Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 26 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 26

சூ குலின் – கருப்பு தங்க சுரங்கம் இருக்கும் மலைகள் சூழ்ந்த சிமெங் பிரதேசத்தின் தலைவன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவன் ஒரு தோல்வியுற்ற கிளர்ச்சியை வழிநடத்திய ஒரு அடிமை.

மெங் என் – சிமெங் தேசத்தின் ஜெனரல். ஒரு முறை லிங் யூ ராணியால் காப்பாற்றப்பட்டவன். அதனால் மனதிற்குள் அவளிடம் அனுதாபம் உள்ளவன்.

சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். ஜுக்கே யூ-வின் உடல் நச்சுக்கு அடிக்கடி சிகிச்சை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.

மிங் லூ – யோங் தேசத்தின் காவல் தலைவனின் மகள். பல வருடங்களுக்கு முன் சிங் மற்றும் யான் சூன் கிளர்ச்சி செய்து தப்பித்ததால் குற்றம் சாட்டப்பட்டு குடும்பம் மொத்தமும் அழிக்கப்பட்டு, இவள் மட்டுமே எஞ்சி இருக்கிறாள். இப்போது சிங்-ன் துணை தலைவி.

செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன்-ன் படைத்தளபதி. யான் தேசத்தின் மீதும், தலைவன் யான் சூன்-னின் மீதும் மிகுந்த அன்பு கொண்ட தளபதி. ஆனாலும் யான் சூன் ராணி ஹெலியன் லிங்-ன் மீது ஆரம்பம் முதலே பரிவு கொண்டவன்.

ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் அவனால் வெறுக்கப்படுகின்றவள்.

யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் கொலை முயற்சியில் தப்பி மறைந்து வாழ்பவள்.

ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். தன் தந்தையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு தலைநகரம் செல்லாமல் ஒதுங்கி தன் ராணுவத்துடன் வாழ்பவன்.

Rebirth அத்தியாயம் 26 – சுருக்கம்

முகமூடி மன்னன் சூ குலின் அந்த அறையில் உள்ள தனது எதிரிகளும் தன்னுடன் சேர்ந்து அழிந்து போக வேண்டும் என்று கேலியாக அவர்களை சபித்தவரே கசப்பு உணர்வோடு தன் உயிரை விடுகிறான். அவனது கொடுமைகளால் சலித்து போய் இருந்த அவனது தளபதி மெங் என்-யிடம் ஜுக்கே யூ அவனுக்கு உண்டான விஷத்திற்கான முறிவு மருந்தைக் கொடுக்க அவன் ஏற்றுக் கொள்கிறான். அவனின் உதவியோடு மன்னனின் முகமூடியைத் தான் அணிந்து கொள்கிறான் ஜுக்கே. எச்சரிக்கை ஒளியைத் தொடர்ந்து அறைக்குள் நுழையும் வீரர்களை மன்னனைக் கொல்ல வந்த கொலையாளி கொல்லப்பட்டு விட்டதாக கூறி, பழைய மன்னனை காட்ட, அவர்கள் அனைவரும் அதனை உண்மை என்று எண்ணி வெளியேறுகிறார்கள்.  பின்னர் ஜுக்கே யூ-ம் உடனடியாக சிங்-ஐக் காப்பாற்ற விரைய, அங்கே போராடிக் களைத்த நிலையில் இருந்த சிங், ஜுக்கே வைக் கண்டதும் மயங்கி சாய்கிறாள். 

சுயநினைவின்றி இருந்த சிங்-ஐ அந்த மலைக்கோட்டையின் அந்தப்புர அறையிலேயே வைத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறான் ஜுக்கே. அந்த மாளிகையில் இருக்கும் மருந்துகளில் இருந்து, முக்கியமாக பழைய மன்னனின் அறையில் உள்ள மருந்துகளில் இருந்து ஒரு விசித்திரமான மருந்தை மருத்துவன் சியாவோ ரான் கண்டுபிடிக்கிறான். அது ஜுக்கே-யின் உடம்பில் உள்ள பனி ரத்த விஷத்தின் முறிவு மருந்து இல்லை என்றாலும் ‘விஷத்தை விஷத்தால் எதிர்த்து போராடும்’ குணத்தின் படி இப்பொழுது கண்டுபிடித்துள்ள மருந்தை ஜுக்கே-வுக்கு அளிப்பதன் மூலம் அவன் உடலில் ஏற்கனவே இருக்கும் அந்த பனி ரத்த விஷம் குணமாகிவிடும் என்கிறான். அத்தோடு அந்த சிகிச்சையில் 7 நாட்களுக்கு கடுமையாக காய்ச்சல் ஏற்படும் என்றும், அந்த கண்டத்தில் இருந்து உயிர்பிழைத்தால் முழுமையாக குணமடைவார் என்றும் தோல்வியுற்றால் ஜுக்கே மரணம் அடைவது நிச்சயம் என்றும் மருத்துவன் சியாவோ ரான் எச்சரிக்கை செய்கிறான்.

