.
Dramas > Korean Dramas > Secret Garden > episode – 5
கிம் ஜூ-வோன் – பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பணத்திமிரும், ஆணவமும் கொண்ட புத்திசாலி . தனது குடும்பத்திற்குச் சொந்தமான ஆடம்பரமான ராயல் டிபார்ட்மென்ட் ஸ்டோரை நடத்துகிறார். [ நாம் இவனது பெயரை ஜோவன் என்று அழைப்போம் ]
ஓஸ்கா – ஆசியா முழுவதும் பிரபலமான பாடகர். ஆனால் இவனுக்கு இசைத் திறமை இல்லை. பாடகராக இருப்பவனுக்கு இசைத் திறமை முக்கியமாக கருதப்படுவதால் இசைக் கலைஞரைத் தேடிக்கொண்டு இருப்பவன். பெண்களிடம் இதமாக பேசி மயக்கும் தன்மை கொண்ட காசினோவா. ஜோவனின் உறவினன்.
கில் ரா-இம் – ஒரு சண்டைப் பயிற்சிப் பள்ளியில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றுகிறாள். படங்களில் சண்டைக்காட்சிகளில் டூப்-ஆகவும் வேலை செய்கிறாள். அவள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவளது தந்தை இறந்துவிட்டதால், அவள் கடினமாக உழைக்கிறாள், எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருப்பதை விரும்புவதில்லை. [ நாம் இவளது பெயரை ரா இம் என்று அழைப்போம் ]
சியோல் – ஓஸ்காவின் முன்னாள் காதலி. இப்போது ஜோவனின் திருமணத்திற்கு பார்க்கப்படும் பணக்கார பெண். [ இரண்டாவது கதாநாயகி ]
இம் ஜாங்-சூ – சண்டைப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளன். கில் ரா-இம் க்கு சீனியர். அவளை ஒரு தலையாகக் காதலிப்பவன்
ஹான் டே-சீயோன் – ஓஸ்கா தனது இசை ஆல்பத்திற்காக தேடும் ஒரு இசை கலைஞன். ஒரு இரவு விடுதியில் அவன் பாடி இசைப்பதை ஓஸ்கா பார்த்திருக்கிறான்.
.
சீக்ரெட் கார்டன் எபிசோட் 5 விளக்கம்
.
இங்கு இந்த நாடகத்தின் விளக்கத்தை தமிழில் படித்துவிட்டு netflix ல் இந்த நாடகத்தைப் பார்த்தால் எளிதில் புரியும்.
நாம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாயாஜால மாற்றம் இந்த அத்தியாயத்தின் இடையில் தான் ஆரம்பிக்கிறது...
ஜோவனை இந்த ஜேஜூ தீவில் அதுவும் இந்த உணவகத்தில் கண்டு ரா இம்-ம் ஓஸ்கா-வும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்களின் அதிர்ச்சிக்கு பதிலாக ஜோவன் மிகுந்த நிதானமாக தன்னிடம் பணிபுரிபவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி தான் முழுமையாக அறிந்து கொள்ள வந்திருப்பதாக கூறுகிறான். மேலும் அருகில் இருந்த ரா இம்-ஐப் பார்த்து தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ரா இம்-ஐ எங்கோ பார்த்த முகமாக இருப்பதாகவும் அலட்சியமாக சொல்கிறான். அவன் வார்த்தைகளில் தான் அலட்சியம் இருக்கிறதே தவிர முகம் இயல்பான முகமாகத்தான் இருக்கிறது. ஓஸ்கா அவள் தன்னோடு வந்திருக்கும் விருந்தினர் என்று கூறிவிட்டு, ஜோவன் கூறியதற்கு பதிலாக அவனைப் பார்த்து ரா இம் முறைப்பது போலத்தான் தெரிகிறது என்று நக்கலாகவும் கூறுகிறான். அதற்கு ஜோவன் தான் அவளிடம் என்றோ ஒருநாள் கோபமாக இருக்கும் போது மிகவும் அழகாக இருப்பதாக சொன்னதாகவும் அதனாலயே எப்பொழுதும் அவள் கோபமாக தன்னை பார்ப்பதாகவும் பதில் அளிக்கிறான். அவன் சொன்னதை பொறுத்துக் கொள்ள முடியாத ரா இம் அவனைத் திட்டிக் கொண்டே அங்கு சென்று அமர்கிறாள். கூடவே ஓஸ்கா-வும் வந்து அமர்கிறான். அப்பொழுது ஒரு ஹோட்டல் ஊழியர் வந்து ஜோகன் இன்று அந்த இடம் முழுவதையும் முன்பதிவு செய்து இருப்பதாக கூறிவிட்டு செல்கிறான். இது அவர்கள் இருவருக்கும் குறிப்பாக ரா இம்-க்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அவளுக்கு ஓஸ்கா கொடுக்கும் முக்கியத்துவம் ஜோவனின் மனதில் பொறாமையையும் தூண்டுகிறது.
அந்த பொறாமையின் காரணமாக ஜோவன் ஓஸ்கா-விடம் அவன் அங்கு சிறையில் இருந்ததைப் பற்றி கேள்வி கேட்கிறான். இது ஓஸ்காவிற்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. சிறிது யோசித்த இருவரும் ஒரு முடிவெடுத்து ஜோவன் அங்கு இருப்பதை மறந்தது போல தங்களுக்குள் உரையாடல் நடத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ரா இம் ஏற்கனவே ஓஸ்காவின் தீவிர ரசிகை. ஓஸ்கா-வும் ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தவன். எனவே அதற்குத் தகுந்தார் போல இப்பொழுது அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் அவர்களின் உரையாடலைக் கண்டு ஜோவன் அதிர்ச்சியும், கோபமும் அடைகிறான். மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட பாராட்டு வார்த்தைகள் ஜோவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. ‘மனிதர்கள் இப்படி கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்களா’ என்பது போல ஜோவன் அவர்களைப் பார்த்துக் கொண்டே அங்கே அமர்ந்திருக்கிறான். அந்த நேரத்தில் அருகில் இருந்து ஒரு மென்மையான இசை அவர்களின் காதுகளில் கேட்கிறது. அவர்களுக்கு சற்று தொலைவில் அந்த இசையை பாடிக் கொண்டிருந்தவன் ஓஸ்கா தேடிக் கொண்டிருந்த கிளப் பாடகனான ஹான் டே-சீயோன் தான். அந்த அழகான பாடல் ரா இம்-க்கும், ஜோவனுக்கும் கடந்து போன சில நினைவுகளைத் தூண்டி விடுகிறது.
