.
ஹெலியன் லிங் – ஹெலியன் பழங்குடியைச் சேர்ந்த பெண். யான் சூன்-ஐ தந்திரமாக மணந்து கொண்டாலும் மனதளவில் அவனால் ஒதுக்கப்படுபவள். தளபதி செங்-ஆல் விரும்பப்படுபவள்.
செங் யுவான் – யான் தேசத்தின் யான் சூன்-ன் படைத்தளபதி. யான் தேசத்தின் மீதும், தலைவன் யான் சூன்-னின் மீதும் மிகுந்த அன்பு கொண்ட தளபதி. ஆனாலும் யான் சூன் ராணி ஹெலியன் லிங்-ன் மீது ஆரம்பம் முதலே பரிவு கொண்டவன்.
யான் சூன் – யான் தேசத்தின் தலைவன். சிறுவயதில் யோங் பேரரசின் தலைநகரில் பணயக்கைதியாக இருந்த போது, ஜுக்கே யூ-வின் நண்பன். பின்னர் எதிரி.
ஸாவோ சே – யோங் பேரரசின் ஏழாவது இளவரசன். ஜுக்கே யூ-வுடன் கைகோர்த்து மன்னனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து தானே பட்டத்து இளவரசனாகிறான். பெண் தளபதி ஹுவான்-ஆல் ஈர்க்கப்படுகிறான்.
ஸிங் லே – யோங் பேரரசின் வெளிப்புற இராணுவ பலத்தில் பாதியளவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதி.
மு ஷென் – யோங் தேசத்தின் முக்கிய அதிகாரத்தில் இருக்கும் தலைமைகளில் ஒருவன். இளவரசன் ஸாவோ சே-க்கு ஆதரவு அளிப்பவன்.
யோ ஹுவான் – யான் பேரரசில் மிகவும் பலம் வாய்ந்த பழங்குடியின படையின் பெண் தளபதி. யான் தேசத்தின் மிகவும் விசுவாசம் மிக்க வம்சத்தின் பெண். யான் தேச மன்னன் யான் சூன்-னின் படைத்தலைவி. ஏழாவது இளவரசனை விரும்புகிறவள்.
.
Rebirth அத்தியாயம் 36 – சுருக்கம்
தப்பிச்சென்ற யான் சூன் தன்னுடன் சிங்-ஐ அழைத்துக் கொண்டு பல வருடங்களுக்கு முன்னால் தான் பனைய கைதியாக தங்கி இருந்த ஒரு இடிந்த கிராமப்புற வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அந்த இடிபாடுகளுக்கு இடையில் தான் மறைத்து வைத்த, தன் பாட்டி தன் தாயாருக்கு விட்டு சென்ற ஒரு மதிப்பு மிக்க பதக்கத்தை யான் சூன் இப்பொழுது கண்டெடுக்கிறான். அப்போதே அந்த பதக்கத்தை அவளிடம் தான் கொடுக்க நினைத்ததாகவும், ஆனால் அவளது மனம் தெரியாமல் தயங்கி விட்டதாகவும் அவளிடம் கூறிவிட்டு, கடந்த காலத்தை மறந்து விட்டு தன்னுடன் இணைந்து இனி ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கும்படி அவளிடம் அந்த பதக்கத்தை அளித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். ஆனால் எப்பொழுதும் போல இந்த முறையும் சிங் அவனது காதலை நிராகரித்து விடுகிறாள்.
