Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 40 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 40

குவான்ராங் தேசம் – மிகவும் மூர்க்கமான வீரர்களைக் கொண்ட பழங்குடியினத்தின் தேசம்.

ஜுக்கே யுன்சோ & ஜுக்கே யுன்ஷெங் – இருவரும் ஜுக்கே யூ மற்றும் சிங்-ன் குழந்தைகள்

தளபதி ஹெலியன் டு – தற்போதைய ஹெலியன் பழங்குடி இன இளம் வயது பெண் தளபதி.

.

Rebirth அத்தியாயம் 40 – சுருக்கம்

குவான்ராங்-ற்கு எதிரான போர் ஆரம்பமாகி, உச்சக்கட்டத்தை எட்டுகிறது. அந்தக் போரின் மையத்தில், பியாண்டாங் தேசத்தில் முன்பு சிங் பயிற்சி அளித்த வீரமங்கை ஃபாங் மியாவ்மியாவ், போர்க்களத்தில் வீரமரணம் அடைகிறாள். அவளது தியாகம் எஞ்சியிருந்த வீரர்களுக்கு முன்னேறிச் செல்வதற்கான உறுதியை அளிக்கின்றது. ஜாவோ சே, மிகுந்த ஆவேசத்துடன் போரிட்டு, பல படையெடுப்பாளர்களைக் கொள்கிறான். எனினும் ஒரு தருணத்தில் அவன் மனதில் சட்டென்று அவனை நிபந்தனையின்றி நேசித்த, உறுதியான மற்றும் அன்பான பெண்ணான தளபதி ஹுவானின் உருவம் தோன்றுகிறது. தன்னை மிகவும் நேசித்தவளைத் தானே கொன்றுவிட்டதை நினைத்து அவன் குற்றவுணர்வால் போரிடாமல் செயல் இழந்து நிற்கையில், யாரோ ஒரு எதிரிப் படைவீரனால் கொல்லப்படுகிறான். 

நீண்டு நீடித்த கடுமையான போருக்குப் பிறகு, சிங் தனது கடைசி மூச்சு வரை குவான்ராங் தளபதியைத் தோற்கடித்து, களைத்துப்போய் இரத்தத்தில் நனைந்து சரிந்து விழுகிறாள். அவளது மங்கலான பார்வையில், ஒரு பரிச்சயமான உருவம் அவளை நோக்கி வேகமாக வருவதைக் காண்கிறாள். அது அவளின் ஜுக்கே யூ. அவன் அவளைத் தன் அருகில் அணைத்து, ‘சிங்’எர்’ என்று அழைத்து, தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டதோடு, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் உறுதியளிக்கிறான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, யான் மற்றும் சிமெங் தேசங்களில் அமைதி ஏற்படத்துவங்குகிறது. யான் சூன் மற்றும் அவனது ராணி ஹெலியன் லிங் இருவரும் பழைய நண்பர்களைச் சந்திக்க சிமெங்கிற்குப் பயணம் செய்கின்றனர். வழியில், அவர்கள் ஜுக்கே யுன்சோ மற்றும் ஜுக்கே யுன்ஷெங் என்ற இரண்டு புத்திசாலிக் குழந்தைகளைச் சந்திக்கின்றனர். ஆரம்பத்தில் அந்தக் குழந்தைகள், ‘சந்தேகப் பார்வை கொண்ட’ அந்த அந்நியர்களைக் கண்டு எச்சரிக்கையாக இருந்தாலும், யான் சூன் அவர்களின் அழகைப் புகழ்ந்து அவர்களைக் கவர்கிறான். அதனால் அவர்கள் செல்லும் இடத்திற்கு வழிகாட்ட அக்குழந்தைகள் முயலும் போது, வழியில் ஒரு பிரபலமான நிழல் நாடகத்தால் அவர்களின் கவனம் சிதறுகிறது.

அந்த நாடகம், சிங் மற்றும் யான் சூன் ஆகியோருக்கு இடையேயான புகழ்பெற்ற கூட்டணியை விவரிக்கிறது. அவர்களை ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனம் இல்லாத ஒரு உலகத்திற்காகப் போராடிய கூட்டாளிகளாகச் சித்தரிக்கிறது. குவான்ரோங் இனத்தவருடனான இறுதிப் போரில், சிங் மரணத்தின் விளிம்புக்கே சென்றதையும், ஜுக்கே யூ விஷ மருத்துவன் சியாவோ ரான் அளித்த ஒரு தெய்வீக மருந்தின் துணையுடன் சிங்-ன் உயிரைக் காப்பாற்றினான் என்பதையும் அந்த நாடகம் விவரிக்கிறது. சிறிது நேரத்திலேயே அக்குழந்தைகளின் தந்தையான ஜுக்கே யூ வந்து அவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அப்போது வெளியே வெகுநேரம் தங்கியிருந்ததற்காக குழந்தைகளை விளையாட்டாக மிரட்டி, எச்சரிக்கையும் செய்கிறான். யான் சூன் அவர்களைப் பின்தொடர்ந்து ஒரு அமைதியான முற்றத்திற்குச் செல்ல, அங்கே அவன் இறுதியாக சிங்-ஐக் காண்கிறான். 