ஒரு கிழிந்த கைப்பை-க்காக ஜோவன் அன்று தன்னை அவமானப்படுத்தி, கத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாமல், ரா இம் சாலையோரத்தில் சிந்தனையில் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள். ஜோவனோ தனது காரில் சாய்ந்தபடி தொலைவிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதைத் தொடர்ந்து, மற்றொரு சம்பவம் ஜோவனின் நினைவுக்கு வருகிறது: ரா இம் ஏரி நீரில் வீசியெறிந்த பைக் சாவியை, அவன் அந்த நீரில் இருந்து எடுத்த பிறகு, கையில் வைத்துக்கொண்டு குழப்பமான நிலையில் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்.
ரா இம்-ன் நினைவுகளும் கடந்த கால நிகழ்வுகளுக்குச் செல்கின்றன. ஜோவன் அவளைத் தன்னைப் பார்க்க கிளப்பிற்கு வருமாறு அழைத்தபோது, கிளாரா மிகுந்த உற்சாகமடைகிறாள். அவளிடம் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான ஆடைகளிலிருந்து, எந்த உடை தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பார்ப்பதற்காக, அவற்றை மாற்றி மாற்றி அணிந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள். கடைசியில், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அன்று கிளப்பிற்கு அணிந்து சென்ற அதே உடையைத் தேர்ந்தேடுக்கிறாள்; ‘அதுவே போதுமானது’ என்று நினைத்தாள். இருப்பினும், தனது அறைத்தோழி ஒருமுறை சொன்னதை நினைவில் கொண்டு ‘பெண்கள் தங்கள் கழுத்தை ஒரு கைக்குட்டையால் மூடிக்கொண்டால் ஆண்களுக்குப் பிடிக்கும்’ என்று அவள் சொல்லியிருந்தாள். எனவே ஒரு கைக்குட்டையை எடுத்து அதேபோல தன் கழுத்தைச் சுற்றி கட்டிக்கொள்கிறாள். ஒருவித நம்பிக்கையான எதிர்பார்ப்புடன் மகிழ்ச்சியாகப் புறப்பட்டுச் சென்ற இந்த ரா இம்-த்தான், ஜோவன் அந்த கிழிந்த கைபை-காக அவமானப்படுத்தி, திட்டி, விரட்டி அடித்திருந்தான்.
அவர்கள் இருவரும் தங்கள் நினைவுகளில் மூழ்கியிருந்தபோது, பாடிக் கொண்டிருப்பது ஹான் டே-சீயோன் தான் என்பதை உணர்ந்த ஓஸ்கா-வுக்கு கோபம் வருகிறது. சிறிது நேரம் திகைத்து அமர்ந்திருந்த பிறகு, பாடல் முடிந்ததும் சீயோன் எழுந்து நடக்கத் தொடங்கியபோது, ஓஸ்கா அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு நிமிடம் காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவனைத் தேடி ஓடுகிறான். கூட்டத்தின் மகிழ்ச்சிக்காகப் பாட வந்த தன்னை, வெறும் மூன்று பேருக்காகப் பாட வைத்த இந்த பணக்கார வர்க்கத்தின் மீது ஏற்கெனவே கோபத்தில் இருந்த சீயோன், ஓஸ்கா தன்னைத் பின்தொடர்வதைக் கண்டதும் இன்னும் அதிகக் கோபமடைகிறான்.
ஹான் டே-சீயோன்-ன் அருகில் வந்த ஓஸ்கா அவனிடம் அன்று சீயோன் போலீசிற்கு தகவல் கொடுத்தது தவறு என்றும், இது சமூக வலைத்தளங்களில் பரவுமானால் தனக்கு எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்றும் கோபத்துடன் கத்துகிறான். அதற்கு சீயோன் சாதாரணமான குரலில் ஆனால் அழுத்தமாக, அதற்கு பழி வாங்குவதற்காகத் தான் தன்னை இங்கு பாட அழைத்ததாகவும், இதனை செய்ததன் மூலம் தன்னை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று நினைப்பதாகவும் குற்றம் சாட்டுகிறான். இதனால் ஓஸ்கா திகைத்துப் போகிறான். உண்மையில் அந்த ஏற்பாட்டை அவன் செய்யவில்லை ஜோவன் தான் செய்திருந்தான். இயல்பாகவே அவன் சற்று மென்மையான மனம் கொண்டவன் என்பதால் தன் மீது சுமத்திய இந்த பழியை ஓஸ்கா-வினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை தெளிவுபடுத்தி விட, ‘அதை செய்தது தான் இல்லை’ என்றும் ‘சீயோனின் திறமையை மட்டும் அல்ல, மற்ற யாருடைய திறமையுமே தான் குறைத்து மதிப்பிடுபவன் அல்ல’ என்றும் ஓஸ்கா எடுத்து கூறுகிறான். ‘எல்லோருமே தன்னைவிட மேலான திறமை கொண்டவர்கள் தான்’ என்று பணிவாக, அதே சமயத்தில் ‘அவன் இவ்வாறு தன்னை கூறி விட்டானே’ என்ற லேசான கோபத்திலும் கூறிய, அவனது வார்த்தைகளில் இருந்த உண்மை சீயோன்-ஐ அமைதி அடையச் செய்கிறது. இருந்தும் எதுவும் கூறாமல் அவனிடம் இருந்து கையை உருவிக்கொண்டு, வேகமாக அந்த இடம் விட்டு நகர்கிறான்.
