.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி. பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட இளவரசனான லீயான்-ன் மனைவி. வயிற்றில் குழந்தையுடன் தன் தாய் தேசத்துக்கே அடைக்கலம் தேடி வந்தவள்.
லி யான் – பியாண்டாங் தேச லியோ பகுதியின் இளவரசன் என்ற மாற்று பெயரில் மறைந்து வாழும் கொல்லப்பட்ட முன்னாள் பட்டத்து இளவரசனின் உண்மை வாரிசு. பின்னர் சூழ்ச்சியால் மன்னனாகிறான்.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து எல்லை பகுதிகளில் போர்களில் ஈடுபட்டாலும், தந்தை அதாவது அரசனால் அன்பு மறுக்கப்படுபவன்.
ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன். மன்னன் விருப்பத்திற்கு உரிய இளவரசன். கொடூர குணம் கொண்டவன்.
ஜியா மெங் – மனிதர்களின் மனங்களை வசியப்படுத்தி, அவர்களின் விருப்பமான உருவத்தைக் காணச்செய்து ஏமாற்றுபவள்.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் மனதளவில் அவனால் ஒதுக்கப்படுபவள். தளபதி செங்-ஆல் விரும்பப்படுபவள்.
செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன்-ன் படைத்தளபதி. யான் தேசத்தின் மீதும், தலைவன் யான் சூன்-னின் மீதும் மிகுந்த அன்பு கொண்ட தளபதி. ஆனாலும் யான் சூன் ராணி ஹெலியன் லிங்-ன் மீது ஆரம்பம் முதலே பரிவு கொண்டவன்.
.
Rebirth அத்தியாயம் 30 – சுருக்கம்
யோங் தேசத்தில் ஜாவோ சுன்’எர் இருப்பதை அறிந்து, அதிலும் கர்ப்பமாக இருப்பதால் யோங் தேச ஏழாம் இளவரசன் ஸாவோ சே அவளுக்கு எல்லைப்புறத்திலிருந்து பரிசுகளை அனுப்புகிறான். ஆனால் அவள் மறுத்ததுடன், அதனை திருப்பியும் அனுப்பிவிடுகிறாள். ஏனெனில் யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன் ஸாவோ யாங்-ன் இணக்கத்தை ஜாவோ சுன்’எர் ஏற்படுத்தி வரும் நிலையில், அவனின் முழுமையான நம்பிக்கையைப் பெற, அவனின் எதிரியாக கருதும் ஏழாம் இளவரசனை அவள் தூர தள்ளியே நிறுத்தவேண்டிய நிலை உள்ளது. மேலும் தான் மந்திரக்காரியின் மாயவலையில் விழாமல் தெளிவாக இருப்பதாக ஜாவோ சுன்’எர் காட்டிக்கொண்டாலும், அவளின் தூபப்பொடியின் உதவியால் தன் விருப்பத்துக்குரிய லி யான்-ஐ மாயத்தோற்றத்தில் கண்டு அவனுடன் பேசுவது அவளின் வழக்கமாகிறது.
யோங் தேசத்தின் 13வது இளவரசன் ஸாவோ யாங் அரியணை மீதான வேட்கையாலும், ஏழாவது இளவரசனின் ராணுவ வெற்றிகள் மீதான வெறுப்பாலும் உந்தப்பட்டு, அதனால் ஸாவோ சே-ன் மேல் நாளுக்கு நாள் அதிகப்படும் துவேஷத்தின் காரணமாக, ஜாவோ சுன்’எர் அறிமுகப்படுத்திய ‘முகமற்ற தெய்வ’த்திடம் ஏழாவது இளவரசனின் மரணத்திற்காக பிரார்த்தனை செய்கிறான். தன் வழியில் பெரும் தடையாக இருக்கும் ஏழாவது இளவரசன் ஜாவோ சே-வை அகற்றியே தீர வேண்டி மந்திரக்காரியின் தந்திரத்திற்கும், இளவரசியின் வஞ்சத்திற்கும் அடிபணிகிறான் யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன் ஸாவோ யாங்.
