.
மூத்தவர் டுபு – டுபு இனத்தின் தற்போதைய தலைவன். ஹெலியன் லிங்-னின் அண்ணனிடம் அவளைத் தனக்குத் தந்துவிட ஒப்பந்தம் செய்து ஏராளமான செல்வத்தை லஞ்சமாக அளித்திருந்தவன். ஹெலியன் லிங் பிறகு யான் சூன்-னின் ராணியான பிறகு அவளால் கொலைசெய்யப்பட்டவன்.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் மனதளவில் அவனால் ஒதுக்கப்படுபவள். தளபதி செங்-ஆல் விரும்பப்படுபவள்.
யான் சூன் – சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்து, பிறகு அவனது சொந்த ராஜ்யமான யான் தேசத்தின் தலைவன். இப்போது யான் தேசத்தின் உள்நாட்டு சிக்களைத் தீர்ப்பதில் முனைப்பாய் இருப்பவன்.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி. பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட மன்னனான லீயான்-ன் மனைவி.
ஜியா மெங் – மனிதர்களின் மனங்களை வசியப்படுத்தி, அவர்களின் விருப்பமான உருவத்தைக் காணச்செய்து ஏமாற்றுபவள்.
லி யான் – பியாண்டாங் தேச இளவரசன். உண்மையான பட்டத்து இளவரசன் சூழ்ச்சியால் மன்னனாகி, பின்னர் சிங்-ஆல் கொல்லப்படுகிறான்.
ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன். இரக்கமற்ற கொடூரன். மன்னனான தந்தைக்கு மிக பிரியமான மகன்.
கியூ லின் – பழைய முகமூடி மனிதனின் விசுவாச தளபதி. நகரை விட்டு வெளியே சென்றவன் ஒரு மாதம் கடந்து தன் மன்னன் இறந்த பிறகு திரும்ப வருகிறான்.
மெங் என் – சிமெங் தேசத்தின் ஜெனரல். ஒரு முறை லிங் யூ ராணியால் காப்பாற்றப்பட்டதால், இப்போது ஜுக்கே யூ பக்கம் இருக்கிறான்.
.
Rebirth அத்தியாயம் 28 – சுருக்கம்
முன்னர் தன் மக்களின் நன்மைக்காகவும் பாதுகாப்புக்காகவும் தனது பழங்குடி பாலைவன மலை பிரதேசத்தை யான் தேசத்தில் ஒரு பகுதியாக தன்னை இணைத்துக் கொண்டது டுபு என்ற பழங்குடி இனம். இப்போது யான் சூன் தளர்த்திருக்கும் இந்த நேரத்தில் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள எண்ணியது மட்டும் அல்லாது, ராணியையும் அவமானப்படுத்த துணிந்த டுபு இனத்தின் மூத்தவர் என்று சொல்லப்படுகின்ற தலைவரை யான் தேசத்தின் தளபதி செங் ராணிக்காக கொன்று விடுகிறான். இதனை இப்போது யான் தேசம் வந்ததும், யான் சூன்-னிடம் அவன் இறந்ததற்கு தானே பொறுப்பு என்று கூறி, தண்டனை எதிர்பார்ப்பதாகவும் தலைவணங்குகிறான். ராணியான ஹெலியன் லிங் அருகிலேயே நின்று கண்ணீர் மல்கியவாறு மன்னரின் எதிர்வினையை எதிர்பாத்து அமைதியாக அவனை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அந்த நேரத்தில் மூத்தவர் டுபு சாகவே தகுதியானவன் என்றும், அந்த மூத்தவரைக் கொல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தான் நீண்ட காலமாகவே தன் மனதிற்குள் வளர்த்து வந்ததாகவும் யான் சூன் அறிவித்து, அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறான்.