சீயோன் தன் கையை ஊசிக்காவிடம் இருந்து விலக்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு, ஒரு சிறிய வேடிக்கையான சம்பவம் நடக்கிறது – தான் ஆண்களால் ஈர்க்கப்படுவதாகவும், ஓஸ்கா தன்னைவிட்டு விலகி இருப்பதே நல்லது என்றும் சீயோன் கூறிவிட்டு செல்கிறான். ‘இவன் உண்மையைக் கூறுகிறானா? அல்லது அவனிடம் இருந்து என்னைத் தள்ளி வைக்க பொய்யாக கூறுகிறானா? பொய் என்றால் இந்த அளவு கூட இறங்குவானா, என்ன?’ – என்ற குழப்பத்துடன் ஓஸ்கா அதிர்ச்சி அடைகிறான்.
ஓஸ்கா மீண்டும் திரும்புவதற்குள், இங்கு இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ரா இம் ஜோவனை முறைத்துப் பார்க்க, அவனோ பதிலுக்கு ‘ஓஸ்கா ஒரு சபலக்காரன்’ என்று அவளை எச்சரித்து, அவனிடம் அவள் காட்டும் அதீத பாசத்தைக் கேலி செய்கிறான். ஆனால் அவளோ, ஓஸ்கா தன்னை ஒரு இளம் பெண்ணைப் போலவே நடத்துவதாகவும், தான் ஏழை என்பதால் தன்னை ஒதுக்கிவிடவில்லை என்றும் பதிலளிக்கிறாள். [ இது ஒரு பொருத்தமான பதில் ] அப்போதுதான் சியோல் அந்த இடத்திற்கு வருகிறாள். வந்ததும், அவள் ஆச்சரியப்படுவது போல் நடித்து, ‘இது ஒரு விசித்திரமான சந்திப்பு’ என்றும், ‘ஏதோ மாயாஜாலம் போல இருப்பதாகவும்’ ஜோவனிடம் கூறுகிறாள். இதையே தானே ரா இம் ஓஸ்காவிடம் செய்ததாக சிறிது நேரத்திற்கு முன்பு ஜோவன் கிண்டல் செய்தான். இப்பொழுது அதை சியோல் ஜோவனைப் பார்த்து செய்வதை கண்டு அவளுக்கு நக்கலான சிரிப்பு பொங்குகிறது. பிறகு சியோல் ரா இம்-ஐப் பார்த்து அவள் எந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று விசாரணை செய்வதைக் கண்டு ஜோவன் அவளால் ரா இம் விலகிச் சென்று விடப் போகிறாள் என்று கூறி, சியோல்-ஐ அங்கிருந்து கிளம்பச் சொல்ல, அவள் சென்றுவிடுகிறாள்.
சியோல் அங்கிருந்து செல்லும் பொழுது ரா இம் அவளை அடையாளம் கண்டு கொண்டு பின் தொடர்ந்து செல்கிறாள். அவள் தானே தனது தோழி வேலை இழந்ததற்கு காரணம், அதனால் குறைந்த பட்சம் ஒரு மன்னிப்பாவது அவளிடம் இருந்து பெற்று விட வேண்டும் என்று அவளை நோக்கி செல்கிறாள். பணக்காரர்களிடம் அது ஒருபோதும் நடக்காது என்று இவளுக்குத் தெரியவில்லை போல. இப்போது ரா இம் வேகமாக செல்லும் அவளைத் தடுத்து நிறுத்தி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு முன்னால் நடந்த செயலையும் நினைவுபடுத்துகிறாள். அப்பொழுதுதான் அவளுக்கு ரா இம் யார் என்று புரிகிறது. ரா இம் ஏழை என்று தெரிந்தவுடன் அவளை அலட்சியமாக சியோல் பேச, ரா இம் பொது இடத்தில் சியோல்-ஐத் திட்டிக் கொண்டிருப்பதை கண்டு அவளின் பின்னால் வந்த ஜோவனுக்கு முன்பு நடந்ததும் இப்போது நடந்து கொண்டிருப்பதும் புரிகிறது. இருந்தும் அவளின் அருகில் வந்தவன் ரா இம்-மைத் தான் மன்னிப்பு கேட்கச் சொல்கிறான். இது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கோவம் கொள்ள அவன் அழுத்தமாக அவளிடம் பணம் இருப்பவர்கள் எப்பொழுதுமே ஏற்ற இறக்கங்கள் பார்ப்பார்கள் என்றும், சமநிலை பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள் என்றும், கூறி ரா இம் பேசியதற்கு அவளை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறுகிறான். அதற்கு அவனும் பணக்காரர் தானே அதனால் அப்படித்தான் என்று ரா இம் கோபப்பட, அவன் வெகு சாதாரணமாக நானும் அப்படித்தான் என்று ஒத்துக் கொள்கிறான்.
இது சியோல்-க்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுவரை அப்பாவி பெண் வேடம் போட்டு ஜோவன் ரா இம்-மிடம் பேசியதைக் கேட்டுக்கொண்டு இருந்த சியோல்-லிடம் ஜோவன் திரும்பி அவளையும் மன்னிப்பு கேட்டு சொல்கிறான். சியோல் அதிர்ந்து காரணம் கேட்க, ஏற்கனவே அவளது தோழியின் கைப்பை-யை ரா இம் சியோல்-லிடம் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து இரண்டுக்கும் சமமாகிவிட்டது என்று சொல்லும் போதே, அந்த பிரச்சனையை விட்டிருக்க வேண்டும் என்றும், அதையும் மீறி ரா இம் தோழியைப் பற்றி புகார் கூறி வேலையில் இருந்து எடுக்குமாறு செய்திருப்பதாகவும் அதனால் மன்னிப்பு கேட்பது சரிதான் என்றும், அவளிடமும் நியாயவாதியாக பேசுகிறான். சூழ்நிலை இவ்வாறு தீவிரமாக இருக்க… அந்த நேரம் அங்கு வந்த ஓஸ்கா சியோல்-லைப் பார்த்தவரே மற்ற இருவரிடமும் தான் சியோலிடம் சிறிது நேரம் தனியாக பேச வேண்டும் என்றும், தங்களைத் தனியாக விடுமாறும் தீவிரமான குரலில் சொல்கிறான்.
