Secret Garden / சீக்ரெட் கார்டன் – எபிசோட் 3 விளக்கம் தமிழில் – Drama Lookup

.

Dramas > Korean Dramas > Secret Garden > episode – 3

சியோல் – ஓஸ்காவின் முன்னாள் காதலி. இப்போது ஜோவனின் திருமணத்திற்கு பார்க்கப்படும் பணக்கார பெண். [ இரண்டாவது கதாநாயகி ]

சே-ரின் – கிளாரா பணிபுரியும் படத்தின் கதாநாயகி. ஓஸ்காவின் பெண் தோழிகளில் ஒருத்தி. 

இம் ஜாங்-சூ – சண்டைப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளன். கில் ரா-இம் க்கு சீனியர். அவளை ஒரு தலையாகக் காதலிப்பவன்

ஹான் டே-சீயோன் – ஓஸ்கா தனது இசை ஆல்பத்திற்காக தேடும் ஒரு இசை கலைஞன். ஒரு இரவு விடுதியில் அவன் பாடி இசைப்பதை ஓஸ்கா பார்த்திருக்கிறான். 

ஆ-யங் – ரா இம்-ன் நெருங்கிய தோழி. ஆவலுடன் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கியிருக்கிறாள்.

கிம் – ஜோவனின் செயலாளர். ரா இம்-ன் தோழியை ஒரு தலையாக விரும்புகிறான். 

.

சீக்ரெட் கார்டன் எபிசோட் 3 விளக்கம்

ஹோட்டல் மாலில் நடைபெற்ற திரைப்படப் படப்பிடிப்பின்போது, ​​அங்கிருந்த அனைவரின் முன்னிலையிலேயே மிகவும் அமைதியான முறையில் ஜோவன் தான் கிளாராவின் மிகப்பெரிய ரசிகன் என்பதை இயக்குனரிடம் அறிவிக்கிறான். இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இதுவும் கிட்டத்தட்ட வெளிப்படையாக எல்லோரிடமும் தன்னை வெளிப்படுத்துவது போலத்தான்.

ஜோவன் படக்குழுவினர் அனைவருக்கும் உணவகத்தில் மதிய விருந்து அளிக்கிறான். இதற்கிடையில், ரா இம் இதையெல்லாம் பார்த்து எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் திகைத்து மௌனமாக அமர்ந்திருக்கிறாள். பின்னர் ஜோவன், ரா இம்-மைத் தனியாக அழைத்து, அனைவரும் பார்க்கும் வகையில் வெளிப்படையாக உணவருந்த அழைத்துச் செல்கிறான். இதைக் கண்ட படக்குழுவினர், அர்த்தம் பொதிந்த முணுமுணுப்புகளுடன் “ஓஹோ” என்கின்றனர். பொறாமையுடன் எதிர்வினையாற்றிய படத்தின் கதாநாயகி, ஒரு நக்கலான கருத்தைக் கூறுகிறாள். ஆனால், அவளை அற்பமானவள் என்று ஒரு சண்டைக் கலைஞர் கடுமையாக சாடுகிறான்.

அங்கே அவர்களுக்காக ஒரு அழகான, ஆடம்பரமான இரவு உணவு காத்திருந்தது. ஜோவன் அவளுக்காக ஒரு நாற்காலியை இழுத்துப் போடுகிறான். இந்த மரியாதையான செய்கைக்கு அலட்சியம் காட்டுவது போல் நடித்து, அவள் தனது தற்காலிக சங்கடத்தை மறைத்துக் கொள்கிறாள். இருப்பினும், இதற்கு முன்பு யாரும் அவளுக்காக நாற்காலியை இழுத்துப் போட்டதில்லை என்பதை ஜோவன் சரியாகவே ஊகித்துக் கொள்கிறான். அவர்கள் உரையாடும்போது, ​​அவன் சொல்வதெல்லாம் அவள் அமைதியாக தலையசைத்து ஒப்புக்கொள்கிறாள். அவளது உடனடி சம்மதம் ஜோவனுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவன் இதைப் பற்றிக் குறிப்பிட்டபோது, ​​அவள் கோபமாக இருக்கும்போதுதான் அவனுக்குப் பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும் என்பதால்தான் அவள் அமைதியாக இருப்பதாக ரா-இம் விளக்குகிறாள்; பின்னர், இனி ஒருபோதும் இப்படி நடந்துகொள்ளக் கூடாது என்றும், தனது அலுவலகத்திற்கு வரக்கூடாது என்றும் அவனிடம் கடுமையாக அறிவுறுத்திவிட்டு, எழுந்து நடந்து செல்கிறாள். ஜோவன் திகைத்துப்போய் அவளையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அவள் உணவகத்திற்குத் திரும்பியபோது, ​​அது காலியாக இருந்தது. அவள் சாப்பிடுவதற்காக, மீதமிருந்த ஒரு கிண்ணம் சாதத்தை எடுக்கக் கையை நீட்டினாள். அவளைப் பின்தொடர்ந்து வந்த ஜோவன், கோபமாக அதை அவளிடமிருந்து பறித்துக்கொண்டு, அவள் சற்று முன்பு பேசி முடித்த உரையாடலுக்கான விளக்கத்தைக் கேட்கிறான். அவள் புறப்பட எழுந்தபோது, ​​அவன் மீண்டும் அவள் மீது சீறி, அவள் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக மட்டுமே அவ்வாறு நடந்துகொண்டதாக விளக்கினான். [உண்மையில், மேலே இருந்த தனது இடத்திலிருந்து ஜோவன் அவளைக் கவனித்துக்கொண்டிருந்தான்—ஒவ்வொரு முறையும், குதிப்பதற்காக மேலே ஏறுவதற்கு முன்பு, அவள் படக்குழுவினர் அனைவருக்கும் முன்னால் படத்தின் இயக்குநரிடம் திரும்பத் திரும்பத் திரும்பி, “தயவுசெய்து என்னை மன்னியுங்கள்” என்று சொல்வதை அவன் கவனித்தான்.]

