Secret Garden Korean Drama Episode 4 in Tamil Explained
Secret Garden korean drama tamil dubbed
இந்த 4வது எபிசோட் ஜோவனின் பல்பொருள் அங்காடி மாலில் ஜோவனும், கிளாராவும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில் இருந்து தொடங்குகிறது. [ எபிசோட் தொடங்கிய சில நொடிகளில் நம் கண்கள் விரிந்து, ‘ஆஹ்’ என்று வாய் பிளந்து, மனதில் கோபம் ஏறுவதை தவிர்க்க முடியவில்லை. ]

ஜோவன் தனது டிபார்ட்மென்ட் மாலில் கிளாரா நிற்பதைக் கண்டு, அவளிடம் என்ன என்று கேட்பதற்காக தனது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ”நீ இங்கு எந்த பொருளும் வாங்கவும் இல்லை, குலுக்களிலும் இடம் பெறவில்லை. ஆனால் ‘வாக்குவம் கிளீனர் பரிசு’ என்று போன் கால் மட்டும் வந்தது, இல்லையா?” என்று ஜோவன் கேட்க, அதற்கு ‘அவன் தான் அவளது பெயரை குலுக்கலில் சேர்த்தானா?’ என்று கிளாரா கேட்கிறாள். Secret Garden korean drama tamil dubbed
அவள் இவ்வளவு தூரம் ஒரு அற்பமான பரிசுப் பொருளை இலவசமாக வாங்க வந்திருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. [ அவனுக்கு அது அற்பம் தான் என்று எண்ணம் ] . ஒரு இலவச பொருளை வாங்க வந்த அவளது ஆசை தனக்கு அவமானம் என்பது போலவே அவன் கேள்வி இருந்தது.
அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்த ஜோவன், கோபத்துடனும் அருவருப்புடனும், “நீ ஒரு சின்ன வாக்குவம் கிளீனர் வாங்குவதற்காகவா நான் இதையெல்லாம் செய்வேன் என்று நினைக்கிறாய்? நீ ஒரு பிளாஸ்டிக் பையை விட மோசமான ஒரு பையைத் தூக்கிக்கொண்டு வருவது போதாதா? அந்த இலவசப் பொருளைப் பெறுவதற்காக மட்டும்தானா நீ இங்கே வந்தாய்? நான் உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும். என் வணிக வளாகத்தில் அந்த வாக்குவம் கிளீனர்-ஐ இலவசமாகப் பெறுவதற்காக மட்டும்தான் நீ இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்.” என்று கோபமாகவும், ஏளனத்துடனும் ஜோவன் கூறினான்.

கண்களில் கண்ணீர் தளும்ப, கிளாரா அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டே, “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டாள். ‘கிளாரா மனமுடைந்து அதிர்ச்சியில் இருக்கிறாள்’ என்பதை உணராமல், ஜோவன், “நான் சொன்னதை நீ சரியாகக் கேட்டுவிட்டாய் என்று நினைக்கிறேன்,” என்று கூறி, தான் முன்பு சொன்னதை அழுத்தமாக மீண்டும் கூறினான். கிளாராவின் அதிர்ச்சி கோபமாக மாறத் தொடங்கியது. பின்னர் ஜோவன், “குடும்பப் பின்னணியும், கல்வியும், எல்லாவற்றிற்கும் மேலாக தன்மானமும் இல்லாத ஒரு பெண்ணைக் காதலித்த நான் ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும்,” என்று கூறி அவளைக் கடுமையாக அவமானப்படுத்தி இழிவுபடுத்தினான்.
“எல்லோருடைய கண்களும் என் மீதுதான் இருக்கின்றன. உன் திரைப்படத்தை இங்கே படமாக்க நான் அனுமதி அளித்தேன். என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக, உனக்காக ஒரு விருந்தையும் ஏற்பாடு செய்தேன். ஆனால், என் மாலில் இலவசமாகக் கொடுக்கப்படும் ஒரு பொருளை எடுத்துக்கொண்டு, நீ என் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை என் ஊழியர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாயா? நான் உன்னிடம் நடந்து கொண்ட அதே மரியாதையுடன் உன்னால் என்னிடம் நடந்து கொள்ள முடியாதா?”என்று வெறுப்பை கொட்டி அவன் அவளிடம் கேள்விகள் கேட்க,
ஏதோ ஒரு உண்மையைச் சொல்ல முயற்சிப்பது போல, “நான்…” என்று தொடங்கி, அவள் தன் உதடுகளை அசைத்தாள், ஆனால் பிறகு அந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டாள்; அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது, அது பின்னர் ஒரு இயலாமை புன்னகையாக மாறியது. Secret Garden korean drama tamil dubbed
அதற்கும் அவன், “நீ சிரிக்கிறாயா?” என்று கேட்டான். கிளாரா ஆரம்ப அதிர்ச்சி குறைந்து பதிலளிக்கத் தொடங்கினாள், “நான் கோபமாக இருந்தபோது அழகாக இருப்பதாக நீங்கள் நினைத்தீர்கள். ஆனால் நான் சிரிக்கும்போதும் அழகாகத்தான் இருக்கிறேன், இல்லையா?” என்று தன் கண்களில் வெறுமையுடனும், குரலில் உணர்ச்சியின்றியும் கேட்டாள். “நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். நான் இங்கே வந்திருக்கக் கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள், நான் உங்கள் உணர்வுகளைப் பற்றி யோசிக்கவில்லை. நான் உங்களை சங்கடப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் போகிறேன். ஆனால் அதற்கு முன், நான் என் வாக்குவம் கிளீனர்-ஐ எடுத்துப் போக வேண்டும். அதை என்னிடம் கொடுங்கள்,” என்று சொல்லிவிட்டு, மேலும், “நான் ஏன் நீங்கள் என்னைப் பற்றி யோசிக்கும்படி நடந்துகொள்ள வேண்டும்? அதனால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது? அதனால் நான் என் பரிசையாவது எடுத்துக்கொள்கிறேன்,” என்றாள்.