ஜோவனும் ரா இம்-ம் அங்கிருந்து திரும்ப நடந்து வந்து கொண்டிருக்கும்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ரா இம் ஜோவன் நடந்து கொண்டதற்கு காரணம் கேட்க, அதற்கு ஜோவன் அவளுடைய பேங்க் அக்கவுண்டில் உள்ள பணத்தைப் பற்றி கேட்கிறான். அவள் அதிகம் இல்லை, சிறிது தான் இருக்கும் என்று கூற, இப்பொழுது ஜோவன் அதுதான் வித்தியாசம் என்று கூறி, அவளுக்கு அவளது பேங்க் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிகிறது என்றும், ஆனால் சில மக்களுக்கு சில பணக்காரர்களுக்கு அவர்கள் அக்கவுண்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எவ்வளவு பணம் வந்து விழுகிறது என்று அவர்கள் கணக்கு வைத்துக் கொள்வதில்லை என்றும் கூறி, அவளுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி அவளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறான். [ என்ன மாதிரியான ஹீரோ ]
அதே நேரத்தில் அவர்களின் எதிரே அவளது சீனியர் ஜாங் சூ வருகிறான். அவன் ரா இம்-மைப் பார்த்து அவள் இங்கு வந்திருக்கும் காரணத்தையும், தங்கி இருக்கும் இடத்தையும் பற்றி விளக்கம் கேட்கிறான். அவள் தனக்கு இலவச விமான பயண சீட்டு கிடைத்ததாகவும், அதனால் அவனுடைய ஸ்டண்ட் காட்சிகளை வேடிக்கை பார்ப்பதற்காக வந்ததாகவும், இன்னமும் சொல்லப் போனால் ஏதேனும் சிறு சிறு உதவிகள் செய்வதற்காக இங்கு வந்ததாகவும் கூறிவிட்டு, தான் தங்கியிருக்கும் இலவச இடத்தைப் பற்றிய விவரத்தையும் கூறுகிறாள். இது அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஜோனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனாலும் அவன் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்க்கிறான். ஜாங் சூ அவள் நடந்து கொண்ட விதத்திற்கு அவளிடம் கோபம் கொண்டு பேசியவன் தனது அறை சாவியையும் அவளிடம் தந்து, ‘தான் வரும்வரை அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு’ கூறிவிட்டு செல்கிறான். மகிழ்வுடன் சாவியை பெற்றுக் கொண்ட ரா இம்-மைக் கண்டு எரிச்சல் கொண்ட ஜோவன் அவளிடம் இன்னொரு ஆடவனின் அறையில் தங்கப் போவதை பற்றி கேள்வி கேட்க, ரா இம் அவனை அலட்சியப்படுத்திவிட்டு சென்று விடுகிறாள்.
இங்கே இவ்வாறு இருக்க அங்கு கடற்கரையில் ஓரிடத்தில் ஓஸ்கா-ம் சியோல்-ம் நின்று கொண்டிருக்கிறார்கள். அவன் சியோல் இவ்வளவு தூரம் தன்னைப் பார்க்க வந்ததாக எண்ணி, அதையே அவளிடம் கேட்க, அவள் ஆம் என்று ஒத்துக்கொண்டு, அவன் எண்ணிய விதத்தில் இல்லை என்றும், வீட்டுப் பெரியவர்களின் ஏற்பாட்டின் படி விரைவில் தான் ஜோவனும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அதனால் அவர்களின் குடும்பத்துடன் தான் இணையும் போது ஒரு குடும்ப உறுப்பினராக தனக்கு ஓஸ்காவைக் கண்டு தர்மசங்கடமான நிலை உண்டாவதைத் தடுக்க தான் அவனுடன் ஒரு தோழமை உறவை ஏற்படுத்தவே இங்கு வந்ததாகவும் கூறுகிறாள். மேலும் தாங்கள் முன்னரும் உண்மையாக விரும்பி இருக்கவில்லை என்றே தான் நினைப்பதாகவும் கூறுகிறாள். இதனால் ஓஸ்கா கோவம் கொள்கிறான்.
சியோல் பேசுவதை கேட்டு, அவளின் மேல் உள்ள கோபத்தில் ஓஸ்கா வார்த்தைகள் ஏதும் வராமல் நிற்கிறான், மேலும் சியோல் இப்போது அவனிடம் ரா இம்-ன் நிலை பற்றி மட்டமாக கூறி, ஜோவனின் கூடவே அலைந்து கொண்டிருக்கும் அந்தப் பெண் யார் என்று ரா இம்-ஐப் பற்றி ஓஸ்கா-விடம் கேட்கிறாள். ஏற்கனவே கோவத்தில் இருந்த அவன் அவள் மேல் இருந்த எரிச்சலில், ‘தனக்கு அவளைப் பிடித்திருக்கிறது’ என்று கூற, அதற்கு சியோல் அவனிடம் ‘அவள் அவனுக்கு ஏற்றவள் அல்ல’ என்று லேசான பொறாமையோடு கூறுகிறாள். இது அவனுக்கு மேலும் எரிச்சலை கொடுக்க சியோல்-ஐ விட ரா இம் சிறந்தவள் தான் என்றும், அதனால் கவனமாக பேசும் படியும் கூறிவிட்டு வெறுப்புடன் அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். ஓஸ்கா-வின் இந்த வார்த்தைகள் சியோல்-ஐ பாதிக்க, போகும் அவனையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அப்போது அவளுடைய நினைவு அவனுடனான கடந்த காலத்திற்கு செல்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் ஓஸ்கா-ம் சியோல்-ம் அவனும் காதலர்கள். அந்த நேரத்தில் அவளிடம் அவன் திருமணத்திற்கு சம்மதம் கேட்க, அவனின் விளையாட்டுத்தனத்தின் மேல் வெறுப்பு கொண்டிருந்தவள் அதனை மறுத்துவிட்டு இனி தனக்கும் அவனுக்கும் இடையில் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு சென்று விடுகிறாள். இந்த நிகழ்வு பற்றி எண்ணிக்கொண்டே ஒரு விதமான மனநிலையுடன் தான் தங்கி இருக்கும் இருப்பிடத்திற்கு ஓஸ்கா வர, அங்கு இப்பொழுது ஜோவன் இருப்பதைக் காண்கிறான்.
