Rebirth சைனீஸ் நாடகம் அத்தியாயம் 14 – சுருக்கம்

.

Home > RebirthEpisode 14

ஹே சியாவோ – ஷியூலி இராணுவத்தின் தலைவன். ராணுவம் அழிக்கப்பட்ட போது, யான் தேசத்தின் மறைவிடத்தில் கைதியாக இருப்பவன். 

ஜான் ஜியு – பேரரசியின் ரகசிய அன்புக்கு உரியவன். சடங்குகளின் மாபெரும் அமைச்சர். [ அந்த காலத்தில் அங்கு ஜோதிடர்களின் அதிகமும், அவர்களின் சடங்குகளின் நிகழ்வுகளும் மன்னர்களின் அரண்மைகளில் மிக பிரபலம்.]

லீயான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன். தன் பாதுகாப்பில் இருக்கும் யோங் தேசத்து முன்னாள் இளவரசி ஜாவோ சுன்’எர்-ஐ நேசிக்கிறான்.

ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி – யான் சூன்-ஐ ஒருதலையாக காதலித்து ஏமாற்றப்பட்டவள். இப்போது பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் லீயான்-ன் பாதுகாப்பில் இருக்கிறாள்.

லிஞ்சங் – யான் தேசத்தின் முக்கிய பிரதேசம். கைதிகள் பரிமாறிக்கொள்ளும் இடமாக இப்போது உள்ளது.

சியாவோ ரான் – சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.

ஃபாங் மியாவ்மியாவோ – சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் பெண் வீரர். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறாள்.

.

Rebirth அத்தியாயம் 14 – சுருக்கம்

வரவேற்புத் தூதராகத் தனக்கிருந்த அந்தஸ்தைப் பயன்படுத்தி, லீ சே சிமெங் மன்னருக்கான கடவுச்சீட்டை தன் மன்னனிடம் இருந்து வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டான். லீ சே, சிங், மற்றும் சிமெங் மன்னன் முகமூடியோடு ஜுக்கே யூ ஆகியோர் தன் பரிவாரங்களோடு புறப்பட்டு நுழைவாயில் தாண்டுகையில், ஜான் ஜியு, சடங்குகள் அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வப் பயண ஆவணங்களுடன் அங்கு வந்து சேர்ந்து, இளவரசர் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று கேள்வியினை எழுப்பி தானும் அவர்களோடு பயணத்தில் இணைந்து கொள்கிறான்.

சிங் மற்றும் ஜுக்கே யூ ஆகியோருடன் இளவரசன் லீ சே செய்துகொண்ட ரகசிய ஏற்பாட்டின்படி, அவர்கள் கணவாயை அடைந்ததும், சிங்-வும் மன்னரும் ‘லின் நகரை’ நோக்கிச் செல்ல வேண்டும் என்றும், அதே நேரத்தில், தூதுக்குழுவின் எஞ்சிய உறுப்பினர்கள் தெற்கு நோக்கி ‘சியோங்ஜோ’விற்குத் திசைமாறிச் செல்ல வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஜான் ஜியு-வின் வருகையால் அவர்களின் திட்டங்கள் தடைபடும் சூழல் வந்து, ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் அதனை சமாளிக்கவேண்டிய அவசியம் உண்டாகிறது.

சிமெங் வீரர்களின் உடைமைகளை பியாண்டாங் வீரர்கள் சிலர் துழாவத் தொடங்கியபோது, ​​அங்கு ஆண் மாறுவேடத்தில் இருந்த வீரர்களில் ஒருவரான சிங் உண்மையில் ஒரு பெண் என்பதை 2 வீரர்கள் கண்டறிந்ததால், இரு தரப்பினருக்கும் இடையிலான உரசல் பெரிதாகியது. அவர்கள் சிங் ஒரு பெண் என்ற உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே, இளவரசன் லீ சே தலையிட்டு, சிங் முன்னரே தனக்குக் கற்றுக்கொடுத்திருந்த தற்காப்புக் கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தி, அந்த இரு காவலர்களையும் கொன்றுவிட, இளவரசனின் அத்தகைய அபாரத் திறமையை கண்டும், என்றைக்கும் இல்லாமல் இன்று இளவரசனின் தைரியம் கொஞ்சம் அதிகமாவதைக் கண்டும், ஜான் ஜியு திகைத்துப் போகிறான். என்றாலும் கொலைக்குக் காரணமான சிமெங் வீரர்களை கைது செய்ய உத்தரவிட, சிமெங் மன்னன் [ ஜுக்கே ] அங்கு வந்து அவர்களை தண்டிப்பது தனது உரிமை என்று அழைத்துச் சென்றுவிடுகிறான்.  