சந்தர்ப்பவாதப் பழங்குடித் தலைவர்கள், ஒரு கிளர்ச்சியில் சேருவதால் ஏற்படும் அபாயங்களை விட ஏதேனும் அவர்களுக்கு யான் தேசம் அளிக்கும் சலுகைகளுக்கே முன்னுரிமை அளிப்பார்கள் என்பதை நன்கு அறிந்த யான் சூன், நடந்த கொலையை சமாளிக்கும் விதமாகவும், நிலைமையைச் சீராக்குவதற்காகவும், ஒரு அறிக்கை வெளியிடுகிறான். அதாவது குற்றம் செய்த ஹாங்சுவான் பழங்குடியினர் மற்றும் பிற கிளர்ச்சிக் குழுக்களைத் தவிர, மற்ற அனைத்துப் பழங்குடியினருக்கும் அந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு வரிகள் மற்றும் இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஆணை பிறப்பிக்கிறான்.
அன்று மாலை, யான் சூன், ஹெலியன் லிங்-ன் இருப்பிடத்திற்குச் செல்கிறான். தான் ராணியை பெயரளவு ராணியாகவே தன் மாளிகையில் வைத்திருப்பதாக நாட்டில் பரவிய வதந்தியே ராணி தன் மரியாதை இழந்து நிற்க காரணம் என்று எண்ணி, அவர்கள் ஒரு உண்மையான தம்பதியர் என்பதை அரசவைக்குக் காட்டுவதற்காக அவன் அன்று இரவு அங்கு தங்குகிறான். எனினும் ராணியுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளாமல், தனது உத்தியோகபூர்வ சுருள்களில் கவனம் செலுத்தி மேசையிலேயே முழு நேரத்தையும் செலவிடுகிறான்.
கர்ப்பிணியான இளவரசி ஜாவோ சுன்’எர் பியாண்டாங் தேசத்தில் இருந்து தப்பித்து தனது தாய் நாடான யோங் தேசத்தின் தலைநகரத்திற்கு வந்து சேருகிறாள். அவளது பயணத்தின் போது, ஜியா மெங் என்ற பெண் மந்திரவாதி அவளை அணுகி, பிரேமை உண்டாக்கும் தூபத்தைப் பயன்படுத்தி, அவளது இறந்த போன கணவன் லியானின் தரிசனத்தை அவளுக்குக் காட்டுகிறாள். இளவரசி அதில் மயங்கினாலும் கூட, மந்திரகாரியிடம் ஏமாறாமல், அவளை மிரட்டி தனது மனதில் உள்ள திட்டத்திற்கு அவளை பயன்படுத்த முயற்சிக்கிறாள். அதற்கு அவள் தேர்ந்தெடுத்த மற்றொரு நபர் அந்த யோங் தேசத்தின் பதின்மூன்றாவது இளவரசனான ஸாவோ யாங்.
பதின்மூன்றாவது இளவரசன் ஸாவோ யாங்-ஐ தன் ஆதிக்கத்தில் கொண்டு வருவதற்காக இளவரசி ஜாவோ சுன்’எர் அவனை ஒரு கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு முகம் தெரியாத ஒரு கடவுளின் சிலை பெரிதாக இருக்கிறது. மந்திரவாதியின் தந்திரத்தால் இளவரசன் ஈர்க்கப்பட்டு அந்த முகம் தெரியாத கடவுளின் முகத்தில் தனது முகத்தை கண்டு அதிசயிக்கிறான் இளவரசன். மந்திரவாதி மற்றும் இளவரசியின் கூற்றுப்படி, ‘தான் அந்த முகம் அறியாத கடவுளின் மகன்’ என்றும் ‘தான் உலகையே ஆளப்பிறந்தவன்’ என்றும் தன்னைத்தானே நம்ப தொடங்குகிறான்.