ரா-இம் அவனைத் திரும்பிப் பார்த்தவாறே, மன்னிப்புக் கோருவது என்பது தன் வாழ்க்கையின் எதார்த்தம் மட்டுமே என்றும், அது தனக்குப் பழகிப்போன ஒரு இயல்பான நிகழ்வு என்றும் கூறினாள். இனிமேல், தனக்கு உயர் மட்டங்களில் செல்வாக்குமிக்க தொடர்புகள் இருப்பதாக அனைவரும் கருதத் தொடங்குவார்கள் என்றும்; அதன் விளைவாக, முன்பைவிட இன்னும் அதிகமான சூழல்களில் தான் மன்னிப்புக் கோர வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்றும் அவள் மேலும் குறிப்பிட்டாள். தான் ஏதோ ஒரு தேவதைக் கதையில் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை என்றும்—மேலும், தன் செல்வச் செழிப்பை மற்றவர்களுக்குத் தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே இருக்கத் துடிக்கும் ஒரு ஆணின் தேவை தனக்கு அறவே இல்லை என்றும்—உறுதியாக அறிவித்த அவள், இனிமேல் அவனைச் சந்திக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு, அந்த உணவகத்தை விட்டு வெளியேறினாள்.

புறப்படுவதற்கு முன், தனது நிராகரிப்பைத் தெளிவாகத் தெரிவிக்கும் விதமாக, கிளாரா நான்கு ரூபாய் நோட்டுகளை மேசையின் மீது வைக்கிறாள். (இது அவன் செலவழித்த பணத்தில் ஒரு சிறு பகுதி மட்டுமே. இது இந்த உணவின் விலையையும் அவளது மருத்துவச் செலவுகளையும் குறிக்கிறது—இதன் மூலம் அவள் அநேகமாக அவர்களின் உறவை முடிவுக்குக் கொண்டுவர எண்ணியிருந்தாள்.)

எதிர்பார்த்தபடியே, படப்பிடிப்புத் தளத்திற்கு அவள் திரும்பியதும், அவளுடன் பணிபுரியும் மற்றொரு சண்டைக்கலைஞரான ஒரு ஆண் சக ஊழியர், அவளது செல்வாக்கையும் அவள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பான மதிய உணவையும் வெகுவாகப் பாராட்டுகிறார். இயக்குனர் கூட ரா-இமைப் புகழ்ந்து, அவளை மிகவும் கடினமான ஒரு சண்டைக்காட்சியிலிருந்து விடுவித்துவிட்டு, அதற்குப் பதிலாக அப்படத்தின் உண்மையான கதாநாயகியே, தனக்கு மாற்றாக வேறொருவரைப் பயன்படுத்தாமல் (body double), அக்காட்சியைத் தானே செய்யுமாறு பணிக்கிறார். இந்தச் சூழல் ரா-இமிற்குச் சற்று சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இயக்குனர் அங்கிருந்து சென்றதும், அப்படத்தின் கதாநாயகியான சே-ரின், தங்களுக்கிடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று ரா-இம் முன்னதாகக் கூறியிருந்த கூற்று குறித்து அவளை நேருக்கு நேர் கேள்வி கேட்கிறாள்; இதனால் திடீரெனச் சீற்றமடைந்த ரா-இம், தான் அவளுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் என்ன என்று திருப்பிக் கேட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்புவதற்காகத் திரும்பிச் செல்கிறாள்.

ரா இம்-ன் அலுவலகத்தில் அவளின் சீனியர் ஜாங் சூ-னிடம் , அங்கு வேலை செய்பவன் ஹோட்டலில் நடந்த அனைத்தையும் சொல்கிறான். இந்நிகழ்வு சீனியருக்கு அவ்வளவாக மகிழ்ச்சியை அளிக்கவில்லை, எல்லோருக்கும் நல்ல உணவு என்பதை விட, ரா இம் தனியாக உண்டாள் என்பதே வருத்தத்தை அளித்தது அவனுக்கு. அவன் தனது விரக்தியைப் போக்க பாறை ஏறும் பயிற்சிக்குச் செல்கிறான். அங்கும் அமைதி ஏற்படவில்லை.  

மேடை பாடகன் ஓஸ்கா-வின் செட்டில் தன் குழுவினருடன் அவன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட இருப்பவன் பாடகனின் முன்னாள் காதலியைப் பற்றி கூறுகிறான். ஓஸ்கா-விற்கு லேசான கோபம் வருகிறது. அவன் அது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவனது மொபைலுக்கு ஒரு போட்டோ வருகிறது. அந்தப் படத்தைப் பார்த்ததும் அவன் அதிர்ச்சி அடைகிறான். அது ஜோவானின் ஹோட்டலில் நடைபெறவுள்ள ஒரு விளம்பரப் பிரச்சாரத்தை அறிவிப்பதாக இருந்தது. அதில் ஓஸ்கா வின் உருவம் இடம்பெற்றிருந்ததுடன், ஒரு பரிசுப் பயணமும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஜோவானின் வேலைதான் என்று உறுதியாக நம்பிய ஓஸ்கா, அவனைத் தேடி அவனது வீட்டிற்கே செல்கிறான். 