[ இந்த இடத்தில் கிளாரா லேசாக தான் இங்கு வந்த காரணத்தை 'அது தான் அவள் உண்மையில் ஜோவனை பார்க்கத்தான் வந்தாள்' என்பதை வெளியிடுகிறாள் என்று நினைக்கிறேன். ஆனால் ஜோவன் முட்டாள் அவனுக்கு இருக்கும் ஆத்திரத்தில் அதை கவனத்தில் கொள்ளவில்லை போல.]
”தரமற்ற குடும்பத்தைச் சேர்ந்த, கல்வி அறிவு இல்லாத ஒரு பெண் அதை பயன்படுத்தினால் எதுவும் குறைந்து விடாது, அல்லவா?. அவ்வளவு அவமானமாக இருந்தால், அவள் வெறும் விளையாடிவிட்டு தூக்கி எரிந்த ஒருத்தி தான், என்று எல்லோரிடமும் சொல்லிக் கொள்ளலாம்,” என்று கிளாரா கோபமாகவும் இயலாமையுடனும் அழுத்தமாக கூறுகிறாள். korean drama in tamil


அவள் கடைசியாக கூறியவற்றை அவன் ”போதும் போதும் மேலே சொல்லாதே” என்று தடுக்க தடுக்க வலியுடன் கூறி முடிக்கிறாள். அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அவன் கோபத்தில் வெடித்து, ”தன்னால அப்படி சொல்ல முடியாது. ஏன் என்று சொல்லட்டுமா?” என்று கூறி அவளை அந்த பல்பொருள் அங்காடிக்குள் இருக்கும் ஒரு கடைக்குள் பலவந்தமாக இழுத்துச் செல்கிறான். பின் கோபமாக, ”விளையாட்டா? நான் உன்னுடன் விளையாடுவதா? நீ என்னுடன் விளையாடும் தகுதி கூட இல்லாதவள்,” என்று கத்திக்கொண்டே அங்கிருக்கும் காலணிகளையும், துணிகளையும் தூக்கி அவள் காலடியில் வீசுகிறான்.
”கஞ்சத்தனம் செய்வது உனது பொழுது போக்கு இல்லையா? அசுத்தம் செய்வது உனது சிறப்பியல்பு இல்லையா? என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்னை போன்ற ஒருவனுக்கு ஆடம்பரப் பொருள்களில் ஆர்வம் இல்லாதது போல பாசாங்கு செய்யும் ஒரு பெண் திறமையற்றவள், தேவையில்லாதவள்,” என்று வெறுப்பை அள்ளிக் கொட்ட, அவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்கிறாள். அவள் போவதை கையைப் பிடித்து தடுத்துக் கொண்டே, ”எங்கே போகிறாய் நீதானே விளையாட வேண்டும், என்று சொன்னாய். இதை அணிந்து காட்டு. அழகாக இருக்கிறதா? என்று நான் பார்க்கிறேன்,” என்று கீழே தூக்கிப் போட்ட துணிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அவளை கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு உடைமாற்றும் அறைக்குள் தள்ளி தானும் நுழைந்தான்.

கிளாராவை பிடித்து சுவற்றில் தள்ளியவன் “இதை அணிந்துகொள்,” என்று தான் வைத்திருந்த உடையை அவளிடம் நீட்டியபடி சொன்னான். ஆனால் கிளாரா சுவரில் சாய்ந்தபடி அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள். “இதை அணிய நான் உனக்கு உதவட்டுமா?” என்று அவளுக்கு மிக அருகில் வந்து ஜோவன் கேட்டான். அவள் அவனைச் சற்றுக் கோபத்துடன் பார்த்து, கசப்புடன், “நான் இதை அணிந்துகொண்டால் என்ன? என்னைப் போன்ற தகுதியற்ற ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.
அதற்கு ஜோவன், “ஒன்றும் இல்லை, நிச்சயமாக ஒன்றும் இல்லை. நான் உன்னிடமிருந்து எவ்வளவு வேறுபட்டவன் என்பதை நீ உணர வேண்டும் என்று விரும்புகிறேன். ‘நீ எங்கு இருக்க வேண்டும்’ என்பது எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்,” என்றான்.

“என்ன…?” என்று கிளாரா திடுக்கிட்டு கேட்டாள்.
அவள் குறுக்கிடாதது போல் ஜோவன் தொடர்ந்தான், “ஆனால் உன்னை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. உன்னைப் புரிந்துகொள்ள நீ எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருக்க வேண்டும்,” என்று அவளைப் பார்த்தபடி சொன்னான்.
“என்ன நேரம்? வறுமையைப் புரிந்துகொள்ளவா நேரம்?” என்று கிளாரா கேட்டாள்.
அதற்கு ஜோவன், “என் முயற்சிகள் உனக்கு வேடிக்கையாகத் தெரிகின்றனவா? குறைந்தபட்சம் நான் ஒரு முயற்சி செய்தேன். நீ என்ன செய்தாய்? நீ ஏதேனும் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்க இங்கு வந்திருந்தால்கூட நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். என்னை மிகவும் கோபப்படுத்துவது என்னவென்றால், நான் உன்னை முன்பே விரும்பியிருந்தபோதிலும், நான் யார், நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி நீ ஐந்து நிமிடங்கள் கூட யோசிக்கவில்லை,” என்று கசப்புடன் கூறிவிட்டு, அங்கே நிற்க முடியாமல் அவளிடமிருந்து விலகிச் சென்றான்.
ஜோவனின் செயல்கள்—அவர்களது சமூக அந்தஸ்துகள் எவ்வளவு வேறுபட்டவை என்பதைக் காட்ட, ஆதாரங்களை கிளாராவின் காலடியில் வீசியதும், அவளை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல் ஆழமாகப் புண்படுத்தும் விதத்தில் அவளிடம் பேசியதும்—அவளைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தின.
உணர்ச்சியற்ற, உயிரற்ற உருவம் போல அவள் அங்கிருந்து நடக்கத் தொடங்கியபோது, தான் செய்ததை தாங்கிக்கொள்ள முடியாத ஜோவன், தன் மார்பைப் பிடித்துக்கொண்டு வேறொரு இடத்திற்கு ஓடினான்.
இந்த நான்காவது அத்தியாயத்தின் முதல் 8 நிமிடங்கள் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளால் நிரம்பியுள்ளன. 'இது எப்படி நடந்தது?' என்ற ஆச்சரியம், 'ஐயோ கடவுளே!' என்ற அதிர்ச்சி, இறுதியாக, அவன் ஓடிப்போன விதத்தைப் பார்த்து, 'அவளிடம் எப்படி அவனால் அப்படிப் பேச முடிந்தது?' என்ற திகைப்பு, அவனது பெருமை மற்றும் சூழ்நிலையைப் பற்றிய புரிதல், ஆனால் அதே சமயம் 'இலவசமாக ஒரு பொருளை வாங்க வருவது குற்றமா?' என்ற கோபம் என, இந்த எண்ணங்கள் அனைத்தும் இந்த நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளர்களை முதல் 10 நிமிடங்களுக்கு ஆட்கொள்கின்றன.

