.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். அவன் தந்தை கொலை செய்யப்பட்டதால் இப்போது அந்த நாட்டின் மன்னன்.
ராணுவ தளபதி மெங் –யோங் தேசத்தின் முன்னாள் தென்மேற்கு ராணுவ தளபதி. முந்தய பேரரசனுக்கு விசுவாசமானவன்.
தளபதி ஸிங் லே – யோங் பேரரசின் வெளிப்புற இராணுவ பலத்தில் பாதியளவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதி. யான் சூன்-னால் காப்பாற்றப்பட்டவன்.
கிங்ஷான் மன்றம் – இது யோங் தேசத்தின் ஒரு குறுநில பகுதி. ஜுக்கே குலம் இதனை ஆண்டு வருகிறது. யோங் தேச மன்னனுக்காக கொலைகளையும், விசாரணைகளையும் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. பெரும் ஓற்றர்களை உருவாக்கி, பயிற்சி அளிப்பதும் கூட இவர்கள் தொழில். ஜுக்கே யூ இந்த குலத்தின் வாரிசு.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து இளவரசி. பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட இளவரசனான லீயான்-ன் மனைவி. வயிற்றில் குழந்தையுடன் தன் தாய் தேசத்துக்கே அடைக்கலம் தேடி வந்த இடத்தில் தன் குழந்தையையும் இழக்கிறாள்.
குவான்ராங் தேசம் – மிகவும் மூர்க்கமான வீரர்களைக் கொண்ட பழங்குடியினத்தின் தேசம்.
சியாவோ ரான் – மருத்துவன், உயிரைப் பறிக்கும் நச்சு மூலிகை பரிசோதனை செய்பவன். ஜுக்கே யூ-வின் உடல் நச்சுக்கு அடிக்கடி சிகிச்சை செய்பவன். சிங் பயிற்சி அளித்த வீரர்களுள் ஒருவன். இப்போது சிங்-வுடன் பயணிக்கிறான்.
.
Rebirth அத்தியாயம் 39 – சுருக்கம்
ஜாவோ சே பட்டத்து இளவரசனாக இருந்த போது, அவனின் தந்தைக்கு விசுவாசமாக இருந்த யோங் தேசத்தின் முன்னாள் தென்மேற்கு ராணுவ தளபதி மெங்-ஐக் கொலை செய்ய கிங்ஷான் மன்ற தலைவன் ஜுக்கே யூ-க்கு ஆணை இட, ஜுக்கே அவனைக் கொள்ளாமல் தன் ரகசிய இடத்தில் சிறப்பு விருந்தினராக மறைத்து வைத்து, இளவரசனிடம் தளபதியைக் கொன்றுவிட்டதாக கூறுகிறான். இப்போது புதிய பேரரசர் ஜாவோ சே, அதிகார வேட்கையாலும் போர் வெறியாலும் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருப்பதை உணர்ந்த ஜுக்கே யூ, தான் ரகசியமாகப் பாதுகாத்து, ஒரு சிறப்பு விருந்தினராகத் தங்கவைத்திருந்த தளபதி மெங்கைச் சென்று சந்திக்கிறான். ஜாவோ சே அந்தத் தளபதிக்கு மரணதண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தபோதிலும், தென்மேற்குப் படையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அரச குடும்பத்திற்காக அல்லாமல், துன்பப்படும் மக்களின் நலனுக்காக நாட்டின் குழப்பத்தைச் சரிசெய்ய தனக்கு உதவுமாறு மெங்கைச் சம்மதிக்க வைக்கிறான் ஜுக்கே யூ.
இதற்கிடையில், முகமற்ற தெய்வக் கோவிலில் மக்கள் தலைநகரம் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும், உதவிக்காக மூர்க்கமான குவான்ராங் பழங்குடியினரை அழைக்க பேரரசர் எண்ணியுள்ளதாகவும் தங்களுக்கும் பேசி குழப்பம் கொள்கின்றனர். அந்நேரம் அங்கு ஜுக்கே யூ மற்றும் சிறு படைகளுடன் வந்த பேரரசன் ஜாவோ சே முகமற்ற தெய்வக் கோவிலின் உள்ளே தெய்வத்தின் முன் வழிபட்டுக்கொண்டிருக்கும் போது, சிலை தூள்தூளாக சிதறுகிறது.
மன்னனும் ஜுக்கே யூ-ம் தனியாக கோயிலின் கருவறையில் நின்று கொண்டிருக்கும் பொழுது, ஜுக்கே யூ மன்னனுக்கு எதிராக நின்று, அன்று மன்னன் கேட்ட வினாக்களுக்கு இன்று தான் பதில் அளிப்பதாக கூறிவிட்டு, தான் மன்னனின் கையாள் அல்ல, புகழ்மிக்க கிங்ஷான் மன்றத்தின் விசுவாசம் மிக்க நாயும் அல்ல என்று கூறிவிட்டு, கிங்ஷான் மன்றத்தின் தலைவனாக பொறுப்பேற்று ஸாவோ சே-ன் பக்கம் நின்று செயல்களை செய்ததற்கு ஒரே காரணம் யோங் தேசத்தில் ஸாவோ சே மற்றும் அவனின் தந்தை ஆகியோரைப் போன்ற மனிதர்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் என்று கூறிவிட்டு, இந்த கோயிலை சுற்றிலும் இருக்கும் வீரர்கள் கிங்ஷான் அவையின் வீரர்கள் என்றும் பேரரசரின் நடவடிக்கையால் அவர்களிடம் மன்னனுக்காக விசுவாசம் இருக்காது என்றும் உரைக்கிறான். அதேநேரம் மன்னனின் காவல் படை தென்மேற்கு ராணுவப் படையான தளபதி மெங்-ன் கீழ் செயல்பட்ட படை என்பதால் தளபதி மெங் வந்து ஆணையிட்ட உடன் மன்னனின் பாதுகாப்புக்கு நின்ற அத்தனை வீரர்களும் தளபதி மெங்-ன் பக்கம் வந்து விடுகின்றனர். இதனால் மன்னனுக்குப் பாதுகாப்பு வீரர்கள் இல்லாத நிலை உருவாகிறது.