அந்த ஜேஜூ தீவில் இசை ஆல்பம் படப்பிடிப்பு காரணமாக ஹோட்டலில் வேறு அறைகள் இல்லாத காரணத்தால் ஜோவன் இங்கு வந்தால் எப்பொழுதும் தங்கும் அறையில் இப்பொழுது ஓஸ்கா தங்கி இருக்கிறான். எனவே தான் இருக்கும் அறையில் தங்கி இருக்கும் ஓஸ்கா-வை ஜோவன் இப்பொழுது தான் வந்து விட்டதால் அறையை காலி செய்ய சொல்ல, ஏற்கனவே எரிச்சலில் இருந்த ஓஸ்கா அவனை பந்தயத்திற்கு அழைக்கிறான். தன்னுடன் ரேசில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் அறையை காலி செய்து விடுவதாக கூறுகிறான். அதற்கு பதிலாக தான் வெற்றி பெற்றால் தனக்கு ரா இம் வேண்டும் என்று ஜோவனிடம் கேட்கிறான். இது ஜோவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அவன் பந்தயத்திற்கு தயாராகிறான். இருவரும் கிளம்பும்போது அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த ரா இம் தானும் பந்தயத்தில் சேர்ந்து கொள்வதாக கூறுகிறாள். தான் பந்தயத்தில் ஜெயித்து விட்டால், ஓஸ்கா-வின் மியூசிக் ஆல்பத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவள் கூற, அதற்கு ஓஸ்கா-ம் சம்மதிக்கிறான்.
மூவரும் கையில் ஒரு வரைபடத்தை வைத்துக் கொண்டு சைக்கிள் பந்தயத்தை ஆரம்பிக்கிறார்கள். சண்டை பயிற்சியாளராக இருந்தாலும் கூட ரா இம் சிறிது பின் தங்குகிறாள். ஆனால் அடிக்கடி வந்து இது போல சென்றிருப்பதால் ஜோனுக்கும் ஓஸ்கா-விற்கும் இது இயல்பானதாக இருக்கிறது. அதனால் அவர்கள் இருவரும் முன்னால் சென்று விடுகிறார்கள். அப்படி செல்லும் பொழுது ஏற்படும் சிறு நிகழ்வில் வழியில் இருக்கும் ஒரு வழிகாட்டி பலகை லேசாக திரும்பி எதிர் திசையைக் காட்ட ஆரம்பிக்கிறது. பாதை மட்டுமல்ல கதையும் இந்த இடத்தில் இருந்து திரும்பி வேறு மார்கத்திற்குச் செல்ல ஆரம்பிக்கிறது. நினைத்தது போலவே அந்த வழியில் வந்த ரா இம் அந்த மற்றொரு பாதையைத்தான் தேர்ந்தெடுக்கிறாள்.
ஜோவனும் ஓஸ்கா-ம் இலக்கை நோக்கி வேகமாக சைக்கிள்-லில் வந்து கொண்டிருக்கும் பொழுது ஜோவனுக்கு பின்னல் வந்து கொண்டிருந்த ரா இம் இப்போது காணவில்லையே என்று யோசித்தபடியே தன் போட்டியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். சரியாக போட்டி முடியும் இடத்திற்கு வருவதற்கு சில அடிகள் முன்னால் ஜோவனின் கையில் கட்டி இருக்கும் இணைப்பின் மூலம் ரா இம் கிரீச்சிட்டு கத்துவது போல கேட்க, சட்டென்று நின்று விடுகிறான். அதனால் அவன் போட்டியில் தோற்று விடுகிறான். தொடர்ந்து சென்ற ஓஸ்கா போட்டியில் ஜெயித்து விடுகிறான். எனினும் அவளை காணாததால் ஜோவனைப் போலவே ஓஸ்காவையும் அது பதட்டம் கொள்ள செய்கிறது. அவன் கடற்கரையிலும், ஊருக்குள்ளும் தேட, ஜோவன் அவளை தேடி காட்டுக்குள் திரும்பவும் செல்கிறான். கையில் உள்ள இணைப்பின் மூலம் அவளை அழைத்துக்கொண்டே தேடிக் கொண்டே சென்றவன், நேரமாக பதட்டம் கொள்கிறான். தேடிக் கொண்டே சென்றவன் அந்த அறிவிப்பு பலகை திரும்பி வேறு திசையை காட்டி இருப்பதை பார்த்து விட, ரா இம் சென்ற வழி எது என்று அவனுக்கு தெரிந்து விடுகிறது. அந்த வழியாக அவனைத் தேடிக் கொண்டு செல்கிறான்.
அந்த காட்டிற்குள் செல்லும் பொழுது அவனுக்கு வினோதமான உணர்வு தோன்றுகிறது. எனினும் அவன் ரா இம்-ஐப் பார்த்து விடுகிறான். அவள் முழுமையாக எந்தவிதமான காயமும் படாமல் பத்திரமாக இருப்பதைக் கண்டு ஆசுவாசமடைந்தாலும், கோபத்தில் காத்த ஆரம்பிக்கிறான். ரா இம் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டே வந்தாலும், கடைசியாக அவன் கேட்ட கேள்வி அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஜோவனுக்கு கேட்ட அந்த அலறல் சத்தம் ரா இம்-மிற்கு கேட்கவே இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவள் அந்த அலறலை அலறவும் இல்லை. ஜோவனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திரும்பத் திரும்ப கேட்டு தெளிவு படுத்தி கொள்கிறான். பின்னர் ரா இம் அவனை அழைத்துக் கொண்டு அங்கிருக்கும் ஒரு உணவகத்திற்கு செல்லும் வழிகாட்டிப் பலகையைக் காட்டி அங்கு போகலாம் என்று கூறி அழைத்துக் கொண்டு செல்கிறாள். அந்த பலகையில் அந்த உணவகத்தின் பெயர் ‘மிஸ்டரி கார்டன்’ அதாவது மர்மமான தோட்டம் என்று எழுதப்பட்டு இருக்கிறது. அந்த இடமே விசித்திரமாக இருக்கிறது. அங்கு அவர்களின் இணைப்பு வாக்கிடாக்கி வேலை செய்யவில்லை, அவர்களின் செல் ஃபோன்களும் வேலை செய்யவில்லை.