ஜோவன் வீட்டில் அவன் ரா இம் கூறியவற்றையே யோசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது ஓஸ்கா வேகமாக வந்து அவனிடம் கோபமாக கத்துகிறான். தனக்குத் தெரியாமல் தான் எந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக கத்துகிறான். எந்தவித சலனமும் இல்லாமல், ஜோவன் தன் கசின்-ஐ அமைதியாக இருக்கும்படி கூறுகிறான். ஏனென்றால் எப்படியும் கடைசியில் அந்த விளம்பரத்தை ஓஸ்கா தான் செய்யப் போகிறான் என்பதை போல அவன் அமைதி இருக்கிறது. அதை ஓஸ்கா-வும் உணர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து பெருமூச்சு விடுகிறான்.

இன்று, செய்தித்தாள்களில் வந்த ஒரு உண்மை இல்லாத கட்டுரையின் அடிப்படையில், ஓஸ்கா புதிய திறமைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்கிறான். அதனால் ஓஸ்கா சில நாட்களுக்கு முன்னர் பார்த்த கிளப்பில் பாடிக்கொண்டிருந்த ஒரு பையனைக் கண்டுபிடிக்குமாறு தனது மேலாளரிடம் ஒரு புதிய திட்டத்தைக் கூறுகிறான்.

அன்றிரவு ஓஸ்கா தன் காதலியுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​ஜோவன் அங்கு வருகிறான். விடுமுறை கொண்டாட்டத்தைப் பற்றி அவனுக்கும், ஓஸ்காவுக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்படுகிறது. திடீரென்று ஜோவன் அவனிடம் ரா இம்-ஐப் பற்றிக் கூறி, அவளைப் போல கோபமும், அலட்சியமும் கொண்ட வேறு யாரையாவது அவனுக்குத் தெரியுமா என்றும், ஒரு பெண் ஓஸ்கா-வைத் திட்டும் போது, என்றாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றானா என்றும், வினவுகிறான். ஓஸ்காவுக்கு கோபம் வந்து, எரிச்சலுடன் மறுபடி ஜோவன் அவளைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டதாக குற்றம் சாட்டினாலும், அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தன் முன்னாள் காதலி அப்படித்தான் இருந்ததாக கூறுகிறான். [ ஹாஹா…போவதற்கு முன்னால் ஒரு சின்னதனமான காமடி வேறு ஓஸ்காவை வெறுப்பேத்த ஜோவன் செய்கிறான். ஓஸ்கா-வின் காதலி போட்டு இருக்கும் உடை முன்னர் அவனின் வேறு ஒரு காதலி போட்டிருந்த உடை தானே என்று கேட்டுக்கொண்டே ஜோவன் போக… ஓஸ்கா வெறுத்துப் போகிறான்.] Secret Garden korean drama tamil dubbed

ரா இம்-ன் ஜாங் சூ சீனியர் ஜோவனைப் பார்ப்பதற்காக அவனது அலுவலகத்திற்கு வருகிறான். தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பெனி ஆட்களுக்கு ஜோவன் மதிய உணவு வாங்கி கொடுத்ததை ஆட்சிபிக்கிறான். மேலும் ரா இம்-மிடம் வம்பு செய்ய வேண்டாம் என்றும் அவனை எச்சரிக்கிறான். அவள் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், அவள் வேலையில் அவள் மிகவும் திறமையானவள் என்றும், கூறிவிட்டு, அதனால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஜோவனிடம் ஜாங் சூ கூறுகிறான். ஆழ்ந்த குரலில் அமைதியாக கூறினாலும், ஜாங் சூ குரலில் எச்சரிக்கை தெரிந்தது. ஜோனுக்கு அது பிடிக்கவில்லை, என்றாலும் அமைதியாகவே தன் கருத்தை முன் வைக்கிறான். அதாவது அவளுக்கு தான் உதவ விரும்புவதாகவும், அதனால் இதில் அவன் குறுக்கே வந்து வம்பு செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறான். இருவரும் அமைதியாக பேசினாலும், ஒரு சூடான வாக்குவாதம் தொடங்குவதற்கு அடித்தளமான சூழ்நிலை அங்கு நிலவுகிறது. சீனியர் மேலும் அங்கு இருக்க விருப்பப்படாமல் எழுந்து வெளியே வந்து விடுகிறான்.

ஓஸ்கா விரைவில் வெளியிடும் மியூசிக் ஆல்பத்திற்கான வேலை விஷயமாக அவனின் முன்னாள் காதலி சியோல் வருகிறாள். அவள் ஓஸ்காவின் இடத்திற்கு வர, அங்கே அவன் இல்லை, அவனுடைய மேலாளரை மட்டுமே அவள் காண்கிறாள். அவர்கள் இருவரின் முன்னால் உறவுகளையும், அந்த வேதனையான கடந்த காலத்தையும் பற்றி அந்த மேலாளர் அறிந்திருந்ததால், அவன் அவளை பார்த்ததில் மகிழ்ச்சி அடையவில்லை, அவர்கள் மியூசிக் வீடியோ இயக்குனராக தான் வேலை செய்வது பற்றிய அவளுடைய திட்டத்தை அவள் கூற, ‘ஏற்கனவே வேறொருவரை தேர்ந்தெடுத்து விட்டதாக’ கூறி அந்த மேலாளர் அதை மறுத்து விடுகிறான். ‘இனிமேல் இங்கே வரவேண்டாம்’ என்றும் அவளிடம் கூறி விடுகிறான்.