இதற்கிடையில் ஒருவருக்கொருவர் மனதிற்குள் ஆழமாக நேசிக்கும் தளபதி செங்-ம் ஹெலியன் லிங்-ம் ஒரு பரபரப்பான நகரத்திற்குள் நுழைந்து ஒரு தேநீர் கடையில் உணவு அருந்தியவாறு உரையாடுகிறார்கள். முன்னர் தயங்கிய தளபதி சிங் இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்து அவளிடம் அவள் கூறியபடி எங்கேயும் சென்று ஒரு அமைதியான வாழ்க்கையை வாழலாம் என்று தன்னை ஒப்புக் கொடுக்கிறான். அப்போது அவர்களின் அருகில் இருந்த பயணிகள் நாட்டில் நடக்கும் மோசமான சூழ்நிலைகளை பற்றி விவாதிப்பதை அவர்கள் கேட்க நேரிடுகிறது. அவர்கள் பியாண்டாங் தேசத்தின் தூதுவர் கொல்லப்பட்டதாகவும், யான் சூன் மற்றும் சிங் யோங் தேசத்தில் சிறை இருப்பதாகவும் பேசி கொள்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்து தளபதி செங் மன்னர் இல்லாமல் யான் தேசம் குழப்பத்தில் மூழ்கும் அபாயத்தில் இருப்பதை உணர்ந்து, யான் சூன்-ஐ காப்பாற்ற தான் செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்கிறான். தளபதி செங்-கிற்கு யான் தேசமும், மன்னனும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இருந்த ஹெலியன் லிங் அவனுக்கான பயணப் பொருட்களை தயார் செய்து, அவன் திரும்ப பத்திரமாக தன்னிடமே வந்து சேர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவனை அனுப்பி வைக்கிறாள்.
யோங் தேசத்தில் முகமற்ற கடவுளை மையமாகக் கொண்ட ஒரு மர்மமான வழிபாட்டு குழு அங்கு அதிகாரத்திற்கு வருகிறது. முதன்மைப் புனிதப் பெண் மக்கள் கூட்டத்தில் இனி நடக்க இருக்கும் மூன்று விஷயங்களை அறிவிக்கிறாள். உலகின் கலங்கத்தை போக்கும் வகையில் மரணத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட வேண்டிய நான்கு பாவம் செய்த நபர்கள் பற்றியது முதல் தீர்க்கதரிசனம். அது மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. தெய்வத்தின் பெயரால் நடப்பதால் இதனை மக்கள் எதிர்க்க பயம் கொள்கின்றனர். 13வது இளவரசனுக்கு ஆதரவு தெரிவித்த முகில், வெய் குடும்பங்களின் தலைவர்கள் மற்றும் பேரரசருக்கு ஆதரவாக செயல்பட்ட தளபதி மெங் இவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு, மக்கள் முன்னிலையில் விபத்தாக சித்தரிக்கப்படுகிறது.
இவற்றைக் கண்ட யான் சூன் மற்றும் சிங் அரசியல் எதிரிகளை ஒழித்து கட்டவே பட்டத்து இளவரசன் ஸாவோ சே இந்த சமய குழுவை பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை உணர்ந்து கொள்கின்றனர். மேலும் நான்கு நபர்களின் இறுதி இலக்கு யோங் பேரரசின் வெளிப்புற இராணுவ பலத்தில் பாதியளவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதி ஸிங் லே என்றும் புரிந்துகொள்கின்றனர். அதனால் சிங் நான்காவது இலக்கைக் காப்பாற்ற புறப்படும் பொழுது யான் சூன் அதை தடுக்கிறான். யோங் பேரரசில் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால் யான் தேசத்திற்கு அது நல்லது தான் என்று அவன் கூற சிங் மறுத்து, பட்டத்து இளவரசனுக்கு எதிரான முக்கிய நபர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அவன் தனது அதிகாரத்தை ஒருங்கிணைத்துக் கொண்டால், அதற்குப் பின் தவிர்க்க முடியாமல் அவன் சிமெங் மற்றும் யான் தேசத்தின் மீது படை எடுப்பான் என்று வாதிட்டு, அதை தடுக்க நான்காவது இலக்கை காப்பாற்றுமாறு கூறி, சிங் யான் சூன்-ஐத் தன் கருத்துக்கு இணங்க வைக்கிறாள்.
இரவில் ராணுவ அதிகார பரிமாற்றம் குறித்து முக்கிய அதிகாரியான மு ஷென்-னிடம் விவாதித்து விட்டு ஜுக்கே யூ வெளிவரும் பொழுது, சிங் அவனைப் பின் தொடர்கிறாள். அதை உணர்த்துக்கொண்ட ஜுக்கே யூ தனது முந்தைய இரக்க குணம் கொண்ட சுயரூபம் இறந்து விட்டதாக கூறி அவளை அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை செய்கிறான். அப்போது ஜுக்கே யூ-வைத் தொடர்ந்ததால் சிங்கைப் பற்றி தெரிய வந்த மு ஷென்-னின் காவலர்கள் அவளை கொல்ல வரும்போது அவளை ஜுக்கே யு காப்பாற்றுவதற்கு முன்னால் யான் தேசத்து பெண் தளபதி ஹுவான் வந்து சிங்-கைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறாள். செல்லும்போது மூ சென்-னையும் பனையமாக கடத்திச் வருகிறாள். அதைத்தொடர்ந்து யான் சூன், சிங், தளபதி ஹுவான் மூவரும் சேர்ந்து தளபதி ஸிங் லே மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியில் இருந்து அவரை காப்பாற்றி, சிறை பிடித்த வஞ்சகனான மூ சென்-ஐயும் அவரிடம் ஒப்படைக்கின்றனர். இதன் காரணமாக தளபதி ஸிங் லே உடன் அவர்களுக்கு ஒரு நல்லுறவு ஏற்படுகிறது.
