.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து இளவரசி. இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-னின் மனைவி. இப்போது பேரரசியுடன் சேர்ந்து சதி செய்கிறாள்.
லி யான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். முன்னாள் பேரரசரின் மகன் வழி பேரன். மதிப்பில்லாத இளவரசன். இப்போது தூதனாக நியமிக்கப்படுகிறான்.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டவள்.
தளபதி சன் – பியாண்டாங் தேசத்தின் தளபதிகளில் ஒருவன். அரியணைக்கு நேர்மையாக இருப்பவன்.
நான்சி பழங்குடியினம் – பியாண்டாங் தேசத்தின் எல்லை பகுதியில் இருந்தாலும், அவர்களின் தொல்லைகளால் 15 வருடங்களுக்கு முன் அரசாங்கத்தால் [ பேரரசியால் ] முற்றிலும் அளிக்கப்பட பழங்குடி இனம்.
ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன். நான்சி பழங்குடியினத்தைச் சேர்ந்ததை மன்னனுக்கு மறைத்து வாழ்பவன்.
Rebirth அத்தியாயம் 17- சுருக்கம்
ஜுக்கே யூ வும், சிங்-ம் பியாண்டாங் தலைநகரத்திற்கு வந்து இளவரசன் லீ சே மாளிகைக்கு வருகிறார்கள். அங்கு அரசாங்க பூட்டு போடப்பட்டு இருப்பதைக் கண்டு, சிங் அரண்மனைக்கு சென்று பேரரசியையும், ஜுக்கே யூ தொலைந்து போன மற்றவர்களையும் பார்க்க முடிவு செய்து பிரிந்து செல்கிறார்கள். சிங் பேரரசியைக் காண அரண்மனை செல்ல, அங்கு இருந்ததோ ஜாவோ சுன்’எர். நடந்ததை எள்ளலாக விவரித்த சுன்’எர் தான் உயர்குடியில் பிறந்தாலும் தனக்கு எல்லாமே தவறாகவே நடந்தது என்றும், அடிமையாக இருந்தாலும் எல்லோராலும் விரும்பப்பட்ட, நன்றாக இருக்கும் சிங், அவளை நேசிக்கும் அனைவரும் விலகி அவள் முழுவதுமாக பாதிக்கப்படப்போவதை பார்ப்பதே தனது விருப்பம் என்று கூறுகிறாள்.
உயர்குடிப் இளவரசியாகப் பிறந்திருந்தும், ஜாவோ சுன்’எர் தனது அழகையும் அந்தஸ்தையும் அழிவுக்கே பயன்படுத்துவதாக சிங் கூறுகிறாள். எல்லாவிதமான நன்மைகளும் அவளுக்கு கிடைத்து இருந்தாலும், கடந்த காலத்தில் நடந்தையே நினைத்துக்கொண்டு, அந்த வேதனையில் தனக்கு மட்டும் அல்லாது தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் துயரங்களையே தருகின்ற அவள், பழிவாங்கும் பாதையில் வீழ்ந்துவிட்டதாக கூறி அங்கிருந்து சிங் சென்றுவிடுகிறாள்.
இதற்கிடையில், சிமெங்-ன் லிங்யு ராணி பேரரசியின் காவலர்களிடமிருந்து கடந்த சில நாட்களாகத் தப்பித்து, மறைந்து திரிகிறான். ஜுக்கே விடம் இருக்கும் அந்த நூலின் கிழிந்த பக்கங்கள் இருந்தால் மட்டுமே அவள் திரும்ப சிமெங் தேசம் செல்ல இயலுமாகையால், ஜுக்கே யூ க்காக காத்திருக்கிறாள். உணவோ நீரோ இன்றி அவள் மறைந்தே இருந்ததால் ஜுக்கே யூ அவளைக் கண்டுபிடிக்கும் போது, நடந்ததைக் கூறிவிட்டு மயங்கிவிடுகிறாள்.