கிளாரா ஒருவித மயக்க நிலையில் அங்கிருந்து வெளியேறி, தனது நடிப்புப் பள்ளிக்குச் சென்றாள். அவள் மிகவும் வெளிறிப் போயிருந்ததைக் கவனித்த சீனியர் விசாரித்தபோது, அவள் சமீபகாலமாக நிறைய பொய் சொல்வதாகவும், அதனால் அவளது நடிப்புத் திறமை மேம்பட்டிருப்பதாகவும் ஒருவித சோகத்துடன் கேலியாகக் குறிப்பிடுகிறான். கிளாரா அதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்து சென்றுவிடுகிறாள். அவளது அடுத்த செயல், ‘தனது விரக்தியைப் போக்க தீவிரமான உடல் பயிற்சிதான் ஒரே வழி’ என்று அவள் முடிவு செய்திருப்பதை உணர்த்தியது. உண்மையில், கார் சாகசப் பயிற்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் மீது தன்னை மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டு, தனது மன வலியைத் தணித்துக்கொள்ள அவள் முயன்றாள்.

கிளாரா அந்த நிலையில் இருந்தபோது, ஜோவன் தனது காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். வழக்கம் போல், அவன் நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதையில் நுழைந்தபோது, ஏற்கெனவே மன உளைச்சலில் இருந்ததால், அந்த குறுகிய பாதை அவனுக்கு எளிதில் மூச்சுத்திணறலையும் மங்கலான பார்வையையும் ஏற்படுத்தி, சில நிமிடங்களுக்கு அவனைத் திக்குமுக்காடச் செய்தது. தன்னைச் சுதாரித்துக்கொண்ட அவன், சுரங்கப்பாதையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தான், தனது காரை ஓரமாக நிறுத்தி, நடுங்கிய கைகளுடன் தனது தொலைபேசியின் ஸ்பீட் டயலில் உள்ள எண் 1-ஐ அழுத்தினான். south asian dramas in tamil
[ ஓ... அந்த எண் ஜோவனுக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவரின் தொலைபேசி எண். அதை அவன் அவசர எண்ணாக வைத்திருந்தால்... அவனுக்கு என்ன மாதிரியான உடல் அல்லது மனப் பிரச்சனை இருக்கிறது? அதனால்தான் அவன் கிளாராவிடம் அப்படிப் பேசினானா? அந்தச் சிறிய உடை மாற்றும் அறையில் கிளாராவிடம் பேசும்போது அவன் வியர்த்து, மூச்சுத்திணறலுடன் இருந்ததற்கு அதுதான் காரணமா? அதனால்தான் அவன் அப்படி வெளியே ஓடினானா? ]

ஜோவனின் வீட்டில், அவனது தோழி அவனைப் பரிசோதிக்கிறாள். “கடந்த சில நாட்களாக நீ நன்றாகத்தானே இருந்தாய். இப்போது என்ன ஆயிற்று? ஏதேனும் மன அழுத்தத்தினாலா?” என்று அவள் கேட்கிறாள். ஜோவன் சிறிது நேரம் தன்னைச் சமாளித்துக்கொண்டு, பிறகு தன்னை விசித்திரமாக நினைக்க வேண்டாம் என்றும், ஏனெனில் தான் இதைப் பற்றி ஒரு புத்தகத்தில் படித்ததாகவும் கூறுகிறான். பின்னர், “காதல் நோயின் அறிகுறிகள் என்ன?” என்று கேட்கிறான்.

ஜோவன் இப்போது தன் தோட்டத்தில் வெளியே அமர்ந்திருக்கிறான், கையில் ஒரு பூவை வைத்திருக்கிறான். அவன் ஒவ்வொரு இதழாகப் பறித்துத் தரையில் போடுகிறான். ஒவ்வொரு இதழைப் பறித்துப் போடும்போதும், “அவள் என்னைத் திட்டுகிறாள், அவள் என்னைத் திட்டவில்லை; அவள் என்னைத் திட்டுகிறாள்; அவள் என்னைத் திட்டவில்லை…” என்று சொல்லிக்கொண்டே வருகிறான். கடைசி இதழைப் பறித்துப் போடும்போது, அது “அவள் என்னைத் திட்டுகிறாள்” என்பதில் முடிகிறது. இது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவள் எப்படி அவனைத் திட்டலாம்? ‘தவறு செய்தது அவள்தான்’ என்று நினைத்து, தன்னைத் திட்டியதற்காக அவள் மீது கோபப்படுகிறான். அவன் கோபமாக எழுந்து அங்கிருந்து நடந்து செல்கிறான். அவள் மீது ஏற்கனவே இருக்கும் கோபத்துடன், ‘இந்த பூவின் கோபமும் அவளால்’ என்று ஆகி விட்டது போல….