தன் திட்டத்திற்கு எதிரான இந்த நிகழ்வுபட்டத்து இளவரசனின் கவனத்திற்கு வந்து அவனை கோபம் கொள்ள செய்கிறது. இதனால் இளவரசனுக்கும் ஜுக்கே யூ-விற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்படுகிறது. பின்னர் பட்டத்து இளவரசன் முகமறியாத தெய்வத்தின் முதன்மை புனித பெண் ஜியோ மெங்-குடன் உரையாடுகிறான். அவள் தனது இரண்டாவது தீர்க்கதரிசனத்தை உரைக்கிறாள். ஒரு வெள்ளம் பாவ பூமியை தூய்மைப்படுத்தும். இது சிமெங் தேசத்தில் இப்போது பெய்து கொண்டிருக்கும் கான மழையுடன் ஒத்துப் போகிறது. பட்டத்து இளவரசன் ஜாவோ சே சிமெங் பகுதியை ஆக்கிரமித்து, அதன் மதிப்பு மிக்க கருப்பு தங்க சுரங்கங்களை கைப்பற்றுவதற்கு இது ஒரு தெய்வீக வாய்ப்பை அளிக்கிறது.
இந்த நிகழ்வும், நகருக்குள் படைகளின் நகர்வும் சிங்-ன் கவனத்திற்கு வர, சிங், யான் சூன், தளபதி ஹுவான் மற்றும் யோங் தேசத்து தளபதி ஸிங் லே ஆகிய நால்வரும் கலந்துரையாடுகிறார்கள். சிமெங் தேசத்தைப் பாதுகாக்கவும், வரவிருக்கும் போருக்கு தயாராகவும் யான் சூன் தனது படைகளை திரட்டுவதற்காக உடனடியாக யான் தேசத்திற்கு திரும்ப முடிவு செய்கிறான். தன்னுயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி கடனாக அந்த நகரில் இருந்து தப்பி செல்வதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தனக்கு கீழ் இயங்கும் தனது விசுவாசம் மிக்க படைகளை வழிநடத்த உதவும் ஒரு ஆணை முத்திரையை தளபதி ஸிங் லே யான் சூன்-னிடம் அளிக்கிறான்.
இதன் பிறகு மக்கள் கூட்டத்தின் இடையே முகம் தெரியா தெய்வத்தின் முதன்மை பணிப்பெண் ஜியா மெங் தனது மூன்றாவது தீர்க்கதரிசனத்தை உரைக்கிறாள். அதாவது முன்பு தெய்வத்தின் கட்டளையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 13வது இளவரசன் தெய்வத்திற்கு செய்த அபவாதம் காரணமாக உயிரிழந்து விட்டான் என்றும், அதனால் மீண்டும் முகம் தெரியா தெய்வத்தால் அடுத்து ஒருவர் இந்த உலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறுகிறாள்.
