.
யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி.
ஜாவோ சுன்’எர் – யோங் தேசத்து முன்னாள் இளவரசி. பியாண்டாங் தேசத்தின் முந்தய கொலைசெய்யப்பட்ட இளவரசனான லீயான்-ன் மனைவி. வயிற்றில் குழந்தையுடன் தன் தாய் தேசத்துக்கே அடைக்கலம் தேடி வந்தவள். இப்போது 13வது இளவரசனின் கட்டுப்பாட்டில் இருப்பவள்.
ஜுக்கே முகிங் – கிங்ஷான் குறுநிலத்தின் அதிபதி. ஜுக்கே குலத்தின் மூத்தவர். ஜுக்கே யூ-ன் குரு மற்றும் அவனது தாத்தா.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ராணுவத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து எல்லை பகுதிகளில் போர்களில் ஈடுபட்டாலும், தந்தை அதாவது அரசனால் அன்பு மறுக்கப்படுபவன். பெண் தளபதி ஹுவான்-ஆல் ஈர்க்கப்படுகிறான்.
ஸாவோ யாங் – யோங் பேரரசின் பதின்மூன்றாவது இளவரசன். இரக்கமற்ற கொடூரன். மன்னனான தந்தைக்கு மிக பிரியமான மகன்.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் மனதளவில் அவனால் ஒதுக்கப்படுபவள். தளபதி செங்-ஆல் விரும்பப்படுபவள்.
.
Rebirth அத்தியாயம் 34 – சுருக்கம்
யான் சூன்-னின் அக்கறையான கவனிப்பின் கீழ் சிங் குணமாக தொடங்குகிறாள். சிமெங் மற்றும் யோங் நாடுகளின் எல்லைக்கு அருகே அவர்கள் குதிரைகளில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு முக்கிய போர் அரனாக திகழும் சின் நகரை நோக்கி அவர்கள் பயணம் தொடங்குகிறது. யான் சூன்-னிடம் சிங் ‘அவன் கூறியது போல ஜுக்கே-விற்கு முடிக்க வேண்டிய தனிப்பட்ட வேலைகள் இருக்கும் என்றும், அதேபோல தனக்கும் தனது மக்களின் விடுதைலையான வாழ்வுக்காக இந்த சிமெங் தேசத்தையும் இந்த மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது என்றும் கூறுகிறாள். அப்போது யான் சூன் எதிரி படைகளின் தளவாடங்களை அழித்து, அங்கிருக்கும் யோங் தேசப்படைகளை பின்வாங்க செய்யும் நோக்கில், எல்லையோரம் தீ மூட்டும் ஒரு திட்டத்தை முன் எடுத்து வைக்கிறான். ஆனால் அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய அத்தகைய போர் யுக்தியை சிங் ஏற்க மறுத்து விடுகிறாள்.
இருவரும் விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, அங்கு யான் தேசத்து தளபதி யோ ஹுவான் வந்து, யான் சூன்-னிடம் யான் தேசத்தில் நடக்கும் கலவரங்களைப் பற்றி எடுத்துக் கூறி, கலவரத்திற்கு காரணமான பழங்குடியின தலைவன் இன்னொருவனுடன் இணைந்து ரகசியமாக சதியில் ஈடுபட்டு, பத்தாயிரம் வீரர்களுக்கு ஈடாக இரண்டு மாவட்டங்களை மாற்றிக் கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறாள். ஏற்கனவே படைவீரர்கள் பற்றாக்குறையில் இருப்பதால் ஏற்பட்ட இந்த நெருக்கடி குறித்து யான் சூன் தனது தளபதி ஹுவானுடன் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில், தான் உட்கொண்ட பழத்தின் காரணமாக சிங் தன் சுய நினைவை இழந்து மயங்கி சரிகிறாள்.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த யான் சூன்-னிடம் யான் சூன் இழந்த மாவட்டங்கள், கருப்பு தங்க சுரங்குகளின் ஒரு பகுதி மற்றும் இந்த அனைத்து போர்களின் நிறுத்தம் ஆகியவற்றிற்கு ஈடாக யோங் தேசம் எதிர்பார்ப்பது சிங் ஒருத்தி தான் என்றும் அந்த ஒப்பந்தத்தை தன் நாட்டு மக்களுக்காக தான் ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் கூறியவள், மேலும் யோங் தேசத்தின் பேரரசன், அவன் மகன் 13வது இளவரசன் மற்றும் இளவரசி ஜாவோ சுன்’எர் ஆகிய அனைவரும் சிங்-கையே விரும்புவதாக யான் சூன்-னிடம் வாதிடுகிறாள். இதனால் கடும் சீற்றத்திற்கு உள்ளான யான் சூன்-ன் கழுத்தில் தனது வாளை வைத்த தளபதி ஹுவான் யான் தேசத்தின் மக்களுக்காக யான் சூன் ஆற்ற வேண்டிய கடமைகளையும், முன்னாள் மன்னனான அவனின் தந்தையின் எண்ணத்தையும் அவனுக்கு நினைவூட்டுகிறாள். இறுதியில் யான் சூன் தன் தளபதி ஹுவான் சொல்வதைக் கேட்க முடிவு செய்து, இந்த பரிமாற்றத்தைப் பயன்படுத்தி, அதாவது சிங்-ஐ அவர்களிடம் ஒப்படைத்து எதிரிகளை பின்வாங்க செய்துவிட்டு, பின்னர் ஏதேனும் ஒரு வழியில் சிங்-ஐக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தனக்கு தானே நியாயம் கற்பித்துக்கொண்டு அதற்கு சம்மதிக்கிறான்.