ஓஸ்கா-வின் அலுவல் அறையில் இருந்து வெளியேறிய சியோல் ‘அவர்கள் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்’ என்பதை அறிய தன் நண்பன் ஒருவனின் உதவியைத் தொலைபேசியில் கேட்டபடியே அருகில் ஜோவனின் கண்ணாடி வீடு இருப்பதை அறிந்து அங்கு செல்கிறாள். அந்த நேரத்தில் ஜோவன் அங்கு வர, அவனிடம் விஷயத்தை கூறி விட்டு,ஜோவனுக்கு ஏதும் வேலை உள்ளதாவென்று கேட்டு, தனக்கு எந்தவேளையும் இப்போது இல்லை என்று மகிழ்வோடு கூற,  அதைக் கேட்ட ஜோவன் லேசான சிரிப்புடன் அவளைத் தனியாகவே மகிழ்ந்து இருக்கக் கூறிவிட்டு சென்றுவிடுகிறான். 

வீட்டினுள் சென்ற ஜோவனுக்கு ரா இம்-ன் எண்ணங்கள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ரா இம்-ன் அந்த நான்கு ரூபாய் நோட்டுகள். அவை அவனை மிகவும் எரிச்சல் அடையச் செய்கிறது. சிறிது யோசனையுடன் முடிவாக, அவன் தன் மருத்துவ தோழியை அழைத்து ‘ரா இம்-ன் மருத்துவ கட்டணத்திற்கான ரசீதை’ கேட்கிறான்.

ரா இம் தனது அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலமாரியின் முன் நின்று கொண்டிருந்தபோது, ஜோவன் அவளைக் காண வருகிறான், கிளாரா அவனிடம் அவனை இங்கு வரவேண்டாமென்று கூறியதை நினைவு படுத்த, ஜோவன் மறுத்து தான் தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொள்ளவே இப்பொழுது வந்திருப்பதாகவும் கூறி அவளிடம் ‘ஐந்து டாலர்கள்’ கேட்கிறான். அப்பொழுது அந்த அளவுக்கு ரா இம்-மிடம் பணம் இல்லை என்பதால் இருவருக்கும் இடையே ஒரு சிறிய வாக்குவாதம் எழுகிறது. ஜோவன் ‘ரா இம் கோபத்துடன் அங்கிருந்து செல்லும் வரை’ அவளை இன்னும் கொஞ்சம் சீண்டி பார்க்கிறான். அதனால் ரா இம் தன் அலமாரி கதவை வேகமாக அடித்து சாற்றி விட்டு அங்கிருந்து கோபமாக செல்கிறாள். அதில் அலமாரி கதவு லேசாக திறந்து கொள்ள, இப்பொழுது அந்த அலமாரி ஜோவனின் கண்ணில் படுகிறது.

ரா இம்-ன் லாக்கருக்குள் எட்டிப் பார்க்கும் எண்ணத்தை ஜோவனால் தவிர்க்க முடியவில்லை. பார்த்துக் கொண்டே வந்தவன், அவளும் அவள் தந்தையும் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, அவனின் போனில் புகைப்படம் எடுக்கிறான். பிறகு அவள் ஒரு ரசிகையாக அங்கு ஒட்டி வைத்திருந்த ஓஸ்கா-வின் புகைப்படத்தை பார்த்ததும் அவனுக்கு பொறாமை ஏற்படுகிறது. அந்த புகைப்படத்தில் ஒஸ்கா-வுடன் போஸ் கொடுக்கும் பெண்ணின் முகத்தின் மீது ரா இம்-ன் முகம் ஒட்டப்பட்டிருக்க, கோபத்துடன் ஜோவன் அந்தப் புகைப்படத்தை எடுத்து கசக்கி போடுகிறான்.

ரா இம் சண்டைக் குழுவினருக்கு பயிற்சிகளை அளித்துக் கொண்டிருக்கிறாள். அங்கு வந்த ஜோவன் வேண்டும் என்றே, மற்றொரு சண்டை கலைஞரின் உதவியை மறுத்து, ‘தனக்கு காலை பிடித்துக் கொள்ள ஒருவர் தேவை’ என்று ரா இம்-மிடம் கூறுகிறான். அவள் எரிச்சல் அடைந்தாலும், வேறு வழியில்லாமல் அவன் சொன்னதை செய்ய, அவனது கால்களை பிடித்துக் கொண்டு, அவனை ‘சரியாக செய்ய’ சொல்கிறாள். ஆனால் அப்படிச் சொன்னது தன்னையே கூச்சப்படுத்தும் என்றோ, கோபப்படுத்தும் என்றோ ரா இம் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் ஜோவன் அவளை சீண்டி விட செய்யும் செயல் அவர்களை ஆபத்தான நெருக்கத்தில் நேருக்கு நேராக கொண்டு வந்து நிறுத்துகிறது. அவள் இந்த நெருக்கத்தில் சங்கடமாக உணர்ந்து கூச்சத்துடன் தன் பார்வையை தாழ்த்துகிறாள். அதே நேரத்தில் ஜோவன் ஒவ்வொரு முறையும் பயிற்சி முடிக்கும் போது, அவளை நேருக்கு நேராக பார்ப்பதே ரசிக்கிறான். [ ‘சிட் அப்’ – உடற்பயிற்சி இவ்வளவு ரசனையான காட்சியாக இருக்கும் என்று யாருக்கு தெரியும்? ]