[ நாடகத்தைப் பார்க்கும் நமக்கு இது வெகு ரசனையான ஒரு சீன். உண்மையில் அவன் 'அவள் என்னை திட்டுகிறாள், திட்டவில்லை..... திட்டுகிறாள், திட்டவில்லை...' என்று ஒவ்வொரு இதழாக பறித்துப் போடும் பொழுதும், அவனது அடி மனது ஆசை 'அவள் என்னை நேசிக்கிறாள், இல்லை நேசிக்கவில்லை..... அவள் என்னை நேசிக்கிறாள், இல்லை நேசிக்கவில்லை....' என்று அவன் கூறி ஒவ்வொரு இதழாக பறித்துப் போடுவது போலத் தான் எனக்குத் தோன்றுகிறது. ஹாஹாஹா....இவ்வாறு சொல்லி ஒரு ஆண் செய்வது 'எவ்வளவு ரசிக்கத்தக்க செயலாக இருக்கிறது. 'நம்மையும் அறியாமல் நம் முகத்தில் புன்னகை பூக்க செய்கிறது' இந்த காட்சி, என்பதை மறுக்கவே முடியாது இல்லையா? மிக அழகான காட்சி இது.]

ஆனால் அந்த காட்சி அத்துடன் முடிந்துவிடவில்லை; அவன் சென்ற பிறகும் அது தொடர்கிறது. அவன் அங்கே ஒரு பெரிய பூ இதழ்களின் குவியலை விட்டுச் சென்றிருக்கிறான். அங்கே, சிறிய மின்மினிப் பூச்சிகள் அந்தப் பூக்களைச் சுற்றிப் பறந்து, தங்கள் மாயாஜாலத்தைக் காட்டுகின்றன. அந்தப் பூக்களின் இதழ்களை எல்லாம் இழந்த மொட்டு பகுதியில் இருந்து, ஒருவித ஒளியுடன் கூடிய பிரகாசத்துடன் ஒரு கடைசி இதழ் மட்டும் மாயாஜாலமாக மீண்டும் வளர்கிறது. ஆஹா, அது எவ்வளவு அழகாக இருக்கிறது!

ஒருபுறம், ஓஸ்காவும் அவனது மேலாளரும் காணாமல் போன கிளப் பாடகியைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், பல்பொருள் அங்காடியில் ஜோவனின் தனிப்பட்ட உதவியாளருக்கும் கிளாராவின் தோழிக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு நிகழ்கிறது. அவர்கள் ஜோவன் மற்றும் கிளாராவின் உறவைப் பற்றியும், மாலில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கும்போதே, தங்களின் தனிப்பட்ட எண்ணங்களையும் கூச்சத்துடன் பரிமாறிக்கொள்கிறார்கள்.

இங்கு ஜோவன் மறுநாள் காலையில் கண்விழித்த போது சியூல் பக்கம் இருந்து அவர்கள் குடும்பத்தினரால் ஜோவனுக்கு ஒரு பரிசு அனுப்பப்படுகிறது. அவன் வெளியே சென்று பார்த்தபோது, ஒரு மான்களின் கூட்டத்தைப் பார்த்து நிற்கிறான். அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட ஜோவனின் கேள்வி இப்படி இருக்கிறது… ”இதை ஏன் அவர்கள் அனுப்பி இருக்கிறார்கள். இவை எல்லாம் நான் சாப்பிடுவதற்காகவா?”. இதைக் கேட்டு அவனது உதவியாளன் மட்டும் அல்ல அருகில் இருந்து அந்த பரிசை கொண்டு வந்து சேர்த்த உதவியாளனும் அதிர்ச்சி அடைகிறான். ஆனால் அது பற்றி எல்லாம் யோசிக்காமல் ஜோவன் அந்த மான்களைத் திருப்பி அனுப்பச் சொல்லி விடுகிறான்.
[ ஐயோ கடவுளே அந்த அழகான மான்களின் கூட்டத்தைப் பார்த்து இப்படி கூட கேள்வி கேட்க தோன்றுமா? ]

ஜோவனின் குடும்பத்தினர் மாதத்திற்கு ஒருமுறை கட்டாயமாக ஒரு இரவு விருந்து நடத்துகிறார்கள். இந்த முறை, அந்த மாதாந்திர குடும்ப விருந்திற்கு அவனுக்கு அழைப்பு வருகிறது. அதற்காக அவன் தன் தாத்தாவின் மாளிகைக்குச் செல்கிறான். அவர்கள் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, மறைமுகமான பேச்சுகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறார்கள். தாத்தாவின் இரண்டாவது திருமணத்தால் அவர்களுக்குள் ஒரு சிக்கலான உறவு இருப்பது போல் தெரிகிறது. இது ஜோவனுக்கும் அவனது தாய்க்கும் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. டிபார்ட்மெண்ட் மால்-ஐப் பற்றி பேச்சு எழுதுகிறது. ‘ஜோவனின் உடல்நிலை மற்றும் மனநிலை காரணமாக மாலை நிகழ்வு சரியாக நிர்வகிக்கப்படவில்லை’ என்று அதில் குறிப்பிட்டு, திரு. பார்க் என்பவருடன் சேர்ந்து அதை மேற்பார்வையிடுமாறு அவனுக்கு அறிவுறுத்துகிறார்கள். சிக்கல் என்னவென்றால், இந்த திரு. பார்க் தாத்தாவின் இரண்டாவது மனைவியின் உறவினர். திரு. பார்க் ஜோவனைத் தனியாகச் சந்திக்கும்போது, ”நீ ஏன் என் சகோதரியை வெறுக்கிறாய்? அவள் உன் ‘சண்டைப் பெண்’ணை விடச் சிறந்தவள்” என்று கூறி அவனைத் தூண்டிவிடுகிறார், இது ஜோவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது.