இந்நிலையில் நடந்து சென்ற இருவரும் சிறிது தூரத்தில் ஒரு வினோதமான உணவகத்தை பார்க்கிறார்கள். ஜோவன் முன்பு வாங்க விருந்த ஓவியத்தில் இருந்த அதே விசித்திரமான வீட்டின் அமைப்புடன் இப்பொழுது அவர்கள் பார்க்கும் கட்டிடமும் இருக்கிறது. ஆனால் அது ஜோவனின் கவனத்திற்கு வரவில்லை. அந்த மர்மத் தோட்டம், வினோதமான தாயத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு விசித்திரமான இடமாகவும், அதைவிட விசித்திரமான ஒரு பெண்மணிக்குச் சொந்தமானதாகவும் இருக்கிறது.
ரா இம் அங்கிருக்கும் பல வண்ணமயமான மது பாட்டில்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, ஜோவன் அங்கிருக்கும் தொலைபேசியில் யாருக்கோ அழைக்க முற்படுகிறான். ஆனாலும் இணைப்பு கிடைக்கவில்லை. இருவரும் உணவு உண்ண வருகிறார்கள். இந்த வித்தியாசமான பெண்மணி அவர்களுக்கு கோழிக்கறி இரவு உணவைப் பரிமாறுகிறாள், ஜோவனுக்கு அதிகமாக வைத்து அவனை உண்ணச் சொல்கிறாள். இது ஜோவனை சங்கடப் படுத்துகிறது. அதே சமயம் ஜோவனிடம் அவனுக்கு உடம்பு சரியில்லையா என்று கூர்ந்து கேட்கிறாள். அது அவள் அந்தத் தொல்லை தரும் நோயை பற்றி முன்னரே அறிந்தது போல இருந்தது. பிறகு ரா இம்-மிடம் அவளைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்று அவள் கூறுகிறாள். [ இது “மீண்டும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி” என்ற பொருளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வாழ்த்து.]
ரா-இம், அந்தப் பெண்மணி மதுபானம் தயாரிப்பு பற்றிக் கேட்கிறாள். ஏனெனில் அதை அவளுடைய தந்தையும் செய்ய விரும்பினார். அதற்கு அந்த பெண்மணி அளித்த ஒரு பதில் அவள் யாராக இருக்கக்கூடும் என்று பார்வையாளர்களுக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அதாவது அந்த பதில் ”உண்மையில் எனக்கு தயாரிப்பதை விட குடிப்பதில்தான் அதிகம் விருப்பமாக இருந்தது.” அந்த பெண்மணி தயாரிப்பது ஒரு மருத்துவ குணம் கொண்ட மது. அதை அவளின் மகளைக் காப்பாற்றுவதற்காக தயாரிப்பதாக கூறுகிறாள். ஆனால், ரா-இம் அவளுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லையா என்று கேட்டபோது, அந்தப் பெண் தன் விசித்திரமான பார்வையுடன் அது தான் அவளுடைய விதி என்பதாக கூறுகிறாள்.
இரவு உணவிற்குப் பிறகு அவர்கள் இருவரும் பாதுகாப்பாக விடுதிக்குத் திரும்புகிறார்கள். அந்தப் பெண்மணியிடம் இருந்து இரண்டு புட்டி மதுவைப் பரிசாகப் பெற்றதற்காக ஜோவன் அவளைக் கடிந்துகொள்கிறான். அது பரிசளிக்க ஏற்ற ஒரு விசித்திரமான பொருள் தான் என்றும், அவளுக்குள்ளேயே ஒரு (பழமையான சிந்தனை கொண்ட, விசித்திரமான) வயதானவர் குடியிருக்கிறார் என்றும் அவன் கேலியாகக் கூறுகிறான். அதற்கு ரா-இம் தனக்குள் அப்படி பல வயதானவர்கள் இருப்பதாக கூறிவிட்டு, பிறகு ஒரு மெல்லிய புன்னகையுடன் அவர் தன்னிடம் சொல்லி, அதை அவனிடம் தெரிவிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றும், ‘அங்கே… தன்னை அழைத்துச் செல்ல வந்ததற்கு நன்றி’ என்று அவர் சொல்லச் சொன்னதாகவும் கூறுகிறாள்.
ஜோவன் தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் மறைப்பதற்காக, அந்த வயதானவர் இதை முன்னரே சொல்லியிருக்க வேண்டும் என்று கூற, அதற்கு ரா-இம் அவன் இவ்வாறு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், சண்டை போடவே விரும்பும் இன்னொரு வயதானவர் வெளியே வந்துவிடப்போவதாக பதிலடி கொடுக்கிறாள். பின்னர் ரா இம் அந்த மதுப்புட்டிகளில் ஒன்றை ஜோவனிடம் நீட்டுகிறாள். அவனோ அதை வாங்க மறுக்க, ரா இம் அது ஓஸ்காவிற்காக வாங்கப்பட்டது என்றும் அவனிடம் கொடுத்துவிடுமாறும் கூற, இப்போது ஜோவன் அதை தனக்கு வேண்டுமென்று பிடிங்கிக் கொள்கிறான்.
அப்போது ஜாங்-சூ இடுப்பில் கை வைத்துக்கொண்டு ரா இம்-முக்காகக் காத்திருப்பதை ரா இம் பார்க்கிறாள். தனக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற தனது கட்டளையை அவள் மீறியதால், அவளிடம் அவன் கோவம் கொண்டு பேசிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு செல்ல, பார்த்திருந்த ஜோவன் இங்கு எந்த அறையும் காலியாக இல்லை என்றும், அவர்கள் ஒரே அறையை பகிரப்போகிறார்களா என்றும் பொறாமையில் கேட்க, அதற்கு ஜாங் சூ, தனது குழு பாலினப் பாகுபாடு பார்ப்பதில்லை என்று நிதானமாகப் பதிலளிக்கிறான்.