ஜோவன் ரா இம்-ன் அழகைப் பற்றி பேசி, அவளைக் கூச்சப்படுத்துகிறான். அதில் அவளுக்கு மேலும் கோபம் வந்து அவனை உதைத்து விட்டு வெளியேறுகிறாள். நேராக மாடிக்குச் சென்று நின்ற ரா இம்-ன் பின்னோடு ஜோவனும் வேகமாக வருகிறான். அவனிடம் தான் மிகவும் கோபமாக இருப்பதை கூறி அவனை எச்சரிக்கை செய்துவிட்டு, அவனை ஆழ்ந்து பார்த்து அவன் தன்னிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றிக் கூறி அவன் ஒருவேளை தன்னை விரும்புகிறானோ என்று கேட்கிறாள்.

ரா இம் பேசும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜோவன் பிறகு அவளைப் பார்த்து தன்னைப் பார்த்தால் பைத்தியமாகவும் முட்டாளாகவும் தெரிகிறதா என்று கேட்டுவிட்டு, அவளை மாதிரி ஒருத்தியைத் தன்னைப்போல ஒருவன் விரும்ப முடியுமா என்றும், அவளைப் போல தகுதியே இல்லாத ஒருர்த்தியாக இல்லாமல் தன்னை மிக மிக தகுதியான எத்தனையோ பெண்கள் திருமணம் செய்து கொள்ள வரிசையில் காத்திருக்கிறார்கள் என்றும் நிதானமாக கூறுகிறான். அவனுடைய பதில் ஒரு திட்டவட்டமான மறுப்பைப் போலத் தோன்றினாலும், அவன் அவளின் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்பதை உணரலாம். 

அதில் ரா இம் எரிச்சல் அடைந்து அவன் தன்னை எப்பொழுதும் பின் தொடர்ந்து வருவதற்கான காரணத்தை கேட்க, அதற்கான காரணம் அவனுக்கே தெரியவில்லை. அதனால் அவன் தனது குழப்பமான மனநிலையையே எடுத்துக் கூறுகிறான். அதாவது தான் எப்போதும் அவளைப் பற்றிய நினைத்துக் கொண்டிருப்பதாகவும், தன் அருகில் எப்பொழுதும் அவள் இருப்பது போலவே தான் உணர்வதாகவும் கூறுகிறான். மேலும் சிறு ஆச்சரியத்துடன்… அவள் தனக்கு என்ன செய்து விட்டாள் என்றும், தனக்கு மட்டும் ஏன் இப்படி என்றும், தன் சிந்தனையில் இருந்து அவளை வெளியேற்ற ஏதேதோ புரியாத வார்த்தைகளை தான் சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அவளிடம் புலம்பியவன், தான் ரா இம்-மிடம் மென்மையாக நடந்து கொண்டாலும் கூட அவள் கோபப்படுவதாகவும், விரட்டி விடுவதாகவும், வன்முறையாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டுகிறான். உண்மையில் அவள் விசித்திரமானவள் தான் என்றும் அந்த விசித்திரமே அவளை நோக்கி தன்னை இழுக்கிறது என்றும் அவனின் கையறு நிலையை அவளிடம் எடுத்துரைக்கிறான். அவள் அவன் கூறுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். எல்லாவற்றையும் கூறிவிட்டு கடைசியாக இனி தான் இங்கு வரப்போவதில்லை என்றும் அதனால் பணத்தைத் திருப்பி கொடுக்க தன்னிருப்பிடத்திற்கு அவளை வரச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து சென்று விடுகிறான்.

ஓஸ்கா தனது பின்னணி நடன கலைஞர்களுடன் ஒத்திகை பார்த்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அவனது மேலாளர் வந்து, ஏற்கனவே ஒஸ்கா கண்டுபிடிக்க சொன்ன கிளப் பாடகனை கண்டுபிடித்து விட்டதாகவும் அவனுக்கு ஓஸ்கா யார் என்றே தெரியவில்லை என்றும் கூறுகிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஒஸ்கா மேலாளரிடம் இருந்து போனை பிடுங்கி, அவனுக்கு போன் செய்து, ‘தான் ஓஸ்கா’ என்று கூற, அதற்கு எதிர்முனையில் இருக்கும் பாடகன் ஓஸ்கா-வின் இசையை தான் ஒரு முறை கூட கேட்டதே இல்லையென்பதால் தான் ஓஸ்காவை சந்திக்கவேண்டுமெனில் அவனின் இசையை அந்த பாடகனுக்கு அனுப்பச் சொல்கிறான். மிகப் பிரபலமான தன்னை அவன் அடையாளம் கண்டு கொள்ளாதது ஓஸ்கா-விற்கு ஒரு தனிப்பட்ட அவமானமாக தோன்றுகிறது. ஆனால் அந்தப் பாடகனோ ஒரு கடையில் நின்று கொண்டு, தனது கீபோர்ட்டை ஏனோ விற்றுக் கொண்டிருக்கிறான். மேலும் பாடல்கள் எழுதுவதையும் விட்டுவிட முடிவு செய்துள்ளான். 