தான் உயிர் பிழைப்பதற்கு ஒரு வழி இருந்தும், மயக்கத்தில் இருக்கும் ‘சிங்’ கண்விழிக்கும் பொழுது தான் அங்கே இருக்க மாட்டோமோ என்ற எண்ணிய ஜுக்கே யூ  தனக்கான மருத்துவ சிகிச்சையை உடனடியாக ஆரம்பிக்காமல் அவள் மயக்கத்தில் இருந்து எழுந்தவுடன் சிகிச்சையை மேற்கொள்ள விரும்புகிறான்.  ஆனால் அவன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இதற்கு மேலும் தள்ளி வைத்தால் நிச்சயமாக இறந்து விடுவான் என்று எண்ணி மருத்துவமும், மிங் லூ-ம் சேர்ந்து தந்திரமாக அந்த மூலிகைச்சாற்றை அவனை குடிக்க செய்கின்றனர். இதற்கிடையில் உடல் நலம் பெற்று சிங்-ம் எழுத்து விட, ஜுக்கே-வின் நிலையைப் பார்த்து அவனுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பிக்கிறாள். விஷ முறிவு மூலிகையினால் ஜுக்கே-ன் உடலில் எழும் காய்ச்சல் அவன் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவை எட்டிய போது, அவனை பனிக்கட்டிகள் கலந்த நீரில் முழுமையாக முழுகச் செய்வதன் மூலமே அந்த கடும் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியும், என்று மருத்துவன் சியாவோ ரான் ஆலோசனை கூற, அதன்படியே உரை பணி நீரில் அவனை இறக்கி அவளும் இறங்குகிறாள். அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு பனி ஏரியில் தாங்கள் இருவரும் இருந்ததும், தன்னை அவன் காப்பாற்றியதையும் எண்ணி பார்க்கிறாள். சிங்-ன் முயற்சியினாலும் மருத்துவமனின் சிகிச்சையினாலும் சில நாட்களுக்குப் பிறகு ஜுக்கே யூ முழு உடல் நலத்துடன் கண்களை திறக்கிறான். 

இதற்கு இடையில் யான் தேசத்தில் நகரின் நுழைவாயிலில் கோட்டையின் மீது மேலே தளபதி செங் மனதில் வருத்தத்துடன் யாரையோ எதிர்பார்த்தது போலவே நின்று கொண்டிருக்க, நுழைவாயிலின் வாசலுக்கு வந்து சேருகிறாள் ராணி ஹெலியன் லிங். பல நூறு மையில்களுக்கு அப்பால் பெண் தளபதி ஹுவான்-யிடம் இருந்து குதிரையைப் பெற்று அந்த குதிரையிலேயே பயணம் செய்து வந்ததன் காரணமாக, நுழைவாயில் வந்ததும் மயங்கி விழ இருக்கிறாள் ராணி. அப்போது வேகமாக வந்து தளபதி செங் அவளைத் தாங்கிக் கொள்கிறான். கண்விழித்த ராணி யான் தேசத்து தலைவனை காண வேண்டும் என்று கூற, அவளை அவனிடம் அழைத்துச் சொல்கிறான் தளபதி செங். ஏற்கனவே அரசனின் வெறுப்புக்கு தான் ஆளாகி இருக்கிறோம் என்ற நிலையில், ராணியின் மனம் தளபதியின் இந்த பரிவான நேசத்தால் மௌனம் கொள்கிறது. 

யான் தேசம் உள்நாட்டு முரண்பாடுகளால் பிளவு பட்டுக் கொண்டிருக்கிறது. யான் சூன்-னின் தலைமையின் மீது நம்பிக்கை இழந்த பல பழங்குடியின குழுக்கள் அவனிடம் இருந்து ராணுவத்தின் அதிகாரத்தை பறிப்பதற்காக ஒரு வாக்கெடுப்பை நடத்த விருப்பம் கொள்கின்றனர். அந்த யோசனையில் அடுத்து என்ன செய்வது என்ற கவலையில் ஆழ்ந்திருந்த யான் சூன்-னிடம் ராணி திரும்ப வந்து சேருகிறாள். தலைநகருக்குத் திரும்பி வந்த ராணி ஹெலியன் லிங் பெண் தளபதி ஹவான் இன்னும் உயிருடன் இருப்பதாக யான் சூன்-னிடம் தெரிவிக்கிறாள். 