கிளப் மேடைப் பாடகனைக் கண்டுபிடிப்பதற்காக ஓஸகா ஜேஜூ தீவுக்குப் பயணிக்கிறான். அங்கு அவனைச் சந்திக்கும்போது, அந்த கிளப் பாடகன் (அவனது பெயர் ஹான் டே-சன்) தனக்கு இப்போது “ஒஸ்கா யார் என்று தெரியும்” என்று ஒப்புக்கொள்கிறான். அவன் ஒஸ்காவிடம் ஒஸ்காவின் இசை மற்றும் சில இரகசிய நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லிவிட்டு, “அது சரிதானே?” என்று கேட்கிறான். ‘இந்த மனிதனுக்குத் தெரியாதது என்று ஏதாவது இருக்கிறதா?’ என்று ஒஸ்கா வியக்கிறான். அவனைச் சம்மதிக்க வைக்க ஒஸ்கா எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும், டே-சன் அவனுடன் இணைந்து பணியாற்ற மறுத்துவிடுகிறான். தனது புகழுக்கு மத்தியிலும் தன்னை இவ்வளவு அலட்சியமாக நடத்திய ஒருவரை இதற்கு முன் சந்தித்தே இராத ஒஸ்கா, செய்வதறியாது திகைத்து அங்கேயே நின்றுவிடுகிறான்.

ஒஸ்கா தாய்லாந்தில் நடக்கவிருந்த தனது மியூசிக் வீடியோ படப்பிடிப்பிலிருந்து திடீரென்று விலகி ஜேஜூ தீவுக்கு சென்று விடுகிறான் இல்லையா, ஆனால் இது அந்த மியூசிக் வீடியோவின் இயக்குனருக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஏற்கனவே அவர் சியூல் கொடுத்த பெரும் பணத்திற்காக, தான் இயக்குவதில் இருந்து விலகிக் கொண்டு, அதனை ஒஸ்காவின் மேனேஜருக்கும் தெரியப்படுத்தி விடுகிறான். மேனேஜர் இப்பொழுது சிக்கலில் இருப்பதால் வேறு வழியின்றி சியூல் ஐ மியூசிக் வீடியோ இயக்குமாறு அழைக்கிறான். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒஸ்கா ஜேஜூ ஐலண்டுக்கு சென்றிருப்பது தெரிகிறது. ஏனென்று அவள் கேட்க, அதற்கு மேனேஜர் ‘அவன் புதிய திறமையாளனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள எண்ணுகிறான். ஆனால் அந்த கிளப் ஆடவன் மறுத்துவிட்டதால் அவனைத் தேடி அங்கு சென்று இருப்பதாக’ கூறுகிறான். ‘தன்னால் அவர்களை இணைத்து இந்த மியூசிக் ஆல்பத்தை இயக்க முடியும்’ என்று கூறி அந்த வாய்ப்பை தான் எடுத்துக் கொள்கிறாள் சியூல். அதன் பின்னர் நேரே ஆக்சன் பள்ளிக்குச் சென்று கிளாராவின் சீனியரிடம் அந்த ஆல்பத்திற்கு பணிபுரிய ஒப்பந்தம் செய்து கொள்கிறாள்.


கிளாரா ஜோவனுடன் நடந்த நிகழ்வைப் பற்றி மனக்குழப்பத்துடனும், வருத்தத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவளுடைய தோழி கிளாரா அங்கு விட்டு விட்டு வந்த வாக்குவம் கிளீனருடன் வந்து, கிளாரா அதை அங்கே விட்டுச் சென்றதாகவும், அதை எடுத்து கிளாராவிடம் திருப்பிக் கொடுக்குமாறு முதலாளி தன்னிடம் கூறியதாகவும் அவள் விளக்கம் சொல்லி விட்டு, மேலும் ”இது உனக்கு பிடிக்கவில்லையா?” என்றும் கேட்கிறாள். கோபம் கொண்ட கிளாரா, ”ஏன் எடுத்து வந்தாய்?” என்று கத்திவிட்டு, நேராக ஜோவனுக்கு அழைத்து, ”எதற்காக இதை எனக்கு திரும்ப அனுப்பி இருக்கிறாய்?. வந்து எடுத்துக் கொண்டு போ?” என்று கோபமாக கூற, அங்கு கலைப் பொருட்களை வாங்கும் வேலையை செய்து கொண்டு, சோகமாக இருந்த ஜோவன் முகம் தொலைபேசியில் அவள் பெயர் கண்டு சட்டென்று மகிழ்ச்சியாக மாறுகிறது. ஆனாலும் அந்த மகிழ்ச்சியை அவளுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டு, ”என்னை எளிதாக வாவென்றும் போவென்றும் சொல்வதற்கு நீ யார்? உனக்கு வேண்டாம் என்றால் அதை திருப்பி அனுப்பி விடு அல்லது தூக்கி எறிந்து விடு” என்று அலட்சியமாக கூறிவிட்டு தொலைபேசியை தூக்கி எறிகிறான்.

கிளாராவை அலட்சியம் செய்தாலும், இப்போது தெளிவாக ஆர்வத்துடன் கலைப் பொருட்களை வாங்கும் வேலையை தொடர்கிறான். அந்த கலைப் பொருட்களான ஓவியங்களை பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது, அவற்றில் ஒன்றில் வரையப்பட்டு இருந்த வீட்டில் சிறிது நேரத்திற்கு முன்பு விளக்குகள் எரிந்து கொண்டிருந்ததாக அவன் கூறியதை கேட்டு எல்லோரும் அவனை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ‘இருண்ட வீடாக வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து விலக்குகள் எப்படி எரியும்?’ என்று அவர்கள் அவனை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சென்ற பின்பு அந்த குறிப்பிட்ட இருண்ட வீடு ஓவியத்தில் உள்ள வீடு விளக்குகளால் வெளிச்சமாகிறது. south asian dramas in tamil
[ முன்பு ஒரு மாயாஜால காட்சி மலர் இதலினால் உண்டானது போல, இப்பொழுது இந்த இருண்ட வீட்டினால் அதே மாயாஜால காட்சி காட்டப்படுகிறது. 'என்னதான் சொல்ல வருகிறார்கள்?' ]
இங்கு கிளாராவின் வீட்டில் ‘அந்த வாக்குவம் கிளீனரை எப்படியாவது அவனிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும்’ என்று அவள் தோழியிடம் கூறிக்கொண்டு புறப்பட்டு கொண்டிருக்கிறாள். அதற்கு அவள் தோழி ‘முதலாளி டிபார்ட்மெண்ட் மாலில் இல்லை’ என்று கூற, அதற்கு அவள் உடனே தனது ஆக்சன் பள்ளிக்கு அழைத்து தனது தோழனிடம் ‘ஜோவன் அங்கு வந்த போது அளித்திருந்த வீட்டின் முகவரியை அனுப்புமாறு’ கேட்கிறாள். அந்தப் பள்ளியில் அந்த தோழன் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சீனியருக்கு இது வருத்தம் கொடுக்கிறது.
ஜோவனின் கண்ணாடி மாளிகையில் ஜோவன் மட்டும் தனியாக அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘உலக மக்களில் பாதி பேர் ஏன் பசியால் வாடுகிறார்கள்?’. [ ஒருவேளை இது கிளாராவை பற்றி புரிந்து கொள்வதற்கோ????] இங்கு கிளாரா அவனை சந்திப்பதற்கு தன் மோட்டார் சைக்கிளில் வருகிறாள். அங்கு மிகப் பெரிய பரந்த இடம் தென்படுகிறது. அங்கு ஆங்காங்கே பல பெரிய பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன. அங்கு வந்து கொண்டிருந்த பணிப்பெண்களை நிறுத்தி இங்கு ‘ஜோவனின் வீடுஎது?’ என்று கேட்க, ”இவை அனைத்தும் அவருடையது தான்” என்று பதில் கிடைக்கிறது. இது அவளுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