ரா இம்-ன் தோழி ஆ-யங் ஒரு அறிமுகம் இல்லாத நபருடன் டேட்டிங் [ அதாவது சாப்பிட்டுக் கொண்டே பெண் பார்ப்பது ] செல்கிறாள். ஆனால் அங்கு சென்றதும் தான் தெரிந்தது தன்னுடன் வேலை பார்க்கும் மேல் அதிகாரி கிம் [ ஜோவனின் செயலாளர் கிம் ] தான் அது என்று. கிம் ”ஐந்து ஆண்டுகளாக….” என்று ஏதோ சொல்ல தொடங்கும் போது, அவன் இத்தனை காலமாக தன்னைப்பின் தொடர்ந்து வருவதாக ஆ-யங் நினைத்து, உடனடியாக அந்த உணவகத்தை விட்டு வெளியேறி விடுகிறாள். அவள் வெளியே வந்ததும் கைகளில் மத்தாப்புகளை ஏந்திய படி, அவளுடன் பணிபுரியும் மற்ற ஆண்கள் அவளை வரவேற்கிறார்கள். அப்போது கிம் ஒரு இனிய புன்னகையுடன் அவளை வரவேற்று அவளுடைய ஐந்து வருட பணி நிறைவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறான். அந்த ஏற்பாடுகள் தனது ஐந்து வருட பணி நிறைவுக்கு என்று அப்போது தான் அவளுக்குப் புரிகிறது. அதனால் மகிழ்ந்து அவ்வாறு சட்டென்று எழுந்து வந்ததற்கு வருந்துகிறாள் ஆ-யங்.

இதற்கு இடையில் வீட்டில் ரா இம் தனது தொலைபேசியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது ஜோவனிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதனால் அவள் ஒரு ஆடம்பரமான பப் போன்ற உணவகத்திற்கு அவனை சந்திக்க செல்கிறாள். இப்பொழுது அவளுடைய மனநிலை சிறிது மாறி இருக்கிறது. முதல் முறையாக லேசான விருப்பத்துடன் செல்கிறாள். அவர்களின் சந்திப்பின்போது ரா இம் ஜோவனுக்கு ஒரு பீர் வாங்கி கொடுப்பதாக சொல்கிறாள். அதே நேரத்தில் ஜோவன் அவளுடைய பழைய கிழிந்து போன கைப்பையையும், அதை ஊக்கால் குத்தி சரிசெய்த விதத்தையும் பார்க்கிறான். அவனுக்கு கோபம் வர ஆரம்பிக்கிறது. ‘அவள் லேசாக மனம் மாறி இருக்கிறாள்’ என்பதை உணராமல், மெதுவான குரலில் அழுத்தமாக கத்த ஆரம்பிக்கிறான்.

மிக நீண்ட உரையாடல் என்பதால் வார்த்தைகள் அப்படியே…
”என் வாழ்க்கையில் முதல்முறையாக நான் சமாளிக்க முடியாத ஒரு பெண்ணை பார்க்கிறேன். இதற்கு முன்னால் நான் எத்தனையோ லாப நட்டங்களை கணக்கிட்டு இருக்கிறேன். ஆனால் இப்பொழுது நான் பார்க்கும் இந்த சிறிய பையின் விலை எவ்வளவு? என்பதை என்னால் கணக்கிட இயலவில்லை. சிறிதளவாவது என்னை பற்றி யோசித்து இருந்தால் நீ இந்த இடத்திற்கு என்னைப் பார்க்க கவனமாக வந்திருப்பாய். வெறும் இரண்டு டாலருக்காக நான் உன்னை இங்கே அழைத்து இருக்கவில்லை, இல்லையா? உன்னிடம் இந்த ஒரே உடையும், இந்த பையும் தான் இருக்கிறதா? நல்லதாக ஒரு சிறிய பை வாங்கக்கூடிய அளவு கூட உன்னிடம் இல்லையா? அல்லது அதற்கு உனக்கு நேரம் இல்லையா? பதில் சொல். ஒரு புதிய ஹேண்ட்பேக் கூட வாங்க முடியாத அளவுக்கு உள்ள ஒரு பெண்ணிடமா நான் ஆசை வைத்தேன்,” என்று கடுமையாக கேட்கிறான்.

அவன் தன்னை என்னமாதிரி நினைத்திருக்கிறேன் என்பதை அறிந்து , அதிர்ந்து கலங்கிய ரா இம் அவனிடம் வெறுமையான குரலில் அவன் தன்னைத் தவறாக புரிந்துகொண்டிருப்பதாகவும், தான் பணம் கொடுக்கவே இங்கு வந்ததாகவும் கூறிவிட்டு, தன்னிடம் இருந்த இரண்டு டாலர் ரூபாய்களை அவனின் முன் எடுத்து வைத்து விட்டு சென்று விடுகிறாள். 

ரா இம் கிளப்பில் இருந்து வெளியே வரும் போது ஓஸ்காவும் அங்கு வருகிறான். தன்னை ஒரு பிரபலமாக மதிக்க தயாராக இல்லாத அந்த முகம் தெரியாத இசை கலைஞனைப் பற்றி மிகுந்த கோபத்தில் இருக்கிறான். ஆனாலும் அந்த நேரத்தில் அங்கு ரா இம்-ஐப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அவளிடம் பேச அவளை நிறுத்துகிறான். அதே நேரம் ஜோவனும் க்ளப்-ல் இருந்து வெளியே வருகிறான். ரா இம் செல்வதை தடுக்க ஓஸ்கா அவளுடைய கைப்பையைப் பற்றி இழுக்கும்பொழுது, ஏற்கனவே கிழிந்திருந்த பை முற்றிலும் கிழிந்து அறுந்து விடுகிறது. இது ஜோவனுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் ஒஸ்கா-வோ ஜோவன் செய்தது போல கோபப்படாமல், மாறாக ரா இம்-ன் சமயோகித புத்தியை பாராட்டுகிறான். ஆனாலும் கூட அங்கு வந்த ஜோவன் இதை பார்த்து விட்ட இந்த நிகழ்வு அவளை மேலும் பாதிக்கிறது. அதனால் ஜோவனைப் பதட்டத்துடன் பார்க்கிறாள். ஆனால் ஜோவனோ ஒரு வார்த்தையும் பேசாமல் கோபத்துடன் அங்கிருந்து காரை எடுத்துச் சென்று விடுகிறான்.