அறையில் உள்ளே வந்த பிறகு ரா இம் அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தான் இங்கு பொழுதுபோக்கு வரவில்லை என்றும், இது தனக்கு உண்மையிலேயே மிக முக்கியமான வாய்ப்பு என்றும் அவனிடம் கூறுகிறாள். மேலும் இதில் காயங்கள் படும் என்று தெரியாமல் இந்த வேலையை தான் மேற்கொள்ளவில்லை என்றும், தான் பெண் என்பதற்காக இல்லாமல் தனது திறமையை வைத்து வாய்ப்பு வழங்குமாறு அவனிடம் கேட்கிறாள். ஆனால் அவன் மறுத்து விடுகிறான். பின்னர் அங்கிருக்கும் மற்ற சக வேலையாட்களை தனது தனது அறைக்கு போக சொல்லிவிட்டு அவர்களின் அறையை அவளை எடுத்துக் கொள்ள சொல்கிறான். அந்த நேரத்தில் ஜோவன் வந்து தான் தனது அறையை காலி செய்து விட்டதாகவும், அவள் தனது மாலின் வெற்றியாளர் ஆகையால் அடுத்த சில நாட்களுக்கு தனது விருந்தினர் என்றும் கூறி, அங்கு தங்கச் சொல்கிறான்.
அவனுடைய மாலின் வெற்றியாளர் என்று அறிந்ததும் அது பற்றிய விஷயத்தை கேட்ட ஜங் சூ தன்னால்தான் அந்த குலுக்கலில் அவள் வெற்றி பெற்று இங்கு வந்திருக்கிறாள் என்றும், தான் ஏதோ முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டதாகவும் மிக மெல்லியகுரலில் தன்னையே நிந்தித்துக்கொள்கிறான். [ ஜங் சூ முன்னர் ஒரு புதிய கைப்பை-ஐ ரா இம்-க்கு வாங்கித் தரும் படி அவளின் தோழியிடம் கூறி ஏற்பாடு செய்திருக்கிறான். அதன் காரணமாகவே இந்த பயணம்.] ஜோவன் தனது அறையில் தங்குவதற்கு அளிக்கும் சலுகையை ரா இம் ஏற்றுக்கொள்கிறாள். தனது குழு உறுப்பினர்களைச் சங்கடப்படுத்துவதைவிட, ஜோவன்-ஐ சங்கடப்படுத்துவதையே தான் விரும்புவதாக அவள் தன் சீனியரிடம் விளக்கம் அளித்துவிட்டு, ஜோவனுடம் செல்கிறாள்.
ஜோவன் அவளைத் தன் அறைக்குப் பின்தொடர்ந்து செல்கிறான். அவளுடைய முதலாளியுடனான உறவைப் பற்றி அவளிடம் கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்கிறான். எரிச்சலடைந்த ரா இம் அவன் ஏன் தன்னைத் தொந்தரவு செய்து பின்தொடர்கிறான் என்று அவள் கேட்கிறாள். பதில் அவளுக்கு ஏற்கெனவே தெரியும் என்று ஜோவன் பதிலளிக்கிறான். பின் ஒரு பெண்ணுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவுக்குத் தன்னிடம் இழப்பதற்கு மிக அதிகமாக இருக்கிறது என்றும், அவனது பார்வையில், பெண்கள் இரண்டு தெளிவான வகைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள், ஒன்று திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்கள், இரண்டாவது விளையாட்டாகப் பயன்படுத்த வேண்டிய பெண்கள் என்றும், அதில் ரா இம் இரண்டிற்கும் இடையில் இருப்பதாகவும் விளக்கம் கூறியவன் அவளிடம் அவள் எங்கு அதிகம் சாய்கிறாள் என்று பார்க்க ஒரு அணைப்பை முயற்சிக்க கேட்கிறான். [ கட்டிப்பிடிப்பதற்கு என்னவெல்லாம் சொல்கிறான்!!! ]
அவள் அவனுக்கு சவால் விடுவது போல அது உனக்கு பிடித்திருந்தால் பிறகு என்ன என்பதாக கேட்கிறாய் அவன் புன்னகைத்துக் கொண்டே பிறகு அவள் இப்பொழுது வாழும் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு வாழ்க்கையை தான் தருவதாக உறுதி கூறுகிறான். அவன் கூறிய விதத்தில் அவளுக்கு லேசான கோபம் ஏற்படுகிறது. அப்படி என்றால் தான் சிண்ட்ரலாவா என்ற அவளின் கேள்விக்கு அவன் மறுத்து, இல்லை அவள் சின்ன கடற்கன்னி என்று திருத்தம் கூறி, அவன் வாழ்வில் பிறகு அவள் ஒரு பொருட்டே இல்லாதவள் போன்ற சுற்றி தெரியலாம் என்றும, பிறகு குமிழ்களை போல மறைந்து விடலாம் என்றும் அழுத்தமாக அவளை பார்த்து கூறுகிறான். [ இதன் பொருள்!!!!…..இதை கூறும் போது அவனது பார்வையில் சிறு வலி தெரிகிறது ] அந்த அளவிற்கு தான் தன் வாழ்வில் அவளுக்கான இடம் என்ற மறைமுக விளக்கம் அவன் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. அதனை கூறிய அடுத்த கணம் அவள் அவனை ஓங்கி ஒரு அரை அரைக்கிறாள். அவன் இவ்வளவு கீழ்த்தரமாகவா நடந்து கொள்வான் என்று அவளுக்கே ஆச்சரியமாக இருப்பது போலவும், அவன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வானா என்று அவள் எதிர்பார்க்காதது போலவும், அவளின் கண்கள் கண்ணீரால் தழும்புகின்றன.ஆனால் அடி வாங்கிய அவன் மிகவும் அமைதியாக அவளை யோசித்துப் பார்க்கச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறான்.
ஜோவனின் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர இயலாமல், வெளியே பணியில் அமர்ந்திருந்த ரா இம்-மிடம் வந்த அவளது சீனியர்களில் ஒருவன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ரா இம்-ஐ அந்த இசை ஆல்பத்தின் இயக்குனருடன் சந்திக்க ஏற்பாடு செய்கிறான். அதனால் மகிழ்ந்து போன ரா இம் இந்த இரவே அந்த இயக்குனரை சந்திக்கச் செல்கிறாள். ஆனால் அங்கு இயக்குனராக சியோல் அமர்ந்திப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். ரா இம்-ஐ பார்த்த சியோலும் வழக்கம் போல அவளை அதிராமல் அலட்சியப்படுத்துகிறாள். ரா-இம் எல்லோரிடமும் போல இங்கும் தலைகுனிந்து பணிவுடன் வழக்கம் போல அவள் முன் நிற்க, அதை பற்றி எள்ளலாக அவளிடம் கூறிவிட்டு, சியோல் சென்று விடுகிறாள்.