எப்படியோ ஜோவன் வசிக்கும் கண்ணாடி மாளிகையைத் தேடி கேட்டு வந்து விடுகிறாள். அங்கு வெளியே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஜோவனின் காலடியில் அந்த பொருளை வைத்துவிட்டு ‘அதை அவளுக்கு அனுப்பியதன் அர்த்தம் என்ன?’ என்று கோபமாக கேட்கிறாள். தன் உள் எண்ணங்களையும் குழப்பத்தையும் மறைத்துக் கொண்டு மீண்டும் அதே அலட்சியத்துடன் ஜோவனின் பதில் வருகிறது. ”முதல் முதலில் உன்னை மருத்துவமனையில் சேர்த்தபோதே அங்கேயே எனது செயலைத் தொடராமல் நான் நிறுத்தி இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை நீ எனது ஏழை பக்கத்து வீட்டுக்காரி தான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. இதை நீ எடுத்து போய் பயன்படுத்தலாம்,” என்று அலட்சியப்படுத்துகிறான். இது கிளாராவை மிகவும் கோபப்படுத்துகிறது. அவள் கோபத்துடன் சிரித்துவிட்டு, ”ஆம், நான் ஏழை தான். ஆனால் உங்களுடைய பக்கத்து வீட்டு ஏழையாக நான் ஏன் இருக்க வேண்டும்? உங்களைப் போல ஒரு பக்கத்து வீட்டுக்காரனை நான் விரும்பவில்லை. அதனால் நீங்களே இதை வைத்துக் கொள்ளுங்கள் .” என்று காலால் அந்த பொருளை ஒரு எத்து ஏத்தி விட்டுச் செல்கிறாள்.

அப்படி செல்லும் போது, பின்னால் ஒரு சத்தம் கேட்கிறது. அதனால் கிளாரா என்ன என்று திரும்பி பார்க்கும் பொழுது, அந்த பொருளை அவன் பக்கத்தில் இருந்த ஏரி தண்ணீரில் வீசி விட்டு, ‘தனக்கு அது தேவையில்லை’ என்றும் ‘அவளுக்கு அது வேண்டுமென்றால், அவளே அதை சென்று எடுத்துக் கொள்ளலாம்,’ என்றும் அவன் கூறுகிறான். அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துவிட்டு, நேராக அந்த ஏரிக்குள் இறங்கி, அந்தப் பெட்டியை வெளியே எடுத்து வருகிறாள், ஜோவனுக்கு அவளின் இந்த செயல் தாங்கவே முடியவில்லை. அவளைத் தடுக்க தடுக்க அவள் பெட்டியுடன் தன் பைக்கை நோக்கி சென்று கொண்டே இருக்கவும், அவளின் பைக்கின் சாவியை எடுத்து தண்ணீரில் வீசி எரிந்து விட்டு அவளைப் பார்த்து கோபமாக, ”என்ன மாதிரியான பெண் நீ? நான் அந்தப் பெட்டியைத் தூக்கி எறிந்தால், நீ என்னிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் அல்லது என்னை அதை சென்று எடுத்து வரச் சொல்லி இருக்க வேண்டும்,” என்று கத்த,
அதற்கு கிளாரா ”நான் இப்படி இந்த நிலைக்கு வர வேண்டும் என்று தானே நீங்கள் அவ்வாறு தூக்கி எறிந்தீர்கள்.”
ஜோவன், ”அந்த தண்ணீருக்குள் இறங்கி அதை எடுத்து வருவாய் என்று நான் சிறிதும் யோசிக்கவில்லை.”
கிளாரா, ”அதனால் தான் எனது மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்து வீசி எறிந்தீர்களா? சரி இப்போது நீங்கள் சொன்னது போலவே நான் கேட்கிறேன், போய் அந்த சாவியை எடுத்துக் கொண்டு வாருங்கள்.”
கிளாரா அமைதியாக இல்லாமல் இந்த முறை கோபமாக கத்துவதைப் பார்த்து இப்பொழுது அவனின் கேள்வி சட்டென்று மாறுகிறது. ”ஏன் நான் எடுத்து வர வேண்டும்? அதற்கு பதில் நான் மன்னிப்பு கேட்க முடியாதா?” இதைக் கேட்டதும் கிளாரா கோவம் அதிகமாகி தானே சென்று அந்த சாவியை எடுக்க முயற்சிக்கிறாள். அப்படி செல்லும் அவளைக் கையை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வருகிறான் ஜோவன்.