இங்கு சிங்-ஐ அழைத்துச் செல்ல யான் சூன் அவளின் மாளிகையின் முன் வந்து நிற்கிறான். பின் அங்கு வந்த சிங்-யிடம் பலவருடங்களுக்கு முன்னர் தான் பயணக்கைதியாக இருந்த நிலையில் அணிந்த உடையை அணிந்து வந்திருப்பதாகவும், அவள் முன் போல தன்னிடம் பேசவேண்டுமென்றும் கூறி, தனியே அழைத்துச் செல்கிறான். அங்கு அவளிடம் அவர்களின் பொதுவான கடந்த காலத்தை நினைவுபடுத்தி பேசி, தங்களின் தற்போதைய நிலையை ஒதுக்கிவைத்துவிடுமாறும், அவளின் வலியை மறந்து யான் தேசத்திற்கு தன்னோடு திரும்புமாறு அவன் அவளிடம் கெஞ்சுகிறான். அவளை இழந்தது தனது முழு உலகத்தையுமே இழந்தது போல் இருப்பதாகவும் கூறுகிறான். யான் சூன் கூறிய அனைத்தையும் எந்த நெகிழ்வும் இல்லாமல் கேட்டவள், இறுதியில் ஒரு கத்தியை உருவி அவன் கழுத்தில் வைத்து, யான் தன்னை உண்மையில் விரும்பியிருந்தால், தன்னைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் கொன்றிருக்க மாட்டான் என்று கூற, பொறுமை இழந்த யான் சூன் அவளது உள்சக்தியை பலவீனப்படுத்தி நகரமுடியாமல் செய்கிறான். மேலும் அவளிடம் மூன்று நாட்களில் அவள் தனது ராணியாகத் தோன்ற வேண்டும் என்றும், இல்லையெனில் அவள் மீது அக்கறை கொண்ட அனைவரையும் திட்டமிட்டு அழித்துவிடுவேன் என்றும் கூறுகிறான்.
அதே நேரம் யான் சூன்-ன் ராணி ஹெலியன் லிங் இந்த திருமணம் குறித்து கேள்விப்பட்டு, இந்த நாட்டை நோக்கி விரைந்து பயணத்தை துவங்கி, வந்து சேருகிறாள். அவள் வந்து சேர்ந்த விவரம் அறிந்த யான் சூன் அவளை வந்து பார்த்து வந்த காரணம் கேட்கிறான். ஹெலியன் லிங் யான் தேசத்திற்கு சிங் வந்தால் யான் சூன் தன்னை ஒதுக்கிவிடுவான் என்று அஞ்சி, அவனிடம் பயணத்தில் ஏற்பட்ட காயங்களைப் பரிதாபமாகக் காட்டி, தான் அங்கேயே தங்கி அவனுக்கும் அவனது புதிய ராணிக்கும் சேவை செய்ய மட்டுமே விரும்புவதாகக் கூறி, யான் சூனிடம் கருணைக்காக மன்றாடுகிறாள். அதை எந்த உணர்வும் இன்றி கேட்டுவிட்டு, தளபதி செங்-யிடம் அவளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, அலட்சியப்படுத்தி சென்றுவிடுகிறான்.
மயங்கிய நிலையில் இருக்கும் சிமெங்-ன் லிங்யு ராணியை ஜுக்கே யூ தன் இருப்பிடத்திற்கு கொண்டு வருகிறான். அங்கு அவளுக்கு சிங் சிகிச்சை செய்து, ராணியின் உடலில் உள்ள பல காயத்தழும்புகளைக் கண்டு ஜுக்கே விடம் காரணம் கேட்க, தன் கணவனின் இறப்பிற்கு பிறகு, சொந்த மக்களின் எதிர்ப்பையும் மீறி சிமெங் முகமூடி மன்னனைக் கொல்ல அவனின் அடிமை ராணியாக மாறுகிறாள். அதனால் அவளுக்கு சிறிதும் விருப்பம் இல்லாத பல வேலைகளையும், கொலைகளையும் செய்யவேண்டிய நிர்பந்தம் ராணிக்கு ஏற்படுகிறது, என்று ராணியின் கதையைக் கூறுகிறான் ஜுக்கே. இருவரும் ராணியை எப்படியும் பேரரசிக்குத் தெரியாமல் சிமெங் நாட்டிற்கு தப்பிச்செல்ல வழிசெய்ய வேன்றுமென்று பேசி விட்டு அங்கிருந்து செல்ல, ராணி கண்மூடிய நிலையில் அதனைக்கேட்டுக்கொண்டு படுத்திருக்கிறாள்.
