரணப்படுக்கையில் வீழ்த்தி இருப்பதை பார்த்து ராணி அதிர்ச்சி அடைகிறாள்.  அவளிடம் முகமூடி மன்னன் தன் சந்தேகத்தை கேட்கிறான். பியாண்டாங் தேசத்தில் ஜுக்கே யு-வை ராணி கொல்ல முயலும் பொழுது அவன் தற்செயலாக தப்பி சென்று விட்டான் என்று தன்னிடம் ராணி கூறியதை எடுத்துக் கூறி, தன்னை கொல்ல முயன்ற ராணியைக் காப்பாற்ற அவனின் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மையில்களைத் தாண்டி இங்கே ஏன் அவன் வரவேண்டும் என்ற சந்தேகம் தனக்கு வந்ததாகவும் அதனால் தான் ராணியின் பாதுகாவலனை அழைத்து காரணம் கேட்டதாகவும் கூறுகிறான். மேலும் ராணியின் பாதுகாவலன் இத்தனை சித்திரவதைகளுக்கு இடையிலும் கூட உண்மைக்கு காரணத்தைக் கூறாமல் தனக்குத் தெரியாது என்று கூறியதைக் குறிப்பிட்டு, பாராட்டுவதை போல ராணியை எச்சரித்து விட்டுச் செல்கிறான்.

மன்னனிடம் பிடிபட்ட பின், சிங் அடிமைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்குள் தள்ளப்படுகிறாள். அவளை யார் கொல்கிறார்களோ அவர்களுக்கு அன்று இரவு அதிக உணவு என்று அங்கிருக்கும் அடிமைகளிடம் வீரர்கள் சலுகை அளிக்க, அவர்கள் அவளை தாக்க தொடங்குகிறார்கள். சிங்-ன் போராட்டம் தொடங்குகிறது. இங்கு ஜுக்கே யூ தனக்கு மருத்துவன் அளித்த தற்காலிக சிகிச்சையில் கண்விழித்தவன், தனக்காக சிங் முகமூடி மன்னனிடம் சென்றிருக்கிறாள் என்று அறிந்து அவளைக் காப்பாற்ற முடிவு செய்கிறான். 

முகமூடி மனிதன் தன்னறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு ஜுக்கே யூ-வைக் கைது செய்து அழைத்து வருகிறான் ஜென்ரல் மெங் என். அங்கு அப்போது லிங் யூ ராணியும் வந்து சேருகிறாள்.  பின்னர் நடக்கும் ஒரு கடுமையான மோதலில் ஜுக்கே யூ மன்னனின் முகமூடியை உடைக்க, உண்மையில் அவன் யார் என்பது வெளிப்படுகிறது. அவனைப் பற்றிய உண்மைகளை ஜுக்கே ஏற்கனவே அறிந்திருக்கிறான். 30 வருடங்களுக்கு முன்பு இந்த இந்த சிமெங் தேசத்தில் சூ குலின் என்ற ஒரு அடிமை இருந்ததாகவும், அப்போது தன்னுடன் இருந்த சக அடிமைகளாலேயே துரோகத்திற்கு ஆளாகி அவன் தன் முகத்தில் அடிமை என்பதை குறிக்கும் முத்திரை குத்தப்பட்ட பிறகு, தான் இறந்து விட்டதாக மற்றவர்களை நம்ப செய்து, இப்போது தன் சொந்த இனத்தையே மற்ற யாரையும் விட அதிகமாக வெறுக்கும் ஒரு அரக்கனாக உருமாறி இருக்கிறான் என்றும் ஜுக்கே கூறுகிறான்.  

சூ குலின் அடிமைகள் என்போர் மனிதத் தன்மை அற்றவர்கள் என்றும், மிகப்பெரிய மூடர்கள் என்றும் வாதிட்டு, தன் கொடூர செயல்களை நியாயப்படுத்தி தன் அருகில் இருக்கும் ராணியை நோக்கி ஜுக்கே-வைக் கொல்லச் சொல்கிறான். ஆனால் தான் எதிர்பார்த்த சமயம் கிட்டியதை அறிந்த ராணி ஜுக்கே-வுக்கு பதிலாக அடிமை மன்னன் சூ குலின்-ஐக் காயப்படுத்த, சுதாரித்த மன்னன் சூ குலின் ராணியை அவள் எதிர்பாராத நேரத்தில் தாக்கி படுகாயப்படுத்துகிறான். அதனால் ஜுக்கே யூ அவனைக் கொன்றுவிட்டு திருப்ப, அங்கே காயமடைந்து கீழே சரிந்த ராணியை தன் மடியில் ஏந்திக்கொள்கிறான். ராணி அவனிடம் சிங் இருக்கும் சிறையின் இடத்தைக் கூறி அவளை காப்பாற்ற சொல்கிறாள். அத்தோடு தன்னுடைய பழங்குடியின மக்களையும் காக்குமாறு அவனிடம் வேண்டுகிறாள். மேலும் இறக்கும் தருவாயில் அவளுடைய கடைசி ஆசையாக தன்னை அணைத்துக் கொள்ளும்படி ராணி கூற, ஜுக்கே யூ-ம் அதை நிறைவேற்றுகிறான். 

மன்னன் இறந்துவிட்டதாலும், மக்கள் காப்பாற்றப்பட்டதாலும், ஜுக்கே யூ-வின் இதயத்தில் தனக்கும் சிறு இடம் இருப்பதை தெரிந்து கொண்டதாலும், ராணி மகிச்சியுடன் மரணிக்கிறாள். ராணி இறந்ததாள் அந்த அறையில் இருந்த ஜுக்கே யூ, அவனின் வீரன் மற்றும் ராணியின் அபிமானி ஜெனரல் மெங் என் ஆகியோர் செயலற்று நின்ற அந்த சில நொடிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மன்னன் வெளியே இருக்கும் வீரர்களை வரவழைக்க அபாய மணியொலியை எழுப்பி, அவர்களைக் கண்டு கேலியாக சிரித்தவாறே உயிர் விடுகிறான். 

அத்தியாயம் 24 – இன் சுருக்கம்

அத்தியாயம் 26 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top