யோங் தேசத்தில் உள்ள ஜுக்கே குலத்தின் ஒற்றர் படையில் தலைவன் யாரும் இல்லாத நிலையில் அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறி வருவதை அறிந்து ஜுக்கே யூ வருத்தம் கொள்கிறான். ஒருமுறை அவர்களின் ஒற்றர் படையில் இணைந்து விட்டால் சாகும் வரை அதிலிருந்து வெளியேறுவது இயலாத முடிவு. அப்படி வெளியேறும் ஆசை இருப்பவர்களை உயிருடன் அவர்கள் விட்டதும் இல்லை. அதனால் இப்பொழுது ‘ஜுக்கே யூ இல்லாத தலைமையை ஏற்றுக் கொள்ள விரும்பாமல் அங்கிருந்து வெளியேறும் எண்ணம் கொண்டவர்கள் வரிசையாக கொல்லப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்’ என்ற செய்தி இங்கு சிமெங் நாட்டில் உள்ள ஜுக்கே யூ-ற்கு தெரிய வருகிறது. அப்போது அங்கே வந்து என்னவென்று கேட்கும் சிங்-கை ஜுக்கே யூ ஏதும் கூறாமல் அழைத்துக் கொண்டு ஒரு தனிமையான வீட்டிற்கு செல்கிறான். அங்கு முற்றத்தில் உள்ள ஒரு மரத்தை காட்டி ‘இது நறுமணத்திற்காகவே பெயர் பெற்றது’ என்றும், ‘தங்களின் அமைதியான வாழ்க்கைக்கு இது நிழல் தரும்’ என்றும் நம்புவதாகவும் அவளுக்கு விளக்குகிறான்.
இவ்வாறு இருக்க விரைவில் சிமெங் தேசத்தில் அங்கிருக்கும் பழத்தோட்டங்களில் ஒரு விசித்திரமான தொற்று நோய் பரவ ஆரம்பிக்கிறது. அது பழ மரங்களை அழுகச் செய்து, அதன் விளை பொருட்களைக் கசப்பாக்குகிறது. அதனைப் பற்றி ஆராய ஜுக்கே யூ மற்றும் சிங் செல்லும் பொழுது, நீர் நிலைகளுக்கு அருகில் சிவப்பு நிறத்தில் இயற்கையாக இருக்கும் மண் பச்சை நிறத்தை அடைந்திருப்பதை ஜுக்கே யூ கவனிக்கிறான். மேலும் அங்கிருக்கும் நதி விஷமாக்கப்பட்டிருப்பதையும் கண்டறிகிறான். இந்த நிலையில் ‘முகமற்ற தெய்வ’த்தின் வழிபாட்டுக் குழுவை சேர்ந்த ஒரு மர்மமான ‘புனித பெண்’ மக்கள் முன் தோன்றி அவர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் சிறிது நீரை விநியோகம் செய்கிறாள். அந்த புனித நீர் உண்மையில் விஷமடைந்த நதி நீரில் உள்ள விஷத்தை செயலிழக்கச் செய்து அந்த சிறிதளவு நீரை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும் ஒரு மாற்று மருந்து என்று சிங் கண்டுகொள்ளும் பொழுது, அங்கு ஒரு சதி திட்டம் உருவாகியுள்ளது என்ற சந்தேகம் அவளுக்கு எழுகிறது.
வழிபாட்டுக் குழுவின் செல்வாக்கு அந்த பகுதியில் வளர்ந்து வந்தபோதிலும், அந்த புனித பெண்ணின் முகம் மறைக்கப்பட்டே இருக்கிறது. இது சிங்-ற்கு ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனை ஜுக்கே யூ மறைமுகமாக விசாரணை செய்ய, இக்குழு யோங் தேசத்தில் இருந்து வந்திருப்பதும், இந்த சிமெங் தேசத்தில் அவர்கள் ஊடுருவ இந்த முறையை ஒரு கருவியாக பயன்படுத்துவதும் ஜுக்கே யூ-கு தெரியவருகின்றது.