இசை வீடியோ குழு உறுப்பினர்களின் ஒரு கூட்டம் நடக்கிறது. இயக்குனராக சியோல், ஜங் சூ, ஓஸ்காவின் மேனேஜர் என்று எல்லோரும் இருக்க, அவர்களுடன் இணையச் சென்ற ஓஸ்கா, அதன் புதிய இயக்குனர் யார் என்பதை அறிந்ததும் கடும் சீற்றமடைகிறான். அவன் சியோல்-லுடன் இணைந்து பணியாற்றவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டு, ஆவேசத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறான். தன் அறையில் ஓஸ்கா-ன் கோபம் முழுவதும் அவனது மேலாளரின் மேல் பாய்கிறது. ஆனால் அவனும் இந்த சிக்கல் முழுவதும் காரணம் ஓஸ்கா தான் என்றும், யாரும் அவனுடன் பணியாற்ற தயாராக இல்லை என்றும் பதிலடி கொடுக்கிறான். இதனால் மேலும் கோபமுற்ற அவன் தான் பணத்திற்காக இதனை செய்யவில்லை என்றும், தனக்கு இந்த பாடல் கூட பிடித்தம் இல்லாமல் தான் இருக்கிறது என்றும் கூறிவிட்டு, தான் இந்த ஆல்பத்தில் இருந்து, இந்த இசை தொகுப்பில் இருந்து வெளியேறுவதாக ஆவேசமாக பதில் அளித்துவிட்டு, அந்த அறையில் இருந்து அந்த மேலாளரை வெளியேற்றி விடுகிறான்.
அதேநேரம் அறைக்குள் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு தான் இங்கு தூங்க போவதாக கூறிக்கொண்டு ஜோவன் நுழைகிறான். கட்டிலில் ஜோவனும், சோபாவில் ஓஸ்கா-ம் ஆழ்ந்த சிந்தித்துக் கொண்டு படுத்திருக்கிறார்கள். தன்னிலை இப்படி செல்வது கண்டு சகிக்க முடியாமல் ஓஸ்கா அங்கிருந்த மது பாட்டிலைக் கையில் எடுக்க ஜோவன் வேகமாக வந்து அதை பறித்துக் கொள்கிறான். ஏனெனில் அந்த மது பாட்டில் ரா இம் அவனுக்கு அளித்தது. ஒயின் பாட்டிலை அவனுக்கு தராமல் கையில் வைத்துக் கொண்டிருந்தவன், ஓஸ்கா-விடம் சியோல்-க்கும் அவனுக்கும் இடையிலான உறவுமுறை குறித்து வியப்புடன் கேட்டு, சியோல் தன்னிடம் இவனைத் தெரிந்ததாகவே கூறவில்லை என்றும் கூறுகிறான். அதைக் கேட்ட ஓஸ்கா அவள் தன் எதிர்ப்பு ரசிகை [anti fan ] மட்டுமே என்று சாதாரணமாக ஜோவனுக்கு பதில் அளிக்கிறான்.
இங்கு ரா-இம் அந்த இரவு முழுவதையும் அந்தச் இலவச [ the sauna ]தங்கும் மையத்திலேயே கழிக்கிறாள். [ஜோவனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும் அவனது அறையில் தங்கியிருப்பது என்பது அவனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதற்குச் சமமாக அமைந்திருக்கும், இல்லையா?.] தங்கள் முன் அந்த வைன் மதுபாட்டிலை வைத்துக்கொண்டு, ரா-இம் மற்றும் ஜோவன் ஆகிய இருவருமே ஆழ்ந்த சிந்தனையில் தங்கள் இருப்பிடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் மது அருந்தத் தொடங்கிய அதே வேளையில், வெளியே மின்னல் கீற்றுகள் வெட்டுகின்றன; ஒரு பெரும் புயலும் திரண்டு எழுகிறது.
காலை நேரம்…ஜோவன் தன் படுக்கையில் கண்விழித்து பார்க்கையில் ஓஸ்கா மேல்ச்சட்டை இல்லாமல் தன் அருகில் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, ஒரு பெண்ணின் நளினத்துடன் வெட்கம் கொண்டு என்ன ஒரு கனவு என்று நெளிகிறான். மற்றொரு இடத்தில் அந்த இலவச [the sauna ] தாங்கும் அறையில் நடுத்தர வயதுப் பெண்கள் நிறைந்த ஓர் அறையில் ரா இம் கண் விழிக்க, தன் முன் பாக்கும் சூழலைக் குறித்து, விசித்திரக் கனவு என்று மீண்டும் கண் மூடுகிறாள். மெல்ல மெல்ல, தங்கள் கனவுகள் மிக அதிகத் தெளிவுடனும், உயிரோட்டத்துடனும் இருப்பதை ரா இம்-ம், ஜோவனும் உணரத் தொடங்குகின்றனர். அதிர்ந்த அவர்கள் இருவரும் தங்கள் உடலின் பாகத்தில் வித்தியாசத்தை காண்கின்றனர். ஜோவன் தான் ஒரு பெண்ணின் உடலிலும், ரா இம் தான் ஒரு ஆணின் உடலிலும் இருப்பதைக் கண்டு அலறுகிறார்கள்.
அத்தியாயம் 6 – இன் சுருக்கம்
.
Tags,
korean dramas in tamil, chinese dramas in tamil, south asian dramas in tamil, சீக்ரெட் கார்டன், Secret Garden, சீக்ரெட் கார்டன் கொரியன் நாடகம், secret garden korean drama episodes in tamil, Secret Garden korean drama episode 4 explain in tamil, Secret Garden korean drama tamil dubbed,
secret garden korean drama episodes explained in tamil, dramalookup,
.