இதற்கிடையில் தனது தாத்தாவான ஜுக்கே முகிங்-ன் ஈமச்சடங்கு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஜுக்கே யு மீண்டும் கிங்ஷான் மன்றத்திற்குத் திரும்புகிறான். அங்கு தாத்தாவின் சவப்பெட்டி காலியாக இருப்பதை கண்டு யோசிக்கும்போதே, அவனது தாத்தா உயிருடன் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைகிறான். ஜுக்கே யூ-வை மீண்டும் தலைநகருக்கு வரவழைக்கும் பொருட்டே தான் இறந்தது போல நடித்ததாக அவர் கூறுகிறார். இது அவனை கோபப்படுத்த, இருவருக்கும் வாக்குவாதங்கள் நிகழ்கின்றன. தன் கிங்ஷான் மன்றத்தின் அதிகாரங்கள் மற்றவர்களின் கைகளுக்கு சென்று விடக்கூடாது, இது என்றும் தன்னுடைய குடும்ப வாரிசுக்கே வரவேண்டும் என்ற காரணத்திற்காகவும், பேரரசரின் கட்டளையான சிங்-ஐ எந்த வழியிலாவது நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற உத்தரவின் படியும் தான் சிமெங் தேசத்திற்கு ஜுக்கே யூ-வைத் தேடி வந்ததாகவும், அவன் தன்னுடன் வர மறுத்ததால் தான் இந்த ஏமாற்றுப் பாதையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டி இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவர் எழுந்து நிற்பதைக் கண்டு, ஜுக்கே யூ அதிர்ச்சி அடைகிறான். முன்பு தன்னை முடமாக்கி அமர வைத்த விஷத்திற்கு அந்த முதியவர் ஒரு மாற்றம் மருந்தை கண்டுபிடித்திருந்ததால் தனது ஊனம் சரியாகிவிட்டது என்று ஜுக்கே யூ தெரிவிக்கிறார். ஜுக்கே யூ-வின் மென்மையான இதயத்தையும், அவனது தொடர்ச்சியான தோல்விகளையும் பற்றிக் கூறி, அவனது தாத்தா கேலி செய்ததால் இருவருக்கும் அங்கு கடுமையான போராட்டம் ஆரம்பிக்கிறது. விரக்தியின் உச்சத்தில் ஜுக்கே யூ தனது வாளை வீசும் போது அது அவனது தாத்தாவை காயப்படுத்துகிறது. இறக்கும் தருவாயில் இருந்த ஜுக்கே முகிங் தன்னைக் கொன்றதற்காக ஜுக்கே யூ-விற்கு நன்றி கூறி, அவனின் இந்த பாவத்திற்கு அவன் செய்யும் பிராயச்சித்தமாக ஜுக்கே யூ-வின் இதயம் இனி என்றும் கிங்ஷான் அரசவையுடன் இணைக்கப்பட்டே இருக்கும் என்றும் கூறி இறந்து விடுகிறார்.
பெரும் துயரத்தில் மூழ்கி இருந்த ஜுக்கே யூ தலைநகர காடுகளின் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது, அந்த காட்டினுள் ரகசியமாக நுழைந்த ஏழாம் இளவரசன் ஜாவோ சே-வை சந்திக்கிறான். அப்போது முன்னர் நடந்த நிகழ்வுகளை இளவரசன் ஸாவோ சே அவனுக்குத் தெரிவிக்கிறான். யான் தேசத்துடன் தான் ரகசிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக பெரும் பழி சுமத்தப்பட்டு, தனது முக்கிய படைத்தளபதிகள், துணைப்படை தளபதிகள் என்று 25 முக்கிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும், உதவியற்ற நிலையில் தான் அந்த கொடுமையை மறைவில் நின்று பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் வருந்துகிறான். தான் இதுவரை எந்த நிலைக்கும் ஆசைப்படவில்லை என்றும், யார் ஆட்சிக்கு வந்தாலும் தான் அவர்களுக்கு கீழ்படிந்தே நடக்க எண்ணி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் என்னை அதை செய்ய அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் கூறி, அதனால் தான் கிளர்ச்சியில் ஈடுபட இவ்விதம் ரகசிய ஊடுருவலில் வருவதாக கோபத்துடன் கூறுகிறான். மேலும்ஜுக்கே யூ-வும் பேரரசனாலும், 13வது இளவரசனாலும் பாதிக்கப்பட்டு இருப்பதால், தாங்கள் இருவரும் மீள முடியாத ஒரு நிலையை அடைந்து விட்டதாக கூறி, தன் கிளர்ச்சியில் தன்னுடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு ஜுக்கே யூ-வை வலியுறுத்துகிறான் இளவரசன் ஸாவோ சே. இது ஜுக்கே யூ-வை யோசிக்க வைக்கிறது.