”என்னால் அதைப் போல நூறு வாங்க முடியும். முதலில் உன்னை நீ தூய்மைப்படுத்திக் கொள்,” என்று சொல்லிக்கொண்டே கிளாரா மறுக்க மறுக்க அவளை வீட்டை நோக்கி இழுத்து வர, அங்கே அவனது தாய் நின்று கொண்டிருக்கிறாள். [ ஜோவனே பணக்கார திமிரில் இருக்கும் போது, அவனது தாய் எப்படிப்பட்டவளாக இருப்பாள் என்பது அடுத்து வந்த வார்த்தைகளில் தெரிந்தது ] தாயைப் பார்த்து ஜோவன் ‘என்ன காரணமாக, எப்பொழுது வந்தீர்கள்?’ என்று கேட்க, அதற்கு அவள், ”உனக்கு வந்த பரிசைப் பற்றி கேட்க வந்தேன்,” என்று கூறுகிறாள். பின் அவள் கிளாராவை வெறுப்பாக பார்ப்பதையும், அவளை மட்டமாக பேசுவதையும் பார்த்த ஜோவன் ஆட்சிபிக்கிறான். ஒரு பணக்காரனை வலையில் சிக்க வைக்க முயற்சிக்கும் பெண்ணாக கிளாரா சித்தரிக்கப்பட்ட விதத்தால் கோபமடைந்த கிளாரா, அமைதியாகவும் உறுதியாகவும் தன் மறுப்பைத் தெரிவித்து, ஜோவான் முன்பு தன்னிடம் சொன்னதையே ஜோவனின் தாயிடம் இப்போது கிளாரா கூறுகிறாள். அதாவது ‘ஜோவனைப் போன்ற மிகப்பெரிய பணக்காரனுடன் விளையாட தான் இங்கு வரவில்லை, என்றும் தான் ஒரு ஏழை என்றாலும் கூட ஜோவனின் அந்த விளையாட்டுக்காக என்னை நான் தாழ்த்திக் கொள்ள மாட்டேன்’ என்றும் கூறி விட்டு, ”நான் போகிறேன்” என்று திரும்பி பைக் இல்லாததால் நடந்தே செல்கிறாள். இது அவனின் தாய்க்கு மரியாதை அற்ற செயலாக தெரிந்ததால் கோபம் கொள்கிறாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஜோவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எடுத்துப் பேசியவன், அவனது பிஏவுடன் ஒஸ்காவின் மேனேஜரைப் பார்க்க செல்கிறான். ‘எப்படியும் ஒஸ்கா ஜேஜூ ஐலண்டில் இருப்பதால் தனது டிபார்ட்மெண்ட் மாலின் போட்டி நிகழ்ச்சியுடன் சேர்த்து இசை வீடியோவையும் அங்கேயே படமாக்க வேண்டி இருக்கும்’ என்று எண்ணி அங்கு பேசிவிட்டு வீட்டிற்கு வரும் போது தான் கிளாராவின் பைக் இன்னும் அங்கேயே இருப்பது கண்டு அவளுடைய சாவியை எடுப்பதற்காக தானே ஏரிக்குள் இறங்குகிறான்.
கிளாரா தனது சண்டைப் பயிற்சிப் பள்ளிக்குத் திரும்பும்போது, ஒஸ்காவின் இசை வீடியோ படப்பிடிப்பிற்காக ஜேஜூ தீவில் ஒரு காட்சிக்கான கார் சாகசத்தைப் பற்றி தனது சண்டைப் பயிற்சி குழுவினர் விவாதித்துத் திட்டமிடுவதைக் காண்கிறாள். இதைப் பார்த்ததும், தனக்கு என்ன கதாபாத்திரம் கிடைக்கும் என்று அவள் உற்சாகமாகக் கேட்கிறாள். ஆனால், அந்தக் குழுவின் சீனியர் அவளுக்கு கார் சாகசங்களில் போதிய அனுபவம் இல்லை என்றும், அது ஆபத்தானது என்றும், அவள் தற்போது செய்யும் சண்டைக் காட்சிகளைத் தான் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அவள் விரும்பிச் செய்வதால் மட்டுமே அதற்கு அனுமதிப்பதாகவும் கூறி, அவளுக்கு அந்த வாய்ப்பை மறுத்துவிடுகிறான். இதைக் கேட்ட கிளாரா ஏமாற்றத்துடன் அங்கிருந்து செல்கிறாள்.
சிறிது நேரம் கழித்து எதோ யோசித்த அவளின் சீனியர், கிளாராவின் தோழிக்கு அழைத்து ‘தனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்கிறான். அதாவது அவன் வாங்கி அளிக்கும் ஒரு அழகான ஹேண்ட் பேக்கை கிளாராவின் தோழி அவள் வேலை செய்யும் இடத்தில் இருந்து வாங்கியது போல பொய் கூறி கிளாராவிடம் கொடுக்கும்படி சொல்கிறான்.
[ இதை அவனே நேரடியாக கிளாராவிடம் கொடுத்து தன் மனதில் உள்ளதை கூறியிருந்தால், கிளாராவின் வாழ்க்கை மாறி இருக்குமோ?.... 'கிளாரா ஜோவனுக்குத் தான்' என்று இருக்கும் பொழுது இவனின் விதி இப்படித் தானே யோசிக்கும்.]