ஓஸ்கா காண வந்த இசைக்கலைஞன் ஹான் டே-சீயோன் அந்த கிளப்பை விட்டு வெளியேறி விட்டான் என்பதை தெரிந்த பிறகு, ஓஸ்கா ரா இம்-ஐ தன்னுடன் சிறிது நடக்க அழைக்கிறான். அவளும் சம்மதிக்க இருவரும் நடக்க ஆரம்பிக்கிறார்கள். ரா இம் சோகமாக இருப்பதை பார்த்து ஆறுதலாக ஒருவரின் மனதை காயப்படுத்தக்கூடிய வன்மையான சொற்களை சொல்லுவதில் ஜோவன் மிகவும் திறமைசாலி என்றும் அவனுடைய தாயின் கருவறையை விட்டு வெளியில் வரும் பொழுதே அவனது மரியாதையான நடத்தையையும் விட்டுவிட்டு வந்து விட்டதாகவும் கூறுகிறான். பிறகு மெதுவான குரலில் என்ன விஷயம் என்று கேட்க, ரா இம் மழுப்பலாக ‘ஒரே ஒரு கைப்பையின் மூலம் தாங்கள் ஒருவருக்கொருவர் தங்கள் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விதமான உறவு’ என்று பதில் சொல்கிறாள். 

பிறகு ஓஸ்கா விளையாட்டாக என்றாலும் அவனுக்கு தேவை என்பதால் ஓஸ்கா ரா இம்-மிடம் ஜோவன் அவளிடம் ஏதும் பெரிய விஷயமாக செய்து விட்டானா என்று கேட்டு, அதனால்தான் எப்பொழுதும் அவன் அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறானா என்றும் தெரிவித்துவிட்டு, அவ்வாறெனில் அது என்ன என்று தன்னிடம் கூற முடியுமா என்றும், தனக்கு அது தேவைப்படுகிறது என்றும் ஓஸ்கா அவளிடம் கேட்கிறான். இப்பொழுது ரா இம் சிறிது ஆச்சரியமாக அவனைப் பார்த்து அவர்கள் இருவருக்கும் என்ன உறவு என்றும், ஏன் இப்படி பேசுகிறான் என்று கேட்க, அதற்கு அவன் இருவரும் உறவினர்கள் என்றும்,ஜோவன் இதை யாருக்கும் தெரிய விடமாட்டான் என்றும், தங்களுக்குள் ஒரு குழப்பமான குடும்ப உறவு இருக்கிறது என்றும் கூறுகிறான். இந்த விஷயம் ரா இம்-க்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. மேலும் இன்னொரு விஷயமும் கூட… அது ஜோவன் அவளைப் பற்றி பேசுகிறான்! அதுவும் எப்போதும்! 

அவர்கள் இருவரும் நடந்து செல்லும் பொழுது, ஜோவனின் சகோதரி அவர்களை பார்த்து விட்டு வருகிறாள். ஓஸ்கா அவளை அறிமுகப்படுத்த, அவளோ கிண்டலாக ரா இம்-மிடம் ஓஸ்கா-விடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறுகிறாள். பின் இருவரும் ஜோவனைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். ஜோவன் ‘சியோல்’-உடன் ஒரு அறிமுக டேட்டிங் சென்றதாகவும், ஆனால் சியோல் ஜோவனைப் பிடிக்காமல் நிராகரித்து விட்டதாகவும் வதந்தி பரவி இருக்கிறது என்று ஜோவனின் சகோதரி கூறுகிறாள். சியோல் பற்றிக் கேட்டவுடன் ஓஸ்கோ-வின் புன்னகை மறைந்து முகம் யோசனையில் ஆழ்கிறது.  [ சியோல்-ன் பெயரைக் காப்பாற்றுவதற்காக ஜோவன் கொடுத்த யோசனை தான் அது. தான் அவளை நிராகரிக்கவில்லை பதிலாக சியோல் தான் தன்னை நிராகரித்து விட்டாள் என்று…]

ஓஸ்கா காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, தனக்கும் சியோல்-க்கும் இடையில் இருக்கும் உறவை நினைத்து பார்க்கிறான். பல ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வு அது. அவன் பிரபலமாக ஆகத்தொடங்கிய நேரம், அவனுடைய ரசிகைகள் அவனை சூழ்ந்து கொள்வதைப் பார்த்து கோபத்தோடு பொறாமை பட்டு அங்கிருந்து சியோல் சென்றதை இப்போது நினைத்து பார்க்கிறான்.