அந்த நேரத்தில் யான் தேசத்தில் இருந்து யான் சூன் தன் ராணியுடன் ஒரு கூட்டணியை உருவாக்கும் போர்வையில் சிமெங் தேசம் வந்து சேருகிறான். அங்கு யான் தேசம் சார்பாக சிங்-கையும் ஜுக்கே யூ-வையும் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி, சிங்குக்கு ஆடம்பரமான பரிசுப் பொருட்களை அளிக்கிறான். பிறகு அவனும் சிங்-ம் தனிப்பட்ட உரையாடலில் இருக்கும் போது, சிங் அவனிடம் யான் தேசம் குறித்த சந்தேகங்களை கேட்கிறாள். தேசத்தின் வளர்ச்சி பற்றியும், அதன் இழப்புகள் பற்றியும், மக்களின் நிலை பற்றியும், யான் சூன்-னிடம் விவாதிக்கிறாள். யான் சூன் இப்போது மாறிவிட்டதாக கூறினாலும் கூட அவனது கவனம் தன் மீது இருப்பதை அறிந்த சிங் ஒரு காலத்தில் தான் யான் தேசத்தை தன் வீடாக கருதியதாகவும், ஆனால் இப்பொழுது அவளுக்காக நேரத்தை அவன் வீணடிக்காமல் தன் மக்களுக்கு ஒரு நல்ல ஆட்சியாளராக இருப்பதில் கவனம் செலுத்துமாறு அவனுக்கு சிங் நினைவூட்டுகிறாள். ஆனால் உண்மையில் சிங் மற்றும் ஜுக்கே யூ-விற்குத் தெரியாதது யான் சூன்-னின் உண்மையான நோக்கம் சிமெங் தேசத்தில் உள்ள ‘கருப்புத் தங்க சுரங்கம்’ தான்.
யான் சூன் இங்கு அரண்மனையில் இவர்கள் இருவருடன் பேச்சு வார்த்தையில் இருக்க, அங்கு அவனுடன் வந்த ராணி ஹெலியன் லிங்-ம் தளபதி செங்-ம் சேர்ந்து கருப்பு தங்க சுரங்கம் இருக்கும் இடத்தை சென்றடைவதற்கான வழிகளை விசாரித்து அறிந்து, அதனை ஒரு வரைபடமாக தயாரித்து யான் சூன்-னிடம் அளிக்கிறார்கள். சிமெங் தேசம் கவனச் சிதறலில் இருக்கும் போது, அப்பகுதிக்குள் ஊடுருவி சுரங்கங்களை கைப்பற்றுமாறு யான் சூன் அவனது 2000 பிளாக் ஈகிள் வீரர்களுக்கு உத்தரவிடுகிறான்.
இந்த நிலையில் ‘புனித கன்னி’யைக் காண்பதற்காக முகமற்ற தெய்வத்தை பின்பற்றுபவர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் வெடி விபத்து நிகழ்கிறது. அந்த சிறு கூட்டத்தில் எல்லோரும் கொல்லப்பட்டாலும் ஒரு பெண் மட்டும் உயிர் தப்பிக்கிறாள். அவளிடம் ஜுக்கே யூ விசாரணை செய்யும்போது, அவள் அது போலியான நம்பிக்கையாளர்களை வடிகட்டுவதற்காக நடந்தது என்றும், அது ஒரு ‘தெய்வீக தண்டனை’ என்றும் அவனிடம் பிதற்றுகிறாள். மேலும் தன்னை தெய்வம் தேர்ந்தெடுத்ததாகவும் அவள் கூறுகிறாள். ஆனால் மற்ற விவரங்களை அளிக்க அந்த பெண் மறுப்பதால் அவளிடம் சந்தேகம் கொண்ட ஜூக்கே யூ அந்த விபத்தில் தப்பி பிழைத்தவளை ரகசியமாக கண்காணிக்க தன் காவலர்களுக்கு உத்தரவிடுகிறான். அந்த பெண்ணைப் பற்றிய செய்திகள் சிங்-கிடம் வந்து சேர்கின்றன.
இந்நிலையில் சிமெங் மற்றும் யான் தேசத்தின் எல்லைப் பகுதிகளில் நடக்கும் விஷயங்கள் ஜுக்கே -வின் பார்வையில் வந்து சேர்கின்றன. அதனால் ஜுக்கே யூ யான் சூன்-ஐக் காண்பதற்காக அவன் இருப்பிடத்திற்கு செல்கிறான். அங்கு யான் சூன் அவன் வருகையை ஏற்கனவே எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல காத்துக்கொண் இருப்பதை ஜுக்கே யூ அறிகிறான்.
அத்தியாயம் 31 – இன் சுருக்கம்
.