யான் தேசத்தில் ராணி ஹெலியன் லிங் தளபதி செங்-ஐ அழைத்துக்கொண்டு யாரும் இல்லா தனிமையான இடத்திற்கு செல்கிறாள். அங்கு அவள் யான் தேசத்திற்கு உள்ள சிக்கல்களை யான் சூன்-னின் ராணியின் நிலையில் இருந்து எடுத்துரைக்கிறாள். பின் இதுவரை தான் எப்போதும் மற்றவர்களிடம் தனக்கான அங்கீகாரத்திற்கே ஓடிக்கொண்டிருந்ததாகவும், தளபதி சென்-ஐ சந்தித்ததில் இருந்து மற்றவர்களை போல தனக்கும் வாழ விருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிவிட்டு, இனி தான் தனக்கான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், லாப நட்டங்களைப்பற்றிய கணக்கீடு இல்லாமல் அமைதியான, சுதந்திரமான வாழ்வை, தன்னைப் பற்றி யாருக்கும் தெரியாத இடத்தில் அமைத்துக்கொள்ள விரும்புவதாகவும் தளபதி செங்-ஐப் பார்த்துக் கூறி, அவனின் பதிலுக்காக அவன் முகத்தைப் பார்க்க, அங்கு பெரும் தயக்கமே தெரிந்தது. அதிலேயே அவளுக்கு யான் தேசத்திடமும், யான் தேச மன்னனிடமும் தளபதி செங்-ன் விசுவாசமும், மதிப்பும் மிக மிக உயர்வானது என்றும், எந்த காரணத்திற்காகவும் அவன் மன்னனுக்கோ அல்லது நாட்டுக்கோ துரோகம் செய்ய மாட்டான் என்றும் அவனது விதியும், வாழ்வும் யான் தேசத்திற்கு சொந்தமானது என்றும் அந்த தயக்கத்தில் உணர்ந்து கொண்ட ராணி அந்த இடத்தில் இருந்து அவனைத் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுகிறாள். மனதில் எண்ணம் இருந்தும் ஏதும் செய்ய இயலா நிலையில் அங்கேயே நின்றுவிடுகிறான் தளபதி செங்.
இங்கு தளபதி ஹுவான், யான் சூன்-னையும் கைதியாகப் பிடிக்கப்பட்ட சிங்-ஐயும் இளவரசர் ஜாவோ யாங்-கிடம் அழைத்துச் செல்கிறாள். தளபதி ஹுவான், யான் சூன் இருவரும் 13வது இளவரசனின் அரசவையில் வந்து நிற்க, இளவரசனோ இளவரசி ஜாவோ சுன்’எர் மீதான தனது மோகத்தால் மதி இழந்து, யான் தேசத்துடன் முன்பு பேசிய பேச்சுவார்த்தை ஆவணங்களைக் கூட வாசிக்காமல் இருவரையும் அலைக்கழிக்கிறான். அப்போது அங்கு வருகிறாள் ஜாவோ சுன்’எர். அங்கு நடக்கும் பேச்சுவார்த்தையில் ஜாவோ சுன்’எர் கருப்புத் தங்கச் சுரங்கங்களின் எந்தவொரு பகுதியையும் யான் தேசத்துடன் பகிர்ந்துகொள்ள அனுமதிக்க இயலாது என்று மறுக்கிறாள். வேறு வழியின்றி தன் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, போர்நிறுத்த ஒப்பந்தம் பத்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், அந்தச் சுரங்கங்களைக் கைவிடத் தளபதி ஹுவான் ஒப்புக் கொள்கிறாள்.
அன்று நள்ளிரவில், சிங்-ஐக் காப்பாற்றும் நோக்கில் அவள் அறைக்கு வர, அவள் அங்கு இல்லை. சிங் ஏற்கனவே இளவரசி சுன்’எரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும், யான் சூன் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது என்றும் தளபதி ஹுவான் அவனிடம் கூற, யான் சூன் கோவம் கொள்கிறான்.
சிறையில் ஒரு இருந்த அறையில் உடல் பலவீன நிலையில் இருந்த சிங் அழைத்துவரப்பட, ஜாவோ சுன்’எர் அவளை எதிர்கொள்கிறாள். யான் தேசத்தால் அவள் கைவிடப்பட்டதற்காக அவளை ஏளனம் செய்ததோடு, ஒரு காலத்தில் வலிமைமிக்க தளபதியாகத் திகழ்ந்தவள் இன்று ஒரு கையறு நிலையில் உள்ள கைதியாகச் சுருங்கிப்போயிருப்பதைக் கண்டு அவள் இன்பமும் கொள்கிறாள். அந்த நேரம் அங்கு யாரோ வர அனுமதி கேட்கிறார்கள்.
அத்தியாயம் 35 – இன் சுருக்கம்
.