‘ஹுவோட்டு நீர்’ – மிகவும் ரகசியமான ஒரு மருந்து. பார்வையை மீட்டெடுக்க, இம்மருந்தை ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண்.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலிக்கிறாள்.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன்
Rebirth எபிசொட் – 5 சுருக்கம்
மறுநாள் காலையில், ஜுக்கே யூ விட்டுச் சென்ற மருந்தை ஒரு மருத்துவர் பரிசோதித்தார்; கண் காயங்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் ஓர் அரிய பொருளாகிய ‘ஹுவோட்டு நீர்’ அது என்பதை அடையாளம் கண்ட அவர், தனது கண்டுபிடிப்பை இளவரசனிடம் தெரிவித்தார். அதன்பின் இளவரசன் அந்த மருந்தை சிங்-ன் கண்களில் இட, அந்த மருந்தை அடையாளம் கண்டுகொண்ட சிங், தனது சந்தேகங்களை இளவரசனிடம் உறுதிப்படுத்தும் விதமாக, தான் ஜுக்கே யூ வின் மாளிகையில் இருந்தபோது அங்கு பயன்படுத்தியது இதே மருந்து தான் என்றும், முந்தைய இரவு தன் அறைக்குள் வந்தவன் ஜுக்கே யூ வாகத்தான் இருக்கவேண்டுமென்றும், கூறுகிறாள்.
சந்தேகம் அடைந்த இளவரசன் நள்ளிரவு வரை காத்திருந்து சிங்-ன் அறைக்குள் ஜுக்கே யூ நுழையும் முன் அவனைப் பிடித்து விடுகிறான். அவனிடம் சிங்-ன் சார்பாக அவள் யோசிக்கும் சந்தேகங்களையும், கேள்விகளையும் இளவரசன் கேட்கிறான். சிங்-ஐ காப்பாற்றுவதற்காக மேற்கு பிரதேசத்தில் வாழும் மன்னனிடம் இருந்து பெற்ற ஒரு உயிர்கொல்லி விஷத்தை தான் உட்கொண்டதாகவும், அது இப்போது தன் உடலை வாட்டி வதைப்பதையும் எடுத்து கூறி, இந்த நிலையில் அவளின் முன் வர விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறான். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட இளவரசன், அவளிடம் ஜுக்கே யூ இறந்து விட்டதாகவும், தன்னுடன் அங்கிருந்து கிளம்பிவிடுமாறு அவளை மீண்டும் ஒருமுறை வற்புறுத்தினான். இந்த முறையும் சிங் அதனை மறுத்து தான் அங்கேயே தங்குவதாக கூறி விடுகிறாள்.
சிகிச்சையின் ஆறாவது நாளில் சிங்-ன் பார்வை மேம்பட தொடங்குகிறது. அதனால் அவளால் தெளிவற்ற உருவங்களை காண முடிந்தது. அன்று இரவில் ஜுக்கே யூ மீண்டும் ஒருமுறை சிங் ஐ சந்தித்து மருந்தை அளிக்கும் பொழுது, இந்த முறை அவனிடம் நேரடியாக அவன் கையைப் பிடித்துக் கொண்டு கேள்வி கேட்கிறாள். அவனும் ‘தான் ஜுக்கே யூ இல்லை’ என்றும் ‘யூகி என்ற வேறொருவன்’ என்றும் ‘ஏரியில் ஏற்பட்ட காயங்களால் அவன் ஊமை அடைந்து விட்டான்’ என்றும் அவளின் கைகளில் எழுதி உணரச் செய்கிறான்.
எனினும் இன்னமும் நம்பாமல் இறுதி முயற்சியாக ஜுக்கே வின் இடது கையில் ஒரு தனித்துவமான பிறை வடிவ தழும்பு இருப்பதை நினைவு கூர்ந்து, அவனது அடையாளத்தை உறுதிப்படுத்த அவள் அவனது கையை பற்றி வருடிப் பார்க்க அவள் பேரதிர்ச்சுக்கு உள்ளாகும் வகையில் அங்கு அவனது உள்ளங்கை முற்றிலும் தழும்பேதுமின்றி வழுவழுப்பாக இருந்தது. ‘அவன் உட்கொண்ட விஷத்திற்கு உடலில் உள்ள பழைய தழும்புகள் அத்தனையையும் ஆற்றும் ஒரு பக்க விளைவு உண்டு’ என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. தன் முன்னே இருப்பவன் ஜுக்கே அல்ல என்பதற்கு இதுவே முழுமையான ஆதாரம் என்று கருதி சிங் கண்ணீர் மல்க மயங்கி சரிந்தாள். இறுதியாக அவன் தன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்து விட்டான் என்பதையும் அவள் ஏற்றுக் கொண்டு விட்டாள்.