நள்ளிரவில், லீ சே மற்றும் ஜுக்கே இருவரும் சிங்-ற்குத் தேவையான வரைபடங்களையும் பயண அனுமதியையும் வழங்குகின்றனர். ‘லின் நகரம்’ என்பது யாங் இராணுவத்தின் மிக முக்கிய அரணாக இருப்பதால், ஹே சியாவைக் மீட்பது மிகவும் ஆபத்தான ஒரு செயலாக அமையும் என்றும் ஜுக்கே எச்சரிக்கை செய்கிறான். 2 வீரர்களைக் கொன்றது கொறித்து சிங் லீ சே-விடம் கேள்வி எழுப்ப, பேரரசியுடனான தனது உறவு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெறும் ஒரு பாசாங்காகவே இருந்து வந்ததாகவும், தான் சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் லீ சே அவளிடம் எடுத்துக்கூறுகிறான். அப்போது இருவரின் தோழமையோடான நெருக்கம் பார்த்து ஜுக்கே-வுக்கு லேசாக பொறாமை எழுகிறது. 

தலைநகரில், சாவோ சுன்’எரும், ‘லுவோ’ இளவரசரான லியானும் தங்கள் திருமணத்திற்கு அனுமதி கோரிப் பேரரசரைச் சந்திக்க முயல்கின்றனர். பேரரசன் எப்போதும் போல இப்போதும் மற்றவர்களை அலட்சிய படுத்தி, பெண்களுடன் இன்பமாக இருக்க, சக்கரவர்த்தி தங்களைச் சந்திக்க மாட்டார் என்பதை உணர்ந்த யோங் தேச இளவரசி அதிகாரமில்லாத இளவரசனை அங்கிருந்து நேராக பேரரசியிடம் அழைத்துச் செல்கிறாள். அங்கு பேரரசியை சந்திக்க விலைமதிப்பற்ற ஒரு பனிப் பச்சைக்கல் பதக்கத்தை அவள் பயன்படுத்துகிறாள். அது முன்னொரு காலத்தில் பியான்டாங் நாட்டிலிருந்து யோங் தேசத்தின் ‘நோபிள் கன்சார்ட்’ வெய்க்குப் [ அதாவது யோங் மன்னனின் துணைவிக்கு ] பரிசாக அளிக்கப்பட்டிருந்த பதக்கம் ஆகும். அதனைக் கண்ட பேரரசி அவளை மட்டும் உள்ளே அழைக்க, ஜாவோ சுன்’எர் மட்டும் உள்ளே போகிறாள். தான் இளவரசன் லியோன்-ஐ மணந்து கொள்ள அரசாங்கத்தின் அனுமதி கேட்க, பேரரசி அதனால் தனக்கு என்ன ஆதாயம் என்று கேட்கிறாள். 