கிளாராவும் அவளுடைய தோழியும் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, அந்தத் தோழி கிளாராவிடம் ஒரு கைப்பையை கொடுத்து, அதைத் தான் தனது வேலை செய்யும் இடத்தில் அவளுக்காக வாங்கியதாக கூறுகிறாள். அந்தக் அழகான கைப்பையைப் பார்த்ததும் கிளாரா மிகவும் மகிழ்ச்சி அடைகிறாள். பிறகு, அன்று ஒரு கார் துரத்தல் காட்சியில் நடிக்கும் வாய்ப்பைத் தான் தவறவிட்டுவிட்டதாக அவள் வருத்தத்துடன் கூறுகிறாள். அது ஒஸ்காவின் இசை வீடியோவில் கிடைத்த ஒரு வாய்ப்பு என்றும், ஆனால் அவளுடைய மேலதிகாரி அவளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னிடம் பணம் இருந்திருந்தால் விமான டிக்கெட் வாங்கி அங்கு சென்றிருப்பேன் என்றும் அவள் வருத்தத்துடன் சொல்கிறாள். அப்போது, அந்தத் தோழிக்கு அவளுடைய வேலை செய்யும் இடத்திலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. ஜோவானின் தனிப்பட்ட உதவியாளன் அந்தத் தோழியிடம் ஏதோ ஒன்றைச் சொல்வதற்காக அழைக்கிறான், அதற்கு அந்தத் தோழி ஆச்சரியத்துடன், “கிளாராவுக்கா?” என்று கேட்கிறாள்.
அலுவலகத்தில் ஜோவனும் அவனது உதவியாளனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜோவன் ”மாலில் நடத்தும் போட்டிக்கான பரிசை வென்ற போட்டியாளரை சந்தித்தாயா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது, அழைப்பு வருகிறது. அழைப்பு ஜேஜூ ஐலாண்டில் இருந்து ஓஸ்கா பேசுகிறான். ‘வேலை விஷயமாக ஒருவனை சந்திக்க ஜேஜூ வந்த போது சில ரவுடிகளுடன் ஏற்பட்ட சண்டையில் சிக்கி தான் காவல் நிலையத்தில் இருப்பதாகவும், தன்னை ஒரு பெண்ணை துன்புறுத்தியதாக கூறி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள்?’ என்றும் ஜோவனிடம் கூறுகிறான்.

ஏற்கனவே ஜோவனின் மியூசிக் வீடியோவில் பணிபுரியுவதை விட்டுவிட்டு ஜேஜூ தீவிற்கு ஒஸ்கா சென்று விட்டான் அல்லவா? இப்பொழுது மீண்டும் அதைப் பற்றி கூறி, ” இந்த முறை உன்னை காவல் நிலையத்தில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்றால் நீ எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா உனக்கு?” என்று ஜோவன் கேட்க, ஒஸ்கா மிகுந்த கோபத்துடன் ”சுற்றி வளைத்து பேசுவதை விட்டுவிட்டு முதலில் என்னை வெளியே எடுக்கும் வேலையைப் பார்” என்று கத்துகிறான். தொலைபேசியை அனைத்து விட்டு ஜோவன் ஒஸ்கா மீண்டும் தன்னிடம் மாட்டிக் கொண்டதை நினைத்து சிரித்தபடியே உதவிலாளனிடம் காவல் நிலையத்திலிருந்து ஒஸ்காவை வெளியே எடுக்கும் வேலையைச் செய்யச் சொல்கிறான்.
சொல்லிவிட்டு ஜேஜூ பயணத்தின் வெற்றியாளரை பற்றி ஜோவன் தன் பிஏவிடம் கேட்க, அவன் ‘முதல் பரிசு ஒரு கர்ப்பிணி பெண், இரண்டாம் பரிசு ஒரு வயதானவர் இருவருமே ஓஸ்காவுடனான தங்கள் பரிசை விட்டுக் கொடுக்க வேண்டி இருந்ததால் மூன்றாம் இடத்திற்கு உரியவர் வெற்றி பெற்றவர் ஆகிறார்’ என்பதை தெரிவிக்கிறான். வெற்றிப் பரிசாக மூன்றாம் பரிசைப் பெறவிருந்த நபர் கிளாரா, குலுக்கல் போட்டியில் ஒரு வாக்குவம் க்ளீனரை வென்றிருந்த கிளாராவுக்கு இப்போது தனது விருப்பமான பாப் பாடகருடன் விடுமுறைக் கொண்டாட்டத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதைக்கேட்ட ஜோவன் உடனடியாக, ”இல்லை நான்காம் இடம்… நான்காம் இடம் பிடித்தவருக்கு இந்த வாய்ப்பை வழங்கு,” என்று கத்துகிறான். ஆனால் அவள் ஏற்கனவே இந்த பயணத்தை ஒப்புக்கொண்டு ஜேஜூ தீவுக்கு கிளம்பி சென்று விட்டாள். அதுவும் கூட அவளுடைய ஸ்டாண்ட் குழுவினர் இதே மியூசிக் வீடியோ படப்பிடிப்பிற்காக அங்கே தான் இருக்கிறார்கள். இப்பொழுது ஜோவன் கேட்கிறான் ”ஓஸ்காவும், கிளாராவும் விடுமுறை கொண்டாட்டத்தில் இருப்பதற்கு நான் பணம் கொடுத்து இருக்கிறேன், இல்லையா?” என்று. [ அடடா…என்ன ஒரு வருத்தம். ஹா ஹா ஹா ஹா ]

மியூசிக் வீடியோவை இயக்கும் சியூல் குழுவினரும், அந்த வீடியோவிற்கான சண்டைக் காட்சிகளில் பணியாற்றும் சீனியர் குழுவினரும் அந்த தீவுக்கு வந்து சேர்கிறார்கள். அவர்கள் தாங்கள் தங்கும் அறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு சென்ற பின்னர், அவர்களுக்கு பின்னால் மறைந்து நின்றிருந்த கிளாராவை ஓஸ்கா கண்டுவிட்டு, ‘அவள் தான் அந்தப் போட்டியின் வெற்றியாளர்’ என்பதை அறிந்து அவன் ஆச்சரியப்படுகிறான். பின்னர், அவன் விதியை நம்புவதாகக் கூறி, அவளை மதிய உணவிற்கு அழைக்கிறான். இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே உணவருந்தும் பகுதியை நோக்கிச் செல்லும்போது, ஜோவன் ஏற்கனவே அங்கு அமர்ந்து, அவர்கள் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் குறை கூறுவதைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
இத்துடன் எபிசொட் 4 முடிவடைகிறது. மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம்.
Posts – Secret Garden Korean Drama Episodes Explained in Tamil
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 1
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 2
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 3
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 4
- சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 5
Tags,
korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 4 explain in tamil, Secret Garden korean drama tamil dubbed,
secret garden korean drama episodes explained in tamil, dramalookup,
.