அந்த இரவு இரு உறவினர்களான ஜோவனும், ஒஸ்காவும் வீட்டின் வெளியே நடந்து கொண்டே பீர் குடிக்கிறார்கள். முதலில் தனித்தனியாக, பின்னர் ஒன்றாக…[ அவர்களின் வார்த்தையாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது, ரசனைக்குரியதாக….அவை அப்படியே கீழே 👇👇👇 ‘]

இருவரும் தான் தான் முதலில் பேசி பதில் கேட்க விரும்புகிறார்கள். இதில் இருவருக்கும் பதில் கிடைக்காமல் மாற்றி மாற்றி கேள்விகளை மட்டுமே கேட்கும் முரண்பாடாக வெளிப்படுகிறது.
ஜோவன் : உன்னிடம் ஒரு கேள்வி
ஓஸ்கா : உன்னிடம் ஒரு கேள்வி
ஜோவன் : நான் தான் முதலில் கேட்டேன்
ஓஸ்கா : நான் தான் முதலில் கேட்டேன்
ஜோவன் : அவளை நீ வீட்டிற்கு அழைத்துச் சென்றாயா?
ஓஸ்கா : இந்த முறை உன் டேட்டிங் எப்படி இருந்தது?.
ஜோவன் : புதிதாக ஒன்றும் இல்லை. அவள் என்னைப் பற்றி பேசினாளா?
ஓஸ்கா : ‘நீ தான் நிராகரிக்கப்பட்டாய்’ என்பது உண்மையா?
ஜோவன் : ஏதாவது கொஞ்சமாவது….
ஓஸ்கா : அப்படித்தானா?
ஜோவன் : “அவள் இன்னும் அந்த பழைய பையைத் தான் வைத்திருந்தாளா? ஒரு பிளாஸ்டிக் பை கூட இதைவிட நன்றாக இருக்கும்.”

கேள்விகள் இப்படியே தொடர ஒரு கட்டத்தில் ஒஸ்காவுக்கு கோபம் வந்து விடுகிறது. சட்டென்று அவன் ஜோவனிடம் பெற்றோர் ஏற்பாடு செய்யும் பணக்கார பெண்ணைத் தான் திருமணம் செய்யப்போகிறான் என்பதால், ரா இம்-ஐப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, ஜோவன் கடைசி முறையாக டேட்டிங் சென்ற பெண்ணை பற்றி சொல்லுமாறு கேட்கிறான். அதற்கு ஜோவன் தான் நிராகரிக்கப்பட்ட வதந்தியையே பதிலாக கூறிவிட்டு ரா இம்-ஐப் பற்றிக் கேட்கிறான். உடனே ஓஸ்காவிற்கு சந்தேகம் வந்து அவனது புகைப்படம் ஏதாவது ரா இம்-மிடம் மாட்டி இருக்கிறதா என்பது போல கேட்க, எரிச்சலுற்ற ஜோவன் தான் தான் அவளுடைய புகைப்படத்தை எடுத்ததாக கூறிவிட்டு சென்றுவிடுகிறான்.  [ முன்னர் அவளின் அலமாரியில் இருந்து அவளின் புகைப்படத்தை எடுத்தான், இல்லையா? அதைத்தான் இப்பொழுது கூறுகிறான் போல…]

ரா இம்-மிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில், லோயல் பல்பொருள் அங்காடியில் நடந்த ஒரு பரிசுப் போட்டியில் அவள் வெற்றி பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அது தன் தோழி வேலை செய்யும் இடம் என்பதால், அவள் தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறாள். ஆனால் ‘இதில் அவளின் முதலாளிக்கு தான் அதிகம் சம்பந்தம் இருக்க முடியும்’ என்று அவளுடைய தோழி ஆ-யங் எடுத்துக் கூறுகிறாள். அவளுக்குள் ஏதோ யோசித்து தோழியிடம் அவளுடைய கைப்பையை ஒரு நாளுக்கு இரவலாகக் கேட்கிறாள்.

என்ன முயன்றும் ஜோவனால் ரா இம்-ஐ மறக்க இயலவில்லை. அதனால் ஜோவன் அவளுடைய பழைய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே தன் காரில் அமர்ந்திருக்கிறான். யோசனையுடன் ரா இம்-ன் அழைப்புக்காகக் காத்திருந்து சோர்வடைந்த அவன், காரிலிருந்து இறங்கி கதவை நோக்கிச் செல்கிறான். கதவைத் தட்டத் தன் கையை உயர்த்துகிறான் ( தட்டும் போது மிகவும் சுத்தமான தன் கை அழுக்காகாமல் இருக்க, ஒரு கைக்குட்டையால் கையைச் சுற்றிக்கொள்கிறான் ). ஆனாலும் கூட பிறகு அவன் தயங்கி, பெருமூச்சு விட்டு, அந்த முடிவைக் கைவிடுகிறான்.

மறுநாள், ஜோவன் தன் செயலாளர் கிம்-முடன் பல்பொருள் அங்காடியில் நடந்து செல்லும்போது, ரா இம்-ஐ சந்திக்கிறான். ரா இம் தான் இரவலாக வாங்கிய பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, தனது பரிசைப் பெற வந்திருக்கிறாள். இருவரும் தங்கள் பாதையிலேயே நின்று ஒருவரையொருவர் உற்றுப் பார்க்கிறார்கள்.

     இங்கு இந்த நாடகத்தின் விளக்கத்தை தமிழில் படித்துவிட்டு netflix ல் இந்த நாடகத்தைப் பார்த்தால் எளிதில் புரியும். 

சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 2

சீக்ரெட் கார்டன்: அத்தியாயம் 4

.

Tags,

korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 3 explain in tamil, 

.

Leave a Comment

Scroll to Top