அவள் மென்மையாகவும் பொலிவுடனும் காட்சி அளித்த அவள் சில ஆண்டுகளாக அமைதியை அனுபவித்ததால், அவளது போர்வீர மனப்பான்மை மறைந்து அவளை அது மென்மையாக்கியிருந்தது. யான் சூன்-ஐ அடையாளம் கண்டுகொண்ட அவள், ஒரு கனிவான புன்னகையுடன் அவனை வரவேற்று, அவனையும் ஹெலியன் லிங்-கையும் குடும்பத்தினருடன் உணவருந்த வருமாறு அழைக்கிறாள்.

36 ஆண்டுகளுக்கு பிறகு யான் சூன் முதுமை எய்திய காரணமாக உடல் தளர்ந்து காணப்படுகிறான். அவனின் ராணி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி இருப்பதை உணர்கிறான். அவனது மறதி காரணமாக அவன் பல விஷயங்களை மறந்ததால் அவனது உதவியாளர் பெண் அவற்றை நினைவூட்டுகிறாள். பழைய நண்பர்களை இழந்திருந்த போதிலும் உலகம் அமைதியுடனே இப்போதும் திகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் நட்பை புதுப்பிக்கும் வகையில் பியாண்டாங் தேசம் அரச கடிதங்களை அனுப்பி வருகிறது. மேலும் இரு தரப்பு செழிப்பையும் மேம்படுத்தும் நோக்கில் தற்போதைய இளம் வயது பெண் தளபதி ஹெலியன் டு ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தையும் முன் வைக்கிறாள். 

சிமெங் பகுதியில் ஜுக்கே யூ தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார். எனினும் அவர் அரசு ஆடம்பரங்களில் மூழ்கி விடாமல், மக்களுக்கான சேவை மனப்பான்மை கொண்ட ஒரு வாழ்வையே வாழ்கிறார். பொதுமக்களின் கருத்து கேட்கும் ஒரு நாளில், சேதமடைந்த பயிர்கள் மற்றும் சாலைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட ஒரு தகராறை ஜுக்கே யூ தீர்த்து வைத்தார். புதிதாக ஏற்படுத்தப்பட்ட சட்டத்தையும் அவர் மக்களிடையே விளக்குகிறார். பியாண்டாங்-உடனான கடல் முள் செடி வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் மற்றும் அதன் பயனீட்டாளர்கள் மானியம் பற்றி விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, ​​துடிப்பான ஒரு இளம் பெண் உதவி கேட்டு மன்றாடியபடி முன்னே விரைந்து வருகிறாள். 

தன் தந்தை மணப்பெண்ணுக்கான சீரை மாப்பிள்ளையிடம் வாங்கிவிட்டதால் தான் இந்தத் திருமணத்திற்கு வற்புறுத்தப்படுவதாகவும், அது அடிமைத்தனத்திலிருந்து சற்றும் வேறுபட்டதல்ல என்றும் அவள் எடுத்துக்கூறுகிறாள். புராணக் கதையைப் போல தானும் ஒரு பெண் தளபதியாக வேண்டும் என்று கனவு கண்டதால், தனக்குத் தானே “சூ கியாவோ” [சிங்] என்று பெயர் சூட்டிக்கொண்டதாக அவள் தெரிவிக்கிறாள். அவளது மனவுறுதியால் ஈர்க்கப்பட்ட ஜுக்கே யூ, அவளுக்கு ஒரு இராணுவ அனுமதியை வழங்கினார். மேலும், ராணுவத்தில் பணிபுரிவதால் மூலம் கிடைக்கும் பணத்தால் அவளின் தந்தை வாங்கிய சீருக்கு ஒப்பான கடனைத் திருப்பிச் செலுத்தி, அவள் தனது சுதந்திரத்தை மீட்டுக்கொள்ளலாமென்று ஆணை இடுகிறான். 

சிங்-ன் பிறந்தநாளில், யான் சூன் ஒரு காலத்தில் தங்கள் தலைவிதியை மாற்றிய அந்த உறைந்த ஏரிக்குத் தனியாகக் குதிரையில் செல்கிறான். அங்கே ஏற்கெனவே ஜுக்கே யூ இருந்ததைக் காண்கிறான். அந்த இரு முதியவர்களும் பொழியும் பனியில் ஒன்றாக நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன ஓட்டத்தில் கடந்த கால நினைவுகள் வந்து செல்கின்றன. வாழ்நாள் முழுவதும் போரில் ஈடுபட்டிருந்த போதிலும், அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை நிறைவேற்றி, உலகிற்கு ஒரு நீடித்த அமைதியை உருவாக்கியுள்ளோம் என்ற பெருமையுடன் நின்றார்கள்.

அத்தியாயம் 39 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top