இளவரசன் லீ சே வைக் காப்பாற்றுவதற்காக சிங் மற்றும் ஜுக்கே இருவரும், அந்த கொலை குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான ஆதாரங்களைக் தேட ஆரம்பிக்கின்றனர். சிங்-ன் திருமணம் நடப்பதற்கு முன் இளவரசனை வெளியே கொண்டுவர வேண்டுமாதலால், விரைவாக செயல்பட வேண்டிய நிலை. கொலை செய்ய வந்து, இளவரசன் பெயரைக் கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்டவனின் உடலைத் தேடி அவர்கள் செல்லும் போது, அங்கே தங்களைப்போலவே கொலையில் சந்தேகம் கொண்டு விவரம் சேகரிக்க வந்த தளபதி சன்-ஐ சந்திக்கின்றனர்.
தளபதி சன்-க்கு சிங் ஏற்கனவே தெரிந்தும் பேரரசியிடம் கூறாமல் இருந்த காரணத்தை ஜுக்கே யூ-ம் சிங்-ம் கேட்க, தான் பியாண்டாங் பட்டத்து இளவரசனுடன் யோங் தேசத்திற்கு ஒரு முறை வந்திருந்த போது, சிங்-ஐ பார்த்திருப்பதாகவும், இங்கு இளவரசருடன் அவள் வந்ததால் கொஞ்சம் பொறுத்திருக்க எண்ணியதாகவும் கூறுகிறான். சிங் இப்போது அவன் இறந்த உடலைத் தேடி வந்த காரணத்தைக் கேட்க, தளபதி சன் ஒரு முக்கிய ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறான். 15 வருடங்களுக்கு முன்னால் இந்த பியாண்டாங் தேசத்திற்கு சொந்தமான தெற்கில் உள்ள நான்சி பழங்குடியினரை மொத்தமாக அழிக்குமாறு பேரரசி உத்தரவிட, தான் அதனை நிறைவேற்றும் போது, அவர்கள் உடலில் குத்தி இருந்த பச்சை-யைத் தான் பார்த்திருப்பதாகவும், இப்போது அந்த கொலையாளியின் இறந்த உடலிலும் அதே போன்ற பச்சை இருந்ததைப் பார்த்ததாகவும், தளபதி சன் கூறுகிறான். விவரங்களைக் கூறிவிட்டு, ஜுக்கே-வை யார்ரென்று சிங்-ஐ கேட்க, தான் சிங்-ன் பாதுகாவலர் மட்டுமல்ல அதற்கும் மேலான உறவில் இருப்பவன் என்று கூறி, சிங் மற்றும் பட்டத்து இளவரசன் இடையே ஆனா உறவு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான் ஜுக்கே யூ. லீ சே-வைக் காப்பாற்றுவது என்ற தங்களின் பொதுவான குறிக்கோளை உணர்ந்துகொண்ட தளபதி சன், அவர்களின் வேலையில் உதவி தேவையெனில் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு தனது அடையாள முத்திரையைக் கொடுத்து விட்டு செல்கிறான்.
இங்கு பேரரசின் அறையில் ஜான் ஜியு-ம் பேரரசியும், சிங் கண்டிப்பாக இளவரசன் லீ சே வை காப்பாற்ற யான் தேச தலைவன் யான் சூன்-ஐ மணந்து கொள்ள சம்மதிப்பாள் என்று நம்புகின்றனர்.
.
.