தளபதி யோ ஹுவான் உயிருடன் இருப்பதாக ராணி கூறியதும், தனது அந்த பெரும் தவறினை இப்போது உணர்ந்த யான் சூன், தன் தளபதி செங், ராணி ஆகியோருடன் தளபதி யோ ஹுவான் இருக்கும் நகரத்திற்கு அவளை தேடிச் செல்கிறான். இங்கு பழங்குடியின பெண் தளபதி யோ ஹுவான்-க்கு ஒரு கடிதம் வருகிறது. யோங் தேசத்தின் ராணுவ தலைவனான ஏழாவது இளவரசன் ஸாவோ சே அவளிடம் இருந்து எடுத்துச் சென்ற கழுதைக்காக பெரும் பணமும், அத்துடன் ஒரு கடிதமும் அனுப்பியிருக்கிறான். அவன் இளவரசன் என்பது தளபதிக்குத் தெரியாதது போலவே, அவள் யான் தேசத்தின் முன்னாள் தளபதி என்று இளவரசனுக்கு தெரியாது. 

தளபதி யோ ஹுவான் தேடி அவள் இருப்பிடம் வந்த யான் சூன் அவளின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்கிறான். பிறகு அவளிடம் தான் யான் தேசத்தை இழக்கும் நிலையில் இருப்பதாகவும், அதை மீட்க தனக்கு உதவி செய்யும் படியும் கேட்கிறான். யோசித்த தளபதி ஹுவான் யான் தேசத்திற்கு தான் திரும்ப வர ஒப்பு கொள்கிறாள். ஆனால் யான் தேசத்து அரியணையின் மீது தனது தந்தைக்கு அடுத்து அவரைப் போலவே தனக்கும் இருந்த தனது ‘குருட்டு விசுவாசம்’ எப்பொழுதோ முடிந்து விட்டது என்றும், இனி தான் யாரையும் நம்ப போவதில்லை என்றும் விளக்கம் அளித்து, தனது தான் அங்கு வருவதற்கான நிபந்தனையையும் கூறுகிறாள். அதாவது யான் தேச படையில் இருக்கும் கருங்கழுகு படையில் சுமார் 5 ஆயிரம் வீரர்கள் தனக்கு கீழ் வரவேண்டும் என்றும், அவர்களுக்கு முழுமையான கட்டளையை தான் மட்டுமே வழங்குமாறு உள்ள அதிகாரமும் ஹுவான் கேட்கிறாள். அந்த படைவீரர்கள் அனைவருமே தனக்கு மட்டுமே பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் என்பதையும் நிபந்தனையாக கூறி உறுதி செய்கிறாள்.

யான் தேசத்தில் அதன் ஆளுமையில் இருந்து பிரிந்து செல்வதா வேண்டாமா என முடிவு செய்ய, அந்த தேசத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பழங்குடி இனத்தின் ‘மூத்தவர்கள்’ என்று அழைக்கப்படும் தலைவர்கள் இறகு அம்புகளைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தினர். அந்த வாக்கெடுப்பில் பிரிவினை தான் என்பது உறுதியாகக்கூடிய நிலையில் இறந்ததாக கூறப்படும் முக்கிய பழங்குடி இனத்தின் தளபதி யோ ஹுவான் அந்த மண்டபத்திற்குள் யான் சூன்-னுடன் வருகிறாள். யான் சூன்-நின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்திருக்கும் தலைவர்களிடம், யான் தேசத்தின் மன்னன் அவர்களுக்கு செய்த உதவிகளை நினைவு படுத்துகிறாள். ஆனால் அவர்கள் அந்த உதவிகள் தங்களுக்கு முந்தைய மன்னன் யான் சூன் தந்தை செய்தது என்றும், இப்போதைய மன்னன் மக்களை பற்றி நினைக்காதவன் என்றும் பழி சுமத்த, தளபதி ஹுவான் மன்னனிடம் இருந்து உதவிகளை பெற்றுவிட்டு, இப்போது அவரின் மகன் இக்கட்டில் இருக்கும் போது விட்டுவிட தான் விரும்பவில்லை என்றும், தான் இனி முட்டாள்தனமான பக்தியுடன் யான் தேச தலைவருக்கு சேவை செய்யப் போவதில்லை என்றாலும், இனி வரவிருக்கும் குளிர்காலத்தைச் சமாளிக்க நாம் பதின்மூன்று பழங்குடி இன தலைவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவள் வாதிட்டு, யான் சூன்-க்கு வாக்கு செலுத்துகிறாள். அவளைத் தொடர்ந்து ஒரு சிலரைத் தவிர மற்ற பழங்குடியின தலைவர்களும் யான் சூன்-க்கே தங்கள் வாக்கை செலுத்துகின்றனர். 

அத்தியாயம் 25 – இன் சுருக்கம்

அத்தியாயம் 27 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top