இங்கு சிமெங் தேசத்தில் சிங்-ம் ஜுக்கே யூ-ம் சந்தோஷமாக அந்தப் பிரதேசத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது, பழைய மன்னரின் விசுவாசியான தளபதி கியூ லின் அங்கு வந்து சேருகிறான். அந்த நகரத்தில் அடிமைகள் எல்லோரும் விடுவிக்கப்பட்டதோடு, நகரத்தின் நிர்வாகமும் மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டு, அந்த தலை நகரத்தின் தற்போதைய தளபதி மெங் என்-ஐ அணுகி கேள்வி கேட்கிறான். அதில் தற்போதைய முகமூடி மன்னன் மீது சந்தேகம் அடைந்ததால், அந்த சந்தேகத்தை வரும் ‘தீக்கடவுள் திருவிழா’வின்போது தீர்த்துக் கொள்ள திட்டமிடுகிறான். ஏழு நாட்கள் கழித்து திட்டமிட்டபடியே அந்த திருவிழாவில் மக்களின் முன்னிலையில் குழப்பங்களை ஏற்படுத்தி, அவர்களிடம் ‘தமது மன்னர் கொல்லப்பட்டார்’ என்றும் ‘இதுவரை முகமூடி அணிந்து நடித்துக் கொண்டிருப்பவன் மன்னனின் நிழலாக முன்பு இருந்தவன்’ என்றும் உண்மையை வெளிப்படுத்துகிறான். பழைய மன்னனின் முகத்தை தான் பார்த்திருப்பதாகவும், அதனால் நிச்சயமாக தனக்கு தெரியும் என்றும் வாதிட்டு, மன்னனின் முகத்தை பார்த்திருக்கும் இன்னொரு சாட்சியாக சிறையில் இருக்கும் அடிமை ராணியின் கணவனை அந்த இடத்திற்கு அழைத்து வருகிறான். லிங் யூ பழங்குடி இனத்தின் தலைவனான ராணியின் கணவன் முதலில் அவன் மன்னன் அல்ல என்று சாட்சி சொன்னாலும், பிறகு ஜுக்கே யூ அவன் அருகில் வந்து அப்பொழுது எடுத்துக்காட்டிய லிங் யூ ராணியின் முத்திரை மோதிரத்தைக் கண்டு அவனின் காலடியிலேயே அமர்ந்து ராணியை எண்ணி அழுகிறான். அந்த நேரத்தில் அங்கு வந்து சேரும் சிங்-ன் உதவியுடன் மக்களிடம் ஜுக்கே யூ எடுத்துக் கூறுகிறான். தான் இந்த நாட்டில் அடிமைத்தனத்தை நிரந்தரமாக ஒழித்து விடுவதாகவும் இந்த சிமெங் தேசத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பழங்குடியினர்களுக்கு குறைக்கப்பட்ட வரிகளை வழங்கி, மேலும் ஓரளவிற்கான தன்னாட்சியையும் வழங்குவதாக அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கிறான். இதன் மூலம் அங்கு கிளர்ச்சி அடக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்புகிறது. சிங்-ம் ஜுக்கே யூ-வும் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இங்கு யான் தேசத்தில் ராணி ஹெலியன் லிங் தளபதி செங் தனக்கு முன்பு அளித்த மேலங்கியைத் திருப்பிக் கொடுப்பதற்காக வருகிறாள். தளபதி செங் ராணியும் மன்னனும் இணைந்து வாழ தொடங்கி விட்டதாக கருதி, ராணியை தனது மரியாதைக்குரிய பெண்மணியாக தள்ளியே நிறுத்துகிறான். அதனால் அவர்கள் இருவருக்கும் இடையேயான சூழல் வெறும் சம்பிரதாயமாகவும், அந்நியத் தன்மை உடையதாகவும் இப்போது மாறி விடுகிறது. ராணியிடம் மரியாதையுடன் நடந்து கொண்ட தளபதி செங் அரண்மனையின் பாதுகாப்பிற்குள்ளேயே அவளை இருக்குமாறு எச்சரித்துவிட்டு, அவளுக்கு நேரிடும் எந்த ஒரு தீங்கும் அரசரையும் வலுவிழக்கச் செய்யும் என்று ராணிக்கு நினைவூட்டுகிறான். அதைக் கண்டா ராணி அவன் இப்பொழுது தன்னை அரசரின் துணைவியாக மட்டுமே கருதுகிறான் என்பதை உணர்ந்து, மீண்டும் அரண்மனைக்குத் திரும்பி தனது தனிமையான வாழ்க்கையை வாழத்துவங்குகிறாள்.
அத்தியாயம் 29 – இன் சுருக்கம்
.