பேரரசியின் அந்தப்புரத்தில் வைத்து, ஜாவோ சுன்’யர் ஒரு நுட்பமான யோசனையை அவளிடம் கூறுகிறாள். அதாவது தனது நடத்தையால் யோங் தேச மன்னனைப் பொறுத்தவரை தான் பதிவியிழந்த இளவரசி என்றாலும், இப்போது அதிகாரத்தில் இருக்கும் வருங்கால யோங் தேச மன்னன் தன் சகோதரன் என்றும், இந்த திருமணத்திற்கு அனுமதி அளிப்பதன் மூலம் தனது இளவரசி பதவியைத் தான் அதிகாரபூர்வமாக தான் திரும்ப பெற இயலும் என்றும், இராணுவத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தன் சகோதரனால் பேரரசிக்கு இது அனுகூலம் என்றும் கூறுகிறாள். கிடைக்கக்கூடிய அரசியல் ஆதாயத்தால் ஈர்க்கப்பட்ட பேரரசி, திருமணத்திற்கு அனுமதி அளித்து, அடுத்த மாதத்திற்கான தேதியையும் நிர்ணயித்தாள்.

சிங் அங்கிருந்து தான் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்த வீரர்களில் இருவருடன் புறப்பட, அவளை ஜுக்கே தொடருகிறான். சிங் ‘லின்’ நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு சத்திரத்தை அடைந்தபோது, ​​அங்கு ஜுக்கே தன்னை தொடர்ந்து வருவதைக் கண்டு கொள்கிறாள். அவர்கள் உணவருந்திக் கொண்டு இருக்கும் போது அங்குள்ளவர்கள் பல செய்திகளை வதந்திகளாக பேசுகிறார்கள். உள்ளூர்வாசிகள் தொடர்ச்சியான போரைப் பற்றியும், யான் நாட்டின் அரசனான யான் சூன், குறிப்பாக சிங்-ஐ வெளியே வரவழைப்பதற்காகக் கைதிகளைப் பரிமாறிக்கொள்கிறான் என்ற செய்தியைப் பற்றியும் பற்றி பேசுகிறார்கள். இது ஜுக்கே-வை வருத்தப்பட வைக்கிறது. 

சிங் தனது 2 தோழர்களுடன் ஹே சியாவோ-வை அடைக்கப்பட்டிருந்த சிறை முகாமைக் கண்டு பிடித்து, தீவைக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே கைதிகளை இடமாற்றம் செய்கின்றனர். தன்னுடன் வந்த இருவரையும் வேறு வேலையாக அனுப்பிய சிங் தனியாக ஹே சியாவோ-வை மீட்கச் செல்கிறாள். யான் தேச தளபதி செங் கைதி ஹே சியாவோ-வை தூண்டிலாக வைத்து முன்னேற்பாடாக சிங்-ஐ சிறைபிடிக்க ஏற்பாடு செய்தது போலவே சிங்-ம் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறாள். அவளை அங்கேயே கொள்ள முயலும் போது, ஜுக்கே யூ வந்து காப்பாற்றி அழைத்துச் செல்ல தளபதி செங்-க்கு ஜுக்கே யூ உயிரோடு இருப்பது தெரிந்து அவனையும் கொல்ல ஆணையிடுகிறான். 

அவர்களின் தப்பிக்கும் முயற்சியில் ஜுக்கே யூ வின் உடலில் உள்ள விஷம் மீண்டும் தன் வேலையைக் காட்ட, அப்போது தான் சிங்-க்கும் அவன் விஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. செங் யுவானின் வீரர்களால் துரத்தப்பட்ட அவர்கள், ஒரு உயரமான பாறையின் விளிம்பில் சுற்றிவளைக்கப்பட்டு, வாழ்வையும் மரணத்தையும் ஒன்றாக எதிர்கொள்வோம் என்று சிங் கூறியபடி, ஆழமான பள்ளத்தில் குதித்து தப்பிக்கின்றனர். இங்கே, சிங்-ஐ தான் கொல்ல முயன்றது, அவள் தப்பியது என்று, அன்றிரவு நடந்த நிகழ்வுகளுக்குச் சாட்சிகள் யாரும் இல்லாதவாறு செய்வதற்காக, செங் யுவான் கைதிகள் பரிமாற்ற காவலனைக் கொலை செய்துவிடுகிறான். 

அத்தியாயம் 13 – இன் சுருக்கம்

அத்தியாயம் 15 – இன் சுருக்கம்

.

Leave a Comment

Scroll to Top