எனவே ஜுக்கே யூ ஸாவோ சே-ஐ கோவிலின் உள்ளேயே சிறை வைத்து விட்டு, அந்த கோவிலுக்கு வரும் சிங்-ற்காக காத்திருக்கிறான். அதேநேரம் சிங் கோயிலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து ஜுக்கே-உடன் சண்டையில் ஈடுபடுகிறாள். அப்போது ஜுக்கே யூ வேண்டுமென்றே அவளின் வாளால் காயம்பட்டு சரிந்து விழுந்து ரத்தம் கக்குகிறான். அதிர்ச்சி அடைந்த சிங் காரணம் கேட்க, அவன் உண்மையை வெளிப்படுத்துகிறான். பணி விஷம் மற்றும் அதனை தடுப்பதற்காக முன்னர் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவன் சியாவோ ரான்-ன் வீரியமிக்க மாத்திரைகளின் விளைவுகளால் ஜுக்கே யூகே இறந்து கொண்டிருக்கிறான். எனவே தனது இறுதி நாட்கள் முடிவதற்குள் அடிமைத்தனத்தையும் போரையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற சிங்-ன் கனவை நினைவாக்க செயல்பட ஆரம்பித்ததாக கூறுகிறான். மன்னன் தனியாக கோவிலின் உள்ளே சிறை இருப்பதாகவும், வெளியே அவளுக்கு உதவக்கூடிய அளவில் தளபதி மெங் படையுடன் வந்து கொண்டிருப்பதாகவும் கூறிவிட்டு, அமைதியான காலத்தை உருவாக்க கடினமான பாதையில் தொடர்ந்து அவளை செல்லுமாறு அவன் வலியுறுத்தி கூறி மயங்கிச் சாய்கிறான்.
அன்று வரை ஆன ஜுக்கே யூ-வின் செயல்பாடுகளின் பின்னால் இருக்கும் முழு காரணத்தையும் அவனது உதவியாளன் எடுத்துரைக்கிறான். அதே நேரத்தில் குவான்ராங் இனத்தின் திருமண கூட்டணியினால் அவர்களின் வீரர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வடமேற்கு வாயில்களை ஆக்கிரமித்து நாடு முழுவதும் பொதுமக்களை படுகொலை செய்ய ஆரம்பிக்கின்றனர். இந்த படுகொலைகளுக்கு மத்தியில் தனது திருமண ஆடைகளை அணிந்திருந்த இளவரசி போர்க்களத்தின் வழியாக நடந்து சென்று நகர காவல் சுவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
குவான்ராங்-ன் அச்சுறுத்தல் சிமெங், யான் தேசம் மற்றும் பியாண்டாங் தேசம் ஆகிய பகுதிகளின் எல்லை பகுதி மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதால், சிங் மக்களைப் பாதுகாக்க ஒரு இறுதிப் போருக்குத் தயாராகிறாள். புறப்படுவதற்கு முன், அவள் ஜாவோ சே-வை அவனது சிறை அறையில் சந்தித்து, அவனிடம் ஒரு காலத்தில் இருந்த நேர்மை, மக்களின் வரிச்சலுகைக்காக போராடிய நல்ல மனம், மற்றும் குளிர் மற்றும் காயமடைந்த வீரர்களை கவனித்துக் கொண்ட நல்ல மனிதன் ஆகியவற்றை ஸாவோ சே-வுக்கு நினைவூட்டுகிறாள். அவனது தந்தையால் அவனின் தடம் மாறிய வாழ்க்கையை எடுத்துரைத்து விட்டு, இதுவரை அவள் பக்கம் இருக்கும் ஒவ்வொருவராக அவள் இழந்து கொண்டே வருகையில் கடைசியாக மீதம் இருப்பது ஸாவோ சே தான் என்று கூறிவிட்டு அவனுடன் சாதாரணமாக பேச வந்ததாக கூறி கிளம்புகிறாள். மனம் வருந்திய மன்னன் தன்னை மீட்டுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்புக்காக மன்றாடி, போர்க்களத்தில் ஒரு சாதாரண வீரனாக பணியாற்ற அவளிடம் கேட்கிறான். சிங் அவனது நேர்மையால், மனமாற்றத்தால் அவனை தன்னுடன் போரில் இணைந்து கொள்ள அனுமதிக்கிறாள்.
போருக்கு புறப்படுவதற்காக நின்று கொண்டிருந்த தனது ஒருங்கிணைந்த பெரும் படைக்கு முன்னாள் நின்ற சிங் அவர்களுக்கு தலைமையேற்று அவர்களை போர்க்களத்திற்கு வழி நடத்திச் செல்கிறாள். அதேபோல யான் தேசத்திலிருந்து யான் சூன் படையும், பியாண்டாங் தேச படையும் போருக்கு புறப்படுகிறது.
.