அவளின் அறையை விட்டு வெளியே வந்த ஜுக்கே தன் உடல் அந்த விஷத்தால் மிகவும் சிதைய ஆரம்பித்துவிட்டதை உணர்ந்து கொள்கிறான். ‘தான் அதிக காலம் வாழ வாய்ப்பில்லை’ என்று அஞ்சிய ஜுக்கே அவளுக்கு மேலும் துயரத்தை வழங்குவதை விட மறைந்திருக்கவே முடிவு செய்து அங்கிருந்து சென்று விடுகிறான். சிங் தன் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்த நிலையில், லீ சே யுடன் அவனது தேசத்திற்கு செல்ல ஒப்புக்கொள்கிறாள்.
யான் தேசத்தில், யான் சூன் சுயநினைவின்றித் தொடர்ந்து கிடந்த நிலையில், மன்னர் இனி ஒருபோதும் சுயநினைவு பெறமாட்டார் என்று அனைத்துப் பழங்குடித் தலைவர்களும் நம்பத் தொடங்கினர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அத்தலைவர்களுள் ஒருவன், ஒரு கலகத்தைத் தூண்டிவிட்டான். யான் நிலப்பரப்பின் மீது அவன் படையெடுக்கவிருப்பதாகச் செய்தி கிடைத்ததும், யான் தேசத்தின் மிக முக்கியமான பெண் பழங்குடித் தளபதியாகவும், யானுக்கு அடுத்த நிலையில் அதிகாரம் வகிப்பவளாகவும் திகழ்ந்த ‘ஹுவான்’, அதனை எதிர்கொள்ள முன்வந்தாள். ஒரு முழு அளவிலான உள்நாட்டுப் போரைத் தவிர்க்கும் நோக்கத்துடனும், தனது சொந்தப் பகுதியின் விசுவாசத்தையும் யான் இராணுவத்தின் கௌரவத்தையும் துணையாகக் கொண்டும், அவள் யான் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மன்னருக்குப் பதிலாகப் படைகளை வழிநடத்தத் தொடங்கினாள்.
யோங் தேசத்தின் ஆற்றங்கரை, அந்த இடம் பியாண்டாங் தேசத்தின் எல்லை பகுதியும் கூட. அந்த ஆற்றங்கரையில் ஜாவோ சுன்’எர் அதாவது யோங் தேசத்தின் முன்னாள் இளவரசி நின்று கொண்டிருக்கிறாள். அவளுக்கு அருகில் வந்த அவளது சகோதரன் யோன் தேசத்தின் ஏழாவது இளவரசன் ஸாவோ சே ‘அந்த இடம் பாதுகாப்பற்றது’ என்று கூறி, தன் வீரர்கள் சிலருடன் மீண்டும் அவளை அரண்மனைக்கு போக சொல்லி வலியுறுத்துகிறான். அதை மறுத்தவள் அவன் பார்க்காத பொழுது அந்த ஆற்றில் குதித்து மறைந்து போகிறாள். ஆற்றில் மறைந்து போன இளவரசி ஜாவோ சுன்’எர் அங்கிருந்து அடித்துச் செல்லப்பட்டு, பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான் என்பவனின் கண்ணில் படுகிறாள்.
பியாண்டாங் தேசத்தை நோக்கி செல்லும் பயணத்தின் போது, சிங் மற்றும் லீசே இருவரும் ‘விளக்கு திருவிழா’ கொண்டாடும் ஒரு ஊரைக் கடக்கின்ற போது, லீஸே அவளை உற்சாகப்படுத்த அந்த திருவிழாவிற்கு அவளை அழைத்துச் செல்கிறான். அவர்கள் இருவரையும் ஜுக்கே பின் தொடர்கிறான்.
பியாண்டாங் நாட்டின் நுழைவாயிலில், பரிசோதனைக்காகக் காத்திருந்த ஒருவன், அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த ஒரு வண்டியில் சிங் அமர்ந்திருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான். சிங் ம் அவன் பார்வையில் இருந்து சட்டென்று மறைந்து கொள்கிறாள்.
அத்தியாயம் 6 – இன் சுருக்கம்
.