இதற்கிடையில் யான் சூன் நகரத்திற்கு வெளியே சென்று விட முயன்று கொண்டிருக்கும்போது, ஜுக்கே யூ மற்றும் அவனின் ஒற்றர்களால் திடீர் தாக்குதலுக்கு உள்ளாகிறான். அங்கு நடக்கும் கலவரத்தில் ஜுக்கே யூ-வின் ஒரு அம்பு யான் சூன்-நின் காலில் காயத்தை ஏற்படுத்துகிறது. திகைத்து நிற்கும் யான் தேச மன்னனை சரியாக அங்கு வந்த தளபதி செங் காப்பாற்றி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று காயத்திற்கு சிகிச்சை செய்கிறான். தனது காயத்தின் காரணமாக அங்கிருந்து தப்பித்து செல்வது கடினம் என்பதை உணர்ந்த யான் சூன் அவனிடம் தனது கருங்கழுகு படையின் அதிகார முத்திரையைப் பெற்றுக்கொண்டு யான் தேசம் சென்று படைகளை சிமெங் தேசம் நோக்கி அழைத்துச் செல்லும் படி கூறுகிறான். மேலும் சிமெங் வீழ்ந்தால் அடுத்து யான் தேசம் என்பதால் இதனை செய்யவேண்டியது அவசியம் என்றும் கூறுகிறான். என்ன கூறியும் செங் தன் மன்னனை அங்கு தனியாக விட்டுச் செல்ல தயங்கவே, மன்னன் செங்-யிடம் அவன் ஹெலியன் லிங்-ஐ விரும்புவது ஏற்கனவே தெரியும் என்றும், போரில் வெற்றி கிடைத்ததும், செங் யுவான் மற்றும் ஹெலியன் லிங் ஆகியோரின் திருமணத்தை முறைப்படி நடத்தி வைப்பதாக அவன் உறுதியளிக்கிறான்.
இதற்கிடையில் ஜுக்கே யூ தனது படைகளுடன் யான் சூன்-ஐத் தேடி மிக அருகில் வந்துவிடவே தளபதி செங்-கை அங்கிருந்து விரைவில் அனுப்பிவிட யான் சூன் அவசரம் காட்ட, வேறு வழியின்றி யான் சூன்-ஐ அவர்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு அவனை மயக்கம் அடைய செய்துவிட்டு, துரத்தி வருபவர்களைத் திசை திருப்பும் நோக்கில் யான் சூன்-னின் ஆடையை தான் அணிந்து கொண்டு மாறுவேடமிட்டு அங்கிருந்து தப்பி செல்கிறான். மிக விரைவாக பாய்ந்து செல்பவனை யான் சூன் என்று எண்ணி தங்கள் கவனத்தை தளபதி செங்-கை நோக்கித் திருப்பி அவனைப் பின் தொடர்கின்றனர். தப்பிச்செல்லும் அவனை யான் சூன் என்று எண்ணி பட்டத்து இளவரசன் தன் அம்பை எய்து வீழ்த்த, மற்றவர்களின் அம்புகளும் அவன் உடலை துளைக்கிறது. இறந்துவிட்ட அவன் யான் சூன் அல்ல என்று தெரிந்து மேலும் காட்டில் தேடுவதற்கு இளவரசன் கட்டளையிட, அதனை ஜுக்கே யூ மறுக்கிறான். தான் அவனின் காலில் இரண்டு இடங்களில் அம்பைததாகவும் அவனால் தப்பித்துச் சென்றிருக்க முடியாது என்றும், உயரமான மலை உச்சியில் இருந்து கண்டிப்பாக கீழே விழுந்து சிதறி இருப்பான் என்றும் கூறி இளவரசனின் கவனத்தை திசை திருப்புகிறான்.
மறைவிடத்தில் மயங்கி இருந்த யான் சூன் கண்விழித்து எழுந்து வர, அங்கு சிதறி இருந்த ரத்தச் சிதறல்களையும், தளபதி செங் யுவானின் வாளையும் கண்டபோது தான் தனது மிகவும் விசுவாசமான தோழனை இழந்து விட்டதை உணர்ந்து கொள்கிறான். அந்த துயரத்தில் அவன் நிலை குலைந்து இருக்கும் பொழுது, தளபதி செங்-கின் குதிரையில் அவன் மன்னனுக்கு விட்டுச் சென்ற குறிப்பு இருக்கிறது. அதில் அந்தக் குதிரைக்கு யான் தேசத்திற்கு செல்லும் வழி தெரியும் என்றும், அது அவனை அங்கு கொண்டு சேர்த்து விடும் என்ற விவரமும், ஹெலியன் லிங்-ஐப் பார்த்துக் கொள்ளுமாறு ஒரு வேண்டுகோளும் இருக்கிறது. அதைக் கண்ட யான் சூன் ஒரு உறுதியுடன் தனது யான் தேசம் நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறான்.
அத்தியாயம் 37 – இன